இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு
கனடாவில் வாழ்ந்து வரும் செந்தமிழினி பிரபாகரன் அவர்கள் எனது “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்த கருத்துகள் வருமாறு
பாலன் தோழர் எழுதிய "இலங்கை மீதான இந்திய வல்லாதிக்கம்" நூல் சொல்வதென்ன?
இந்தியா ஈழத்தமிழர்க்கு நட்பு நாடா?
இந்தியா ஈழத் தமிழர்களுக்கு நன்மை செய்யுமா?
இந்தியா இலங்கை வாழ் தமிழ் சிங்கள மக்களுக்கு நன்மை செய்யுமா?
இந்திய ஆக்கிரமிப்பு படை மூலம் மட்டுமா இந்தியா இலங்கை தீவில் ஆக்கிரமிப்பை செய்தது?
இன்றைய இந்தியாவின் இலங்கை மீதான பார்வை எத்தகையது?
இலங்கை மீதான இந்தியாவின் ஆக்கிரமிப்பும் இலங்கை தீவின் வளங்கள் மீதான இந்தியாவின் சுரண்டல்களும் பற்றிய அவசியமான அவசரமான விழிப்புணர்வு வரவேண்டியது ஏன் காலத்தின் கட்டாயமாக உள்ளது?
இன்று இலங்கை தீவு எந்த எந்தவகைகளில் இந்தியாவிடம் தன்னை இழந்து பறிபோய் இருக்கின்றது?
காலம் காலமாக வந்த சிங்கள தமிழ் தலைவர்கள் எப்படி இந்தியாவிடம் இலங்கை மண்ணையும் ஈழ மக்கள் வாழ்வையும் விலை பேசி அடகு வைத்தார்கள்?
இன்று இலங்கையில் சிங்கள, தமிழ் பிரதேச மக்கள் கொள்ள வேண்டிய அவசியமான இந்திய வல்லாதிக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வினதும் போராட்டங்களினதும் தேவைகள் என்ன?
இன்று பாராமுகமாக இருந்தால் இலங்கை தீவு இந்தியாவின் 30 வது மாநிலமாக விரைவில் மாறிவிடும் அபாயம் நிலவும் என எதன் அடிப்படையில் இலங்கை மக்கள் அச்சப்பட வேண்டும்?
இது போல் ஓராயிரம் கேள்விகளுக்கு காலத்திற்கு ஏற்ற பதில்களை கொண்டிருக்கின்றது பாலன் தோழரின் "இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு" நூல்.
காலத்தின் இன்றியமையாத விழிப்புணர்வின் தேவையை வலியுறுத்தும் இந்த நூல் அனைத்து தமிழக மற்றும் இலங்கை மக்களும் படிக்க வேண்டியது.
மெல்ல மெல்ல புற்றெடுக்கும் இந்திய ஆதிக்கத்தின் வேர்களை அறுத்தெறியாது போனால் விரைவில் இந்தியா என்ற பெரும் முதலை இலங்கையை தனது 30 வது மாநிலமாக விழுங்கி விடும் என்பது உறுதி.
இந்தியா தனது அண்டை அயல் தேசங்களின் மீது செலுத்தும் ஆதிக்கங்கள் பற்றி அறியாது போனால் பறிபோகும் தேசங்களை மீட்டெடுக்க முடியாது. எதிரியின் முகம் அறியாமல் போராடும் போராட்டங்கள் வெற்றியை தரப் போவதில்லை.
இந்த நூலை படிக்கும் பொழுது சுட்டி காட்டப்படும் சுட்டெரிக்கும் உண்மைகள் அச்சமூட்டுகின்றன.
அறியாமையில் இலங்கையில் இன முரண்களுக்குள் மோதிக் கொண்டு இருக்கும் சிங்கள தமிழ் மக்கள் தம்மை அறியாமலே பேட்டை ரவுடியாக திகழும் இந்தியாவிடம் தமது மண்ணையும் வளங்களையும் இழந்து கொண்டு இருக்கின்றனர் என்ற அச்சமூட்டும் உண்மைகள் புரிகையில் இன்றைய இலங்கை வாழ் மக்களின் விழிப்புணர்வின் தேவைகள் உணரப்படுகின்றன.
அறிந்து கொள்ள நிறைந்த விடயங்களை குறைந்த பக்கங்களில் கொண்டிருக்கும் செறிந்த ஆவண விழிப்புணர்வு சிறுபிரசுர நூலாக இருக்கும் இந்நூலில் தமிழீழ தமிழக தமிழ் மக்களின் விடுதலைக்காக அயராமல் குரல் கொடுத்து வருபவரும் இந்திய ஆக்கிரமிப்பில் இருந்து தமிழ் நாட்டின் விடுதலைக்காக போராடும் அவசியத்தை தமிழக மக்களுக்கு வலியுறுத்தி பேசியும், எழுதியும், செயல்பட்டு தமிழ் நாட்டு விடுதலைக்காக போராடிய தோழர் தமிழரசன் பாதையில் போராடி வரும் உணர்வாளருமான தமிழ் தேச மக்கள் கடசியின் பொதுச் செயலாளர் தோழர் தமிழ்நேயன் அவர்கள் முன்னுரை எழுதி இருக்கின்றார் என்பதும் தனி சிறப்பாகும்.
காலத்தின் தேவையுணர்ந்து வெளிவந்திருக்கும் அரிய இந்த படைப்பை அனைத்து தமிழ் மக்களும் வாங்கிப் படிக்க முன்வாருங்கள்
No comments:
Post a Comment