•இம்முறையாவது தமிழ்நாடு அரசு
இந்த அகதிகளுக்கு இரக்கம் காட்டாதா?
இந்த அகதிகளுக்கு இரக்கம் காட்டாதா?
திருச்சி சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழ தமிழ் அகதிகள் தமது விடுதலைகோரி 23.12.2016 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
ஓவ்வொரு முறையும் விடுதலை செய்வதாக வாக்குறுதியளிக்கும் அதிகாரிகள் பின்னர் வாக்குறுதியை நிறைவேற்றாது ஏமாற்றி வருகின்றனர்.
இம்முறையாவது இந்த அகதிகள்மீது இரக்கம் காட்டி அவர்களை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும்.
1990ம் ஆண்டு முதல் இயங்கி வரும் சிறப்புமுகாமை மூடி அதில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழ தமிழ் அகதிகள் யாவரையும் விடுதலை செய்ய தமிழ்நாடு அரசை யாவரும் வற்புறுத்த வேண்டும்.
யுத்தம் முடிந்து 7 வருடமாகிவிட்டது. இலங்கை அரசுகூட கைது செய்யப்பட்ட பலரை விடுதலை செய்துள்ளது.
ஆனால் தமிழக அரசு தமிழ் அகதிகளை விடுதலை செய்யாமல் அடைத்து வைத்திருப்பது ஆச்சரியமாகவும் வேதனையாகவும் இருக்கிறது.
அண்மையில் வைகோ அவர்கள் பிரதமர் மோடியை சந்தித்து பல கோரிக்கைகளை முன்வைத்தார். ஆனால் அவரும்கூட சிறப்புமுகாம் அகதிகளை விடுதலை செய்யும்படி வலியுறுத்தாதது கவலையளிக்கிறது.
சம்பந்தர் அய்யா, சுமந்திரன் மற்றும் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஆகியோருக்கு தமது விடுதலைக்கு உதவுமாறு கோரி சிறப்புமுகாம் அகதிகள் எழுதிய கடிதத்தை நான் 6 மாதங்களுக்கு முன்னர் அனுப்பியிருந்தேன்.
அத்துடன் சிறப்புமுகாம் பற்றிய விபரங்களைக் கொண்ட எனது நூலையும் இணைத்து இவர்களுக்கு அனுப்பியிருந்தேன்.
ஆனால் இந்த தலைவர்கள் இவ் தமிழ் அகதிகளின் விடுதலைக்கு இதுவரை குரல் கொடுக்கவும் இல்லை. எனது கடிதம் கிடைத்தது என்றும்கூட இவர்கள் அறியதரவில்லை.
இந்த தலைவர்கள் ஜெயா அம்மையார் மரணமடைந்ததும் ஈழத் தாய் என்று புகழ்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
ஜெயா அம்மையாருக்கு புகழ் அஞ்சலி செலுத்தியவர்களால் இந்த ஈழ தமிழ் அகதிகளின் விடுதலைக்கு ஏனோ குரல் கொடுக்க முடியவில்லை.
இந்த அப்பாவி அகதிகள் ஈழத் தமிழராக பிறந்ததும் தமிழ்நாட்டை நம்பி அகதியாக வந்ததையும் தவிர வேறு எந்த தவறு செய்யவில்லை.
உலகில் உள்ள நாடுகள் எல்லாம் தமிழ் அகதிகளை வரவேற்று வளமான வாழ்வைக் கொடுத்துள்ளன.
ஆனால் வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு மட்டும் தன்னை நம்பி வந்த தமிழ் அகதிகளை சிறப்புமுகாமில் அடைத்து வைத்து சித்திரவதை செய்கிறது.
சர்வதேச மன்னிப்பு சபையும் , டில்லி தேசிய மனிதவுரிமைக் கமிசனும் சிறப்புமுகாமை மூடும்படி கோரியும் சிறப்புமுகாமை மூடுவதற்கு தமிழக அரசு மறுத்து வருகிறது.
சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை சட்டரீதியாக நடத்தும்படி உச்ச நீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் பலதடவை வற்புறுத்தியும் அதனை தமிழக அரசு உதாசீனம் செய்கிறது.
இலங்கைக்கு திரும்பிச் செல்ல விரும்புவோரை அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும் அவ்வாறு அனுமதி வழங்காமல் தமிழக அரசு செயற்படுகிறது.
இனியாவது அகதிகளின் இந்த அவல நிலைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். உடனடியாக அகதிகள் அனைவரையும் விடுதலை செய்து சிறப்புமுகாமை மூடவேண்டும்.
எல்லோரும் சேர்ந்து குரல் கொடுப்போம்.!
அகதிகளின் விடுதலைக்கு வழி கோலுவோம் !!
அகதிகளின் விடுதலைக்கு வழி கோலுவோம் !!
No comments:
Post a Comment