Thursday, November 29, 2018

வேதனை தரும் வேதாரணியம் பற்றிய செய்திகள்!

•வேதனை தரும்
வேதாரணியம் பற்றிய செய்திகள்!
1983ல் மாதகல், வல்வெட்டிதுறை, குடத்தனை, நாகர்கோயில் என ஈழத்தில் எந்தக் கடற்கரையில் இருந்து புறப்பட்டாலும் எல்லா இயக்கத்தவர்களும் போய் சேரும் இடம் வேதாரணியம் கடற்கரையே.
எந்த நேரத்தில் போய் சேர்ந்தாலும் எந்த வீட்டுக் கதவையும் நம்பி தட்டலாம்.
வந்திருப்பது விடுதலைப் போராளிகள் என்று அறிந்ததும் அந்த நள்ளிரவு நேரத்திலும் எழுந்து வந்து அவர்கள் கேட்கும் முதல் வார்த்தை “சாப்பிட்டீர்களா” என்பதே.
அந்த இரவிலும் பனிக் குளிரிலும் எந்தவித சலிப்பும் இன்றி எங்ளை கூட்டிச் சென்று வேதாரணியம் கோயிலுக்கு அருகில் உள்ள திமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் விடுவார்கள்.
அவரும்கூட உடனே எழுந்து வந்து முதலில் எங்களுக்கு காப்பி போட்டு குடிக்க தருவார். அதன்பின்பு எங்களை அழைத்து சென்று வேதாரணியம் பஸ் நிலையத்தில் தானும் எங்களுடன் குந்தியிருந்து எங்களுக்குரிய பஸ் வந்ததும் அதில் ஏற்றி அனுப்பிவிட்டே அவர் வீடு செல்வார்.
வேதாரணியத்திற்கும் ஈழத்திற்கும் நீண்டநாள் தொடர்பு இருப்பதை அங்கு சென்ற பின்பே அறிந்துகொண்டேன்.
வேதாரணியம் கோயில் நிர்வாகம் இன்றும்கூட எனது கரவெட்டி கிராமத்தை சேர்ந்த குடும்பத்தினரிடமே இருக்கிறது.
இதனால் நாம் வேதாரணியத்தில் அவருடைய மடத்திலேயே தங்கி பயன்படுத்த முடிந்தது.
சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்தில் ஈழப் போராளிகள் வைத்த வெடி குண்டு வெடித்ததும் வேதாரணியத்தில் எமது இடத்தை சோதிக்க வந்த பொலிசார் அதிர்ந்து விட்டனர்.
ஏனெனில் ஈழத்திற்கு அனுப்புவதற்காக 100 பெட்டி டைனமற் வெடி மருந்தை நாங்கள் வைத்திருந்தோம்.
வெடிமருந்துகள் துப்பாக்கிகள் சகிதம் நாங்கள் திரிந்து கொண்டிரந்தாலும் அந்த மக்கள் ஒருபோதும் அச்சப்படவும் இல்லை. எங்களை ஒதுக்கவும் இல்லை.
எங்களுக்கு எப்போதும் அன்போடு உதவி வந்தனர். அவர்கள் செய்த உதவிகள் மறக்க முடியாதவை.
இன்று அந்த மக்கள் புயலால் பாதிக்கப்பட்டிருப்தை அறியும்போது வேதனையாக இருக்கிறது.
அதுவும் அந்த மக்களுக்கு இன்னும் அரச உதவிகள் எதுவும் செல்லவில்லை என்பதை அறியும்போது அதிர்ச்சியாக இருக்கிறது.
இந்த நிலையில் நாம்தமிழர் சீமான் அவர்கள் சென்று அந்த மக்களை சந்தித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது.

No comments:

Post a Comment