Thursday, June 30, 2016

Kanthi Mathi அவர்கள் எனது “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் பற்றி தெரிவித்துள்ள கருத்துகள்

இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு
சென்னையில் வாழ்ந்து வரும் நண்பர் Kanthi Mathi அவர்கள் எனது “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் பற்றி தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு.
வணக்கம் பாலா சார் ,
மார்க்சிய கண்ணோட்டத்தோடு கூடிய உங்கள் பகுப்பாய்வு நூல் நல்லதொரு முயற்சி . இந்தியாவின் ஆக்கிரமிப்பு மனப்பாங்கை மக்களுக்கு புரிய வைக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது வரவேற்க தக்கது .
அரசியல் ரீதியாக ,பொருளாதார ரீதியாக , ராணுவ ரீதியாக என பிரித்து பலகோணத்தில் ஆக்கிரமிப்பின் தன்மையை வகைப்படுத்தி உள்ளீர்கள் . கண்டிப்பாக அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய தகவல்கள் .
என்னுடைய கண்ணோட்டத்தில் :
இன்றைய சமூக அமைப்பில் முதலாளித்துவ சிந்தனையில் அனைத்துமே லாப நோக்கில் மட்டுமே பார்க்கப்படுகிறது தனிநபர் உறவு உட்பட . தன் நாட்டின் மீதான மற்ற நாடுகளின் ஏகாதிபத்திய சுரண்டலை தவிர்க்க முடியாத இந்தியா( உதாரணம் காட் ஒப்பந்தம் , அணு ஆயுத ஒப்பந்தங்கள், மற்றும் பல ஒப்பந்தங்கள்) அதே சுரண்டலை இலங்கையின் மீதான தன் ஆளுமையின் மூலம் வெளிப்படுத்தி சுரண்டிக்கொண்டிருக்கிறது . இது ஒரு அரசாங்கம் தெரிந்தே மக்களுக்கு செய்யும் துரோகம் . ஆனால் மக்களோ உடனடி பாதிப்பு தெரியாதவரை எதற்கும் அலட்டிக் கொள்வதில்லை .
தேசிய இனப்போராடடம் :
தன் நாட்டின் தேசிய இனப்போராட்டங்களை அடக்க முனையும் ஒரு அரசாங்கம் எப்படி பக்கத்து நாட்டின் தேசிய இன போராட்டத்தை ஆதரிக்கும் ? சந்தை பொருளாதாரத்தை பலப்படுத்த , எல்லைகளை பலப்படுத்த ,அரசியல் பலத்தை பெருக்க என பல சுயலாபத்துக்காக இப்பிரச்சனையில் இந்தியாவின் தலையீடு . ஒருவேளை இந்தியா ஒதுங்கி இருந்தால் இதே லாப நோக்கில் வேறு நாடுகளின் ஆதிக்க சக்திகள் ஆளுமை செலுத்தி இருந்திருக்கும் .
ராஜீவ்காந்தி படுகொலை :
ராஜிவ் அவர்களின் படுகொலை நிகழாவிட்டாலும் இன ஒழிப்பு நிகழ்ந்தே இருக்கும் என்பது உங்கள் கருத்து . இது தனிநபர் படுகொலையன்று .இந்திய மக்களுக்கும் இலங்கை மக்களுக்குமான சுமூக மனப்பாங்கை வேரறுக்கும் படுகொலை .
எட்க்கா ஒப்பந்தம் :
இலங்கை மீதான முழு ஆக்கிரமிப்புக்கான இந்த ஒப்பந்தத்தை ஜே வி பி மட்டுமல்ல அங்குள்ள தமிழ் சிங்களர் அனைவரும் இணைந்து எதிர்க்க வேண்டும் . அவர்கள் மட்டுமல்ல இங்குள்ள இந்திய மக்களும் சேர்ந்து எதிர்ப்பு குரல் கொடுக்க முன்வர வேண்டும் .
தவறு எங்கு நடந்தாலும் யார் செய்தாலும் எதிர்க்கும் மனப்பாங்கு என்று மக்களிடையே இயல்பாக வருகிறதோ அன்று தான் மாற்றங்கள் சாத்தியம் .
அதிகபட்ச்சம் எத்தனை பேருக்கு ஒரு அரசாங்கம் மற்ற நாடுகளுடன் மேற்கொள்ளும் ஒப்பந்தங்களை அறிவதில் ஆர்வம் இருக்கும் .? அறிந்து கொள்ளவே விரும்பாதவர்கள் எங்கனம் எதிர்ப்பு குரல் கொடுக்க முன் வருவர் ?
மார்க்சியம் என்பது ஒரு சமூக விஞ்ஞானம் . மனிதநேயத்தை மையமாக கொண்டு அதற்கு தடையாக இருக்க கூடியவற்றை தகர்த்தெறிந்து அன்பினால் ஆன சாம்ராஜ்ஜியத்தை உருவாக்குவதே மார்க்சிய வழிமுறை.
எல்லோரும் நமக்கென்ன இருக்கும் சுயநல உலகில் உங்களை போல் ஒரு சிலர் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த மேற்கொள்ளும் இம்முயற்சிகள் சிறுதுளி பெருவெள்ளமாக வெற்றி பெற்று மாற்றங்கள் சாத்தியமாகட்டும் .
நன்றி 

No comments:

Post a Comment