Saturday, December 31, 2016

•வசந்தம் வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் வரவில்லை!

•வசந்தம் வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் வரவில்லை!
வடக்கில் வசந்தத்தைக் கொண்டு வரப்போவதாக மகிந்த ராஜபக்ச தனது ஆட்சிக்காலத்தில் அறிவித்திருந்தார்.
ஆனால் அவர் கூறிய வசந்தம் இன்னும் வடக்கில் வரவில்லை. மக்கள் வறுமையின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்யும் அவல நிலையே இருக்கிறது.
வசந்தம் வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும்கூட வரவில்லை என்பதையே செய்திகள் தெரிவிக்கின்றன.
வறுமையின் கொடுமை தாங்க முடியாமல் சிங்கள பெண் ஒருவர் தன் பிள்ளைகளுடன் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
3 மாதங்களுக்கு முன்னர் தன் கணவனை இழந்த குறித்த பெண் 6 பிள்ளைகள் கொண்ட தன் குடும்பத்தை பராமரிக்க முடியாத நிலையில் தன் 4 பெண் பிள்ளைகளுடன் