•தலைவர்களின் தலையில் இடி விழாதா?
யாழ்ப்பாணத்தில் கடன் தொல்லையால் கணவர் 3 மாதங்களுக்கு முன்னர் தற்கொலை செய்திருந்தார்.
இன்று அவரது மனைவியும் மூன்று பிள்ளைகளும் கடன் தொல்லையால் வாழ முடியாமல் தற்கொலை செய்துள்ளனர்.
“எல்லாம் விதி. விதியை மாற்ற யாரால் முடியும்”என்று சிம்பிளாக கூறிக்கொண்டு மத தலைவர்கள் கடந்து செல்கின்றார்கள்.
மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் தனக்கு அதிகாரம் போதாது என்று அறிக்கைவிட்டுக்கொண்டிருக்கிறார்.
தீபாவளிக்கு தீர்வு வந்ததும் எல்லா பிரச்சனையும் தீர்ந்துவிடும் என்று சம்பந்தர் அய்யா கூறிக்கொண்டிருக்கிறார்.
தீபாவளி ஒவ்வொரு வருடமும் வந்து போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் சம்பந்தர் அய்யா கூறும் தீர்வுதான் இன்னும் வந்தபாடில்லை.
“ஜனாதிபதி கருணையுடன் தமிழர்களிடம் பேசுகிறார் எனவே இது நல்லாட்சி” என்று சுமந்திரன் கூறிக்கொண்டிருக்கிறார்.
ஆனால் ஜனாதிபதியோ “எனக்கு தொந்தரவு கொடுக்காதீர்கள். அப்புறம் மீண்டும் பேய்கள் ஆட்சி வந்துவிடும்” என்று மிரட்டுகிறார்.
வாழ முடியாமல் பெற்றவர்களே தம் குழந்தைகளைக் கொல்லும் இந்த நாட்டில்தான் ஜனாதிபதி பயணம் செய்ய 16 கோடி ரூபாவில் சொகுசு கார் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
குழந்தைகளே கொல்லப்படும் அவல இனத்தின் தலைவருக்கு இரண்டாவது சொகுசு மாளிகைக்கு பெயிண்ட் அடிக்க 4 கோடி ரூபா ஒதுக்கும் அதிசயம் நடக்கிறது.
மாவை சேனாதிராசா கோடிக் கணக்கான ரூபாயில் கட்டும் இரண்டாவது வீடு உள்ள அதே யாழ்ப்பாணத்தில்தான் அவருக்கு வாக்கு போட்ட மக்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
வறுமையின் கொடுமையால் குழந்தைகள் கூட கொல்லப்படும் கொடுமை நடக்கிறது. ஆனால் நம்மவர்கள் வேள்வியில் கிடாய் வெட்ட தடை செய்யப்பட்டது குறித்து உரையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லையேல் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாடினான் கவிஞன் பாரதி.
இன்று பாரதி இருந்திருந்தால் வறுமையின் கொடுமையால் குழந்தைகள் கொல்லப்படுவதை அறிந்து இந்த தலைவர்களின் தலையில் இடி விழட்டும் என்று அறம் பாடியிருப்பான்.
No comments:
Post a Comment