ஆறுதல் அளிக்கும் ஆதரவு
தமிழ்நாட்டில் உள்ள சிறப்புமுகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரியதுடன் அக் கொடுமைக்கு எதிராக போராட்டம் நடத்தவிருப்பதாக வேல்முருகன் அறிவித்துள்ளார்.
ஈழத் தமிழ் தலைவர்களே இந்த அகதிகளை மறந்துவிட்ட நிலையில் தமிழகத்தில் உள்ள வேல்முருகன் அவர்கள் குரல் கொடுத்திருப்பது ஆறுதல் அளிக்கிறது.
தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தர் அய்யா எத்தனையோ தடவை டில்லி சென்று இந்தியப் பிரதமரை சந்திக்கின்றார். ஆனால் ஒருமுறைகூட சிறப்பு மகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுதலை செய்யும்படி கோரியதில்லை.
மாவை சேனாதிராசா குடும்பத்துடன் சென்னையில்தான் வாழ்ந்து வருகிறார். ஆனால் ஒருமுறைகூட இந்த அகதிகளை சென்று பார்வையிடாதது மட்டுமன்றி இவர்களின் விடுதலைக்கு குரல்கூட கொடுத்ததில்லை.
மன்னார் எம்.பி செல்வம் அடைக்கலநாதன் குடும்பத்துடன் திருச்சியில் குடியிருக்கிறார். இவர் முன்னர் புதுக்கோட்டை சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டவர். சிறப்புமுகாம் கொடுமைகளை இவரும் அனுபவித்தவர். ஆனால் இவர் இந்த சிறப்புமுகாம்களை மூடும்படியோ அல்லது அதில் அடைத்து வைக்கப்ட்டிருக்கும் அகதிகளை விடுதலை செய்யும்படியோ இதுவரை ஒருமுறைகூட கேட்டதில்லை.
வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தமிழகம் சென்றபோது தமிழகத்தில் வெளிமுகாம்களில் இருக்கும் அகதிகளை இலங்கை அனுப்பி வைக்குமாறு இந்திய அரசிடம் கோரினார். ஆனால் அவரும்கூட சிறப்புமுகாம் அகதிகளை விடுதலை செய்யுமாறு கோரவில்லை.
ஊழல் செய்த ஜெயா அம்மையாரை விடுதலை செய்யும்படி கோரிய நாடுகடந்த தமிழீழத்தின் பிரதமர் உருத்திரகுமார், சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி அகதிகளை விடுதலை செய்யுமாறு கோரவில்லை.
இவ்வாறு ஈழத் தமிழ் தலைவர்களே ஈழ அகதிகளை மறந்துவிட்ட நிலையில் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுதலை செய்யுமாறு கோரியதுடன் அதற்காக போராட்டம் நடத்தப் போவதாக வேல்முருகன் அவர்கள் அறிவித்திருப்பது உண்மையிலே அவ் அகதிகளுக்கு அறுதல் அளிக்கும் செய்தியாகும்.
வேல்முருகன் அவர்களின் ஆதரவு ஈழத் தமிழ் மக்களால் என்றும் நன்றியுடன் நினைவு கூரப்படும்.
No comments:
Post a Comment