Sunday, May 28, 2023
ராஜீவ் காந்தியைக் கொன்றிருக்காவிடில்
•ராஜீவ் காந்தியைக் கொன்றிருக்காவிடில்
தமிழீழம் கிடைத்திருக்குமா?
மழை பெய்தால் புற்றில் இருந்து பாம்புகள் கிளம்பி வருவதுபோல் மே மாதம் வந்துவிட்டால் சிலர் முகநூலில் வந்து விஷம் கக்குகின்றனர்.
ராஜீவ்காந்தியை கொன்றிருக்காவிட்டால் தமிழீழம் கிடைத்திருக்கும். பிரபாகரன் தமிழீழத்தின் பிரதமர் ஆகியிருப்பார் என்றெல்லாம் எழுதுகின்றனர்.
இதே இவர்கள்தான் இந்திராகாந்தி இறந்திருக்காவிட்டால் தமிழீழம் கிடைத்திருக்கும், எம.ஜி.ஆர் இருந்திருந்தால் தமிழீழம் கிடைத்திருக்கும் என்றும் கதை எழுதியவர்கள்.
ஆனால் இந்திராகாந்தி உயிரோடு இருந்திருந்தாலும் தமிழீழம் கிடைக்க அவர் உதவியிருக்கமாட்டார் என்பதே உண்மை.
இந்திராகாந்தி காலத்தில்தான் ஈழப் போராளிகளுக்கு பயிற்சியும் ஆயுதமும் வழங்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததுதான்.
ஆனால் அப்போது பயிற்சி பெற்ற போராளிகளுக்கும் அவர்களின் தலைவர்களுக்கும் தமிழீழம் பெற இந்தியா ஒருபோதும் ஆதரவளிக்காது என்பதை இந்திரா காந்தியும் அவரது இந்திய அரசு உறுதியாக தெரிவித்திருந்தது.
தமிழீழத்தை இந்தியா ஆதரிக்கவில்லை என்பது மட்டுமல்ல தமிழ் மக்கள் தாங்களாகவே போராடி தமிழீழம் பெறுவதையும் இந்தியா அனுமதிக்காது என்பதை அமிர்தலிங்கம் உட்பட அனைத்து ஈழத்து தமிழ் தலைவர்களும் உணர்ந்தேயிருந்தார்கள்.
அதனால்தான் அப்போது இலங்கை தேசியபந்தோபஸ்து அமைச்சராக இருந்த அத்துலத்முதலி இலங்கை பாராளுமன்றத்தில் “ ஒருவேளை சிங்களவர்கள் தமிழீழத்தை கொடுக்க முன்வந்தாலும் இந்தியா அனுமதிக்காது என்பதை ஈழப் போராளிகள் உணர வேண்டும்” என்று பேசியிருந்தார்.
அதேபோன்று ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்திலும் தமிழீழத்தை இந்திய அரசு ஒருபோதும் ஆதரிக்கவில்லை.
எனவே ராஜிவ் காந்தியைக் கொன்றிருக்காவிடில் தமிழீழம் கிடைத்திருக்கும் என்று சிலர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
கொழும்பில் நடைபெற்ற நூல் வெளியீட்டில் உரையாற்றிய முன்னாள் மாகாணசபை முதல்வர் வரதராஜபெருமாள் “ இந்தியா ஒருபோதும் தமிழீழத்தை ஆதரிக்கவும் இல்லை.. தமிழீழம் பெற உதவுவதாகவும் கூறவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த பொங்கலுக்கு தமிழீழம் அமைப்போம் என்று 1983ல் கூறிய டெலோ இயக்க தலைவர்களும்கூட இந்தியா தமிழீழத்தை ஆதரிக்கவில்லை என்ற உண்மையை ஒத்துக்கொள்கின்றனர்.
இந்தியா தமிழீழத்தை மட்டுமல்ல ஒரு சமஸ்டி தீர்வைக்கூட ஆதரிக்க முன்வரவில்லை என்பதே உண்மையாகும்.
இந்தியாவில் இருக்கும் மாநில சுயாட்சி முறையிலான தீர்வைக்கூட ஈழத் தமிழர்கள் பெறுவதை இந்திய அரசு விரும்பவில்லை.
அதனால்தான் எந்தவித அதிகாரமும் அற்ற மாகாணசபையை தீர்வாக ஒப்பந்தம் மூலம் ஈழத் தமிழர்களுக்கு இந்தியா திணித்துள்ளது.
இந்த ஒப்பந்த மூலம் கிடைத்த வடக்கு கிழக்கு இணைப்பைக்கூட இலங்கை அரசு நீதிமன்றம் மூலம் நீக்கிய போதும்கூட இந்திய அரசு அது குறித்து அக்கறை கொள்ளவில்லை.
இதுதான் ஈழத் தமிழர் மீது இந்தியா கொண்டுள்ள அக்கறை.
ஆனால் இதை மறைத்து சிலர் ராஜீவ் காந்தியைக் கொன்றிருக்காவிடின் தமிழீழம் கிடைத்திருக்கும் என நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர்.
இனி யாராவது இப்படி விஷத்தைக் கக்கினால் அவர்களை மிதிக்க வேண்டும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment