Saturday, August 31, 2024
1995ம் ஆண்டு அகஸ்டு
1995ம் ஆண்டு அகஸ்டு 15ம் திகதியன்று நான் அடைத்து வைக்கப்பட்டிருந்த துறையூர் சிறப்புமுகாம் திருச்சி காவல் கண்காணிப்பாளாரால் சோதனை செய்யப்பட்டது.
இவ்வாறான சோதனை வழக்கமாக மாதக் கடைசியில் நடைபெறுவதுதான் வழக்கம்.
மாறாக திடீரென இடையில் சோதனை செய்யப்பட்டால் எங்கேயோ ஏதோ பெரிய பிரச்சனை நடந்துவிட்டது என்று அர்த்தம்.
ஆம். அன்றும் ஜெயா அம்மையாரின் ஆட்சியையே ஆட்டம்காண வைத்த சிறையுடைப்பு சம்பவம் ஒன்று நடந்து விட்டது.
அதாவது வேலூர் கோட்டை சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த புலிகள் தப்பி விட்டார்கள் என்பதே அந்த சம்பவம்.
பல நூற்றுக்கணக்கான ஆயுதம் ஏந்திய பொலிசாரின் 24 மணிநேரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த புலிகள் தப்பிவிட்டனர் என்பது ஆச்சரியம் எனில் அதைவிட ஆச்சரியம் அவர்கள் சுரங்கம் தோண்டி தப்பிவிட்டனர் என்ற செய்தியாகும்.
கியூ பிரிவு உயர் அதிகாரி ஒருவர் சென்னையில் இருந்து சென்று சுரங்கத்தை வீடியோ எடுத்து காண்பிக்கும்வரை யாருமே அதை நம்பாமல் இருந்தனர்.
எனக்கும்கூட எப்படி சுரங்கம் தோண்டியிருப்பார்கள்? எப்படி தப்பியிருப்பார்கள்? யார் யார் தப்பினார்கள்? என்ற கேள்விகள் தோன்றின.
நானும் வேலூர் கோட்டையில் ஒரு வருடம் அடைத்து வைக்கப்பட்டிருந்தேன்.
எனவே எனக்கு அந்த முகாம் சூழல் மற்றும் அங்கு வைக்கப்பட்டிருந்தவர்கள் பலரை எல்லாம் தெரியும்.
ஆனால் நான் எவ்வளவோ முயன்றும் சிறையுடைப்பு பற்றிய மேலதிக விபரங்களை அப்போது அறிய முடியவில்லை.
தென்னிந்திய திரைப்படத்துறையினர் மயிர்கூச்செறியும் மர்மங்கள் நிறைந்த வேலுர் சிறையுடைப்பை ஏன் இன்னும் படமாக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment