நாம் அறியாத ஃபிராய்ட்
டாக்டர். எம்.எஸ்.தம்பிராஜா
கட்டுரையாளர், இங்கிலாந்து வாழ் தமிழரான மனநல மருத்துவர் மற்றும் முன்னாள் பேராசிரியர்
தொடர்புக்கு: ibmaht@hotmail.com
ஃபிராய்டின் 160-வது பிறந்த நாள்: மே 6
உளவியல் என்றவுடன் பலருடைய மனதிலும் தோன்றும் முதல் பிம்பம் சிக்மண்ட் ஃபிராய்டாகத்தான் இருக்க முடியும். ஃபிராய்ட் (1856 1939) ஆஸ்திரியாவில் பிறந்த ஒரு மருத்துவர், நரம்பியல் நிபுணர். ஆனால், அவரிடம் சிகிச்சைக்கு வந்த பலருக்கு இருந்தது உடல் பிணிகள் அல்ல; உளம் சார்ந்த பிரச்சினைகளே என்பதை அறிந்து மனித மனதின் செயல்பாடுகள் பற்றி அறிவதில் ஆர்வம் கொண்டார். அதிலிருந்து முகிழ்ந்தவைதான் மனம் மாற்றிய அவரது கோட்பாடுகள்.
சரியா? தவறா?
அவரது கோட்பாடுகளைப் பற்றிய பரிச்சயம் பலருக்குப் பெயரளவிலாவது உண்டு. ஆனால், அவற்றின் நெளிவுசுளிவுகளும் உளவியலுக்கு அவர் வழங்கிய பங்களிப்பையும் பெரும்பாலானோர் ஓரளவே அறிந்திருப்பார்கள்.
சரி, ஃபிராய்ட் பற்றிய உங்கள் அறிவைச் சோதித்துப் பார்க்கக் கீழ்வரும் ஐந்து வாசகங்களுக்குச் சரி அல்லது தவறு என்று விடையளித்துப் பாருங்கள்:
1. சிக்மண்ட் ஃபிராய்ட் உளவியலின் தந்தையாகக் கருதப்படுகிறார்.
2. ஆழ்மனம் என்ற நனவிலி மனதை முதன்முதலாகக் கண்டறிந்தவர் ஃபிராய்ட்தான்.
3. கனவுகள் பற்றிய அவரது புகழ்வாய்ந்த கண்டுபிடிப்புகளை இன்றைய அறிவியல் ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்துகின்றன.
4. ஃபிராய்ட் கண்டுபிடித்த உளப்பகுப்பாய்வு என்ற சிகிச்சை முறை பல மனக்கோளாறுகளையும் சில மனநோய்களையும் குணப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது.
5. ஃபிராய்ட் கையாண்ட ஆராய்ச்சி முறைமை அறிவியல்பூர்வமானது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள அத்தனை வாசகங்களும் முற்றிலும் தவறானவை! இது பலருக்கு ஆச்சரியத்தைத் தரலாம். ஆனால், அதுதான் உண்மை. இவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
உளவியலின் தந்தை யார்?
உளவியலின் தந்தை என்று கருதப்படுபவர் ஜெர்மானியரான வில்ஹைம் வுண்ட் (Wilhelm Wundt, 1832 -1920). இவர் ஜெர்மனியிலுள்ள லீப்சிக் பல்கலைக் கழகத்தில் உளவியலுக்கான ஆய்வுக்கூடத்தை 1879-ல் நிறுவினார். இதுவே உளவியல் கல்வியின் தொடக்கம் என அறியப்படுகிறது. அவருக்கு அடுத்ததாக வில்லியம் ஜேம்ஸ் (William
James, 1842 1910) என்ற அமெரிக்க உளவியலாளர் 1890-ல் ‘உளவியல் கோட்பாடுகள்’ (The principles of psychology) என்ற புகழ்பெற்ற நூலை எழுதி, உளவியல் துறையில் ஒரு மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தினார். இவர் அமெரிக்க உளவியலின் தந்தையாகப் போற்றப்படுகிறார். அதாவது உளவியல் தளத்தில் ஃபிராய்ட் காலூன்றுவதற்குக் கால் நூற்றாண்டுக்கு முன்னரே உளவியல் ஒரு அறிவியல் துறையாக உருவெடுக்கத் தொடங்கியது என்பதே வரலாறு நமக்குக் கூறும் செய்தி.
நனவிலி மனம்
நாம் அறியாத ஆழ்மனம் அல்லது நனவிலி மனம் என்ற ஒன்று உண்டு என்ற கருத்து ஃபிராய்டின் காலத்துக்கு முன்னரே அறியப்பட்டிருந்து. இதைப் பல தத்துவஞானிகளும் எழுத்தாளர்களும் தனக்கு முன்னரே அறிந்திருந்தார்கள் என்பதை ஃபிராய்டே சுட்டிக்காட்டியுள்ளார். மெய்யியலிலும் உலகின் உள்ள பல மதங்களிலும் ஆழ்மனம் பற்றிய கருத்துகள் வெவ்வேறு பெயர்களில் பேசப்பட்டு வந்துள்ளன.
ஆனால், நனவிலி மனம் என்ற கருத்தாக்கத்தைப் பிரபலப்படுத்தியவர் ஃபிராய்டே. இந்தப் பெருமை அவரையே சாரும். நமது செயல்களுக்கான காரணங்கள் பெரும்பாலும் நமக்குப் புலப்படுவதில்லை, அல்லது அதற்கு நாம் கூறிக்கொள்ளும் காரணங்கள் பல நேரம் தவறானவை என்பதே ஃபிராய்டியத் கோட்பாட்டின் மையப் பொருள்.
ஃபிராய்டின் கொடை
மனிதர்களின் சிந்தனையும் செயலும் அவர்களுடைய முழுமையான கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டது. சிந்திக்காமல் செயல்படுவது, தர்க்க ரீதியற்ற முறையில் நடந்துகொள்வது, நாம் செய்த ஒரு காரியத்துக்கான காரணத்தை விளக்க முடியாமல் இருப்பது ஆகிய மனித சுபாவங்கள் நனவிலி மனதின் வெளிப்பாடுகள் என்பதை அழுத்தமாகக் கூறியவர் ஃபிராய்டே.
ஃபிராய்ட் எழுத ஆரம்பித்த பின்னர்தான் நாம் அறியாத மனம் ஒன்று உண்டு என்ற சிந்தனை மனிதர்களின் பொதுப்புத்தியில் பதியத் தொடங்கியது. ஆழ்மன இயக்கங்களை உலகைப் புதிய முறையில் நோக்கச் செய்தது ஃபிராய்ட் விட்டுச் சென்ற கொடை என்று தயக்கமின்றிக் கூறலாம்.
கனவுகளின் பொருள் விளக்கம்
நனவு மனதிலிருந்து அமுக்கப்பட்ட வேட்கைகள், விருப்பங்கள், இச்சைகள் ஆகியவற்றின் வெளிப்பாடே கனவுகள் என்பது அவரது கோட்பாடு. அதாவது, ஆழ்மனதில் விருப்பங்களின் நிறைவேற்றங்களே (wish fulfilment) கனவுகள் என்பது ஃபிராய்டின் நிலைப்பாடு. 1970-களில் தூக்கத்தின்போது சில கண்ணசைவுகள் ஏற்படும் கட்டங்களில்தான் கனவுகள் தோன்றுகின்றன என்ற உண்மை கண்டுபிடிக்கப்பட்டது. கனவுகள் பற்றிய ஆராய்ச்சியில் இந்தக் கண்டுபிடிப்பு ஒரு மைல்கல்லாக அமைந்தது.
அதன் பின் உறக்க ஆராய்ச்சிக்கூடங்களில் கனவுகளை முறைப்படி ஆராய முடிந்தது. இந்த ஆராய்ச்சிகளிலிருந்து பெற்ற தகவல்கள் ஃபிராய்டின் கனவுக் கோட்பாடு தவறானது என்ற முடிவுக்கு இட்டுச் சென்றன. எனவே, சமகாலக் கனவுக் கோட்பாடுகள் மூளையின் செயல்பாட்டின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன. இதிலிருந்து ஃபிராய்டின் கனவுக் கோட்பாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிய வந்திருக்கிறது.
உளப்பகுப்பாய்வு
மனித மனதை விளக்கும் முகமாக உளப்பகுப்பாய்வு (psychoanalysis) என்ற புதிய சிந்தனைப் பள்ளியை ஃபிராய்ட் உருவாக்கினார். எனவே, அவர் உளப்பகுப்பாய்வின் தந்தையாகக் கருதப்படுகிறார் (உளவியலின் தந்தையாக அல்ல). ஒரு மருத்துவராக அவர் பார்த்த நோயாளிகளின் மனக்கோளாறுகளுக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண, தனது உளப்பகுப்பாய்வு முறையைப் பயன்படுத்தினார். ஃபிராய்ட் வாழ்ந்த காலத்தில் உளப்பகுப்பாய்வு பெரும் செல்வாக்கு பெற்ற ஓர் இயக்கமாக வளர்ந்தது. கால ஓட்டத்தில் அவரது உளப்பகுப்பாய்வு முறையின் செல்வாக்கு குறைந்து, தற்போது அருகிப் போயுள்ளது.
காரணம், சான்றுகளின் அடிப்படையிலான மருத்துவ முறைப்படி, அதன் பயன் நிறுவப்படவில்லை என்பதே. ஆனால், ஒரு நபர் தனது சுயசரிதையை மாற்றி எழுத முடியாது என்றாலும், தன்வரலாறு பற்றிய கதையாடலை அந்த நபர் மீள்தொகுப்பு செய்வதற்கு அவரது சிகிச்சை முறை வழியாக ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொடுத்தார் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
சிக்மண்ட் ஃபிராய்ட் தனது கண்டுபிடிப்புகள் யாவும் அறிவியல் பூர்வமானவை என்று கூறுவதை ஒரு வழக்கமாகவே கொண்டிருந்தார். ஆனால், அவர் கையாண்ட முறைமை அறிவியல் சார்ந்ததல்ல. அறிவியல் முறைமையின்படி ஒருவர் முன்வைக்கும் கருத்தை அல்லது கருதுகோளை ஆராய, அதைப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் (hypothesis testing). இக்கருதுகோள்கள் மெய்ப்பிக்க அல்லது பொய்ப்பிக்கக் கூடியவையாக இருக்க வேண்டும்.
ஃபிராய்டிய கோட்பாடுகளுக்கு / கருத்துகளுக்கு எதிராக முன்வைக்கப்படும் வாதம், பெரும்பான்மையான அவரது கோட்பாடுகள் அறிவியல்பூர்வமாக ஆய்வுக்கு உட்படுத்த முடியாதவை, இன்றைய அறிவியல் விதிகளின்படி நிரூபிக்க முடியாதவை என்பதுதான்.
சுய ஆராய்ச்சி உதவுமா?
எடுத்துக்காட்டாக, ஃபிராய்டின் வரையறைப்படி நனவிலி மனம் என்பதை ஒருவர் அறிந்துகொள்ள முடியாது. எவ்வளவுதான் சுயமாக ஆராய்ந்து பார்த்தாலும், மனதுக்குப் புலப்படாது என்பதே அதன் மையப் பொருள். அதை உளப்பகுப்பாய்வு வழியாகவும், கனவுகளின் பொருள் விளக்கம் மூலமாகவே அடையாளம் காண முடியும் என்பது ஃபிராய்டின் கூற்று. அதாவது, உளப்பகுப்பாளர் ஒருவராலேயே இதைச் செய்ய முடியும்.
இதில் உள்ள சங்கடம் என்னவென்றால், வெவ்வேறு உளப்பகுப்பாளர்கள் வெவ்வேறு விளக்கம் அளிக்கலாம். எது சரியானது, எது பிழையானது என்று எப்படிக் கூறுவது? எனவே, இது அறிவியல் கொள்கைகளுக்கு முரணானது; பரிசோதித்துப் பார்க்க முடியாதது.
இன்றைய பொருத்தம்
அவர் பயன்படுத்திய ஆராய்ச்சி முறைமையை ஏற்றுக்கொள்வதிலும் பல பிரச்சினைகள் உள்ளன. அறிவியல் ஆராய்ச்சிகளின் விதிப்படி, ஒரு சிகிச்சை முறையால் ஒரு நோயாளர் கூட்டம் குணமடைகிறது என்பதை நிரூபிக்க, அதே நோயுள்ள ஆனால் அந்தச் சிகிச்சையைப் பெறாத இன்னொரு நோயாளர் கூட்டத்துடன் ஒப்பிட வேண்டும். அப்போதுதான் நோயாளிகளில் காணப்படும் மாற்றம் தற்செயலானது அல்ல என்று தெரியவரும். இந்த ஆராய்ச்சி முறைமை கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள் (controlled trial) என்று அழைக்கப்படுகிறது.
ஃபிராய்ட் பயன்படுத்திய ஆராய்ச்சி முறைமை தனியாள் ஆய்வு (case study) என்று அழைக்கப்படும் முறைமை. இம்முறையில் உள்ள பலவீனம் என்னவென்றால், ஒரே விஷயத்தைப் பலவாறாகப் புரிந்துகொள்ள இதில் இடமுண்டு என்பதுதான்.
அப்படியானால், ஃபிராய்டின் கருத்துகள் காலாவதியாகிவிட்டனவா?
எல்லாம் முடிந்ததா?
ஃபிராய்டின் கோட்பாடுகள் பற்றி கடந்த அரை நூற்றாண்டு கால உளவியல் ஆராய்ச்சிகள் கூறுவது என்ன? அடக்கி ஒடுக்கப்பட்ட பாலுணர்வு, மனநோயை அல்லது நரம்புக் கோளாறுகளை உண்டாக்குகிறது என்ற அவருடைய கூற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை. குழந்தை பாலுணர்வு, இடிபஸ் சிக்கல், தற்பாதுகாப்புப் பொறிமுறைகள் என்ற கருத்தாக்கங்களுக்கும் ஆராய்ச்சிச் சான்றுகள் இல்லை.
உளப்பகுப்பாய்வு சிகிச்சை முறை வழியாக மனநோய்களையும் மனக்கோளாறுகளையும் குணப்படுத்த முடியும் என்பதற்குச் சான்றுகள் இல்லை. எனவேதான், அவர் முன்வைத்த உளப்பகுப்பு சிகிச்சை முறை இன்று ஏறத்தாழ நடைமுறையில் இல்லை. ஆகவே, ஃபிராய்டுக்கும் அவர் முன்வைத்த கருத்துகளுக்கும் ஈமச் சடங்குகள் நடத்தவேண்டிய காலம் வந்துவிட்டதா?
பேசியே குணப்படுத்தலாம்
அதுதான் இல்லை! தன் வாழ்நாளில் அவர் ஏராளமான கருத்துகளை முன்வைத்தார். 160 ஆண்டுகளுக்கு முன், மனிதனின் மூளையைப் பரிசோதிக்கத் தொழில்நுட்பங்கள் இல்லாத ஒரு காலகட்டத்தில், அவர் முன்மொழிந்த சில கருத்துகளின் நுணுக்கங்களை இன்று ஏற்றுக்கொள்ள முடியாதபோதிலும், அவரது கருத்துகளில் பொதிந்திருக்கும் பொதுவான கூறுகளைப் புறந்தள்ளிவிட முடியாது. இந்தப் பட்டியல் நீளமானது.
மருந்து, மாயம் இல்லாமல் ஒருவரோடு பேசுவதன் மூலம் ஹிஸ்டீரியா போன்ற மனக்கோளாறுகளைக் குணப்படுத்த முடியும் என்று நிறுவியவர் அவரே. இன்று சைக்கோதெரபி என்றும் உளநல ஆலோசனை என்றும் நடைமுறையில் உள்ள பேச்சுவழி சிகிச்சைகளின் பிதாமகன் சிக்மண்ட் ஃபிராய்டே.
பெரும் கொடைகள்
ஒரு தனிமனிதரின் ஆளுமையிலும் அவரது உறவு முறைகளிலும் அவரது குழந்தைப் பருவ அனுபவங்கள் முக்கியமானவை என்ற தற்கால ஆராய்ச்சிகளின் கண்டுபிடிப்பை, ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்னமே அழுத்திக் கூறியவர் ஃபிராய்ட். இதனால் மேம்பாட்டு அல்லது குழந்தை உளவியல் என்ற கிளைத் துறைக்கு வித்திட்டவர் அவரே. நினைவாற்றல் பற்றிய இன்றைய ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகள், ஃபிராய்ட் கூறியபடி சில நினைவுகள் ஆழ்மனதில் பதிந்துள்ளதாக இப்போது ஏற்றுக்கொள்கின்றன.
பத்து ஆண்டுகள் மிதிவண்டி ஓட்டுவதை நிறுத்தியிருந்த ஒருவர், எடுத்த மாத்திரத்தில் மீண்டும் அதை ஓட்டும் ஆற்றல் எங்கிருந்து வருகிறது? இதுபோன்ற ஞாபகச் சக்தி இப்போது உட்கிடை நினைவாற்றல் (implicit memory) என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு ஆழ்மனம் பற்றிய புதுப்புது கண்டுபிடிப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன.
இன்றைக்கு உளப்பகுப்பாய்வு செல்வாக்கு இழந்திருந்தபோதும், உளச்சிகிச்சையின்போது உண்டாகும் உணர்வுபூர்வமான பரஸ்பர அசைவியக்கங்களை அவர் அடையாளம் கண்டும் விளக்கிய முறை உளவியலாளர்கள், உளவியல் ஆலோசகர்கள், மருத்துவர்களுக்கு அவர் விட்டுச்சென்ற கொடை என்றே கூறவேண்டும்.
ஃபிராய்ட் கண்டுபிடித்த மாற்றீடு (transference), மாற்று மாற்றீடு (counter-transference), உளவியல் தடை (resistance) போன்ற உளவியல் நிகழ்வுகள் இன்று இயக்காற்றல் உளசிகிச்சை அணுகுமுறைகளில் (psychodynamic approach) பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வேறு உளவியல் சிந்தனைப் பள்ளிகளும் அவர் கூறிச் சென்ற உளவியல் உத்திகளை, வேறு பெயர்களில் கையாண்டு வருகின்றன.
சிகரச் சாதனைகள்
அவரது சிந்தனைகளின் தாக்கங்கள் மனநலனையும் தாண்டி கலை, இலக்கியம், மானுடவியல் எனச் சமகாலக் கலாச்சாரத்தின் பல தளங்களில் நிலைத்து நிற்கின்றன. ஒரு யூதக் குடும்பத்தில் பிறந்த அவர் மதத்தைப் பற்றி அளித்த உளவியல் விளக்கங்கள் பலருக்கு உவப்பாக இருக்கவில்லை. ஆனாலும் தனது இறுதி நாள்வரை அவர் கொள்கை வலிமையோடு ஓர் இறைமறுப்பாளராக, பகுத்தறிவுவாதியாக இருந்தார்.
தனிமனிதரையும் கடந்து மனிதர்கள் ஒரு குழுவாகச் செயல்படும் விதத்தை விளக்கி, இன்றைய சமூக உளவியலுக்கு அடித்தளம் அமைத்தவரும் அவரே.
அதுவரை மனிதர்களை அரசியல் சமய ரீதியாகவும், பொருளாதாரம், தத்துவம் போன்றவற்றின் வழியாகவும் அறிந்து வந்த உலகு, முதல்முதலாக உளவியல் ரீதியாக ஆழமாக அறிந்துகொள்ளத் தலைப்பட்டது ஃபிராய்ட் ஏற்படுத்திய தாக்கத்தால்தான். நனவிலி மனம், மனதினுடைய தற்பாதுகாப்பு முறைகள் (defense
mechanisms), ஃபிராய்டிய சறுக்கல் (Freudian slip), தற்காதல் (narcissism) போன்ற கருத்துகள் இப்போது மானுடப் பொதுப்புத்தியில் இரண்டறக் கலந்துவிட்டன. இதுவே அவரது சிகரச் சாதனை.
எனவே, மானுட வரலாற்றில் ஒரு மாபெரும் சிந்தனையாளர்களில் ஒருவராகக் கருதப்படுவதற்குச் சகலத் தகுதிகளும் கொண்டவர் சிக்மண்ட் ஃபிராய்ட் என்பதை மறுக்க முடியாது.
தனிமனிதரின் ஆளுமையிலும் அவர் உறவு முறைகளிலும் அவரது குழந்தைப் பருவ அனுபவங்கள் முக்கியமானவை என்ற தற்கால ஆராய்ச்சிகளின் கண்டுபிடிப்பை, ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்னமே அழுத்திக் கூறியவர் ஃபிராய்ட்..
No comments:
Post a Comment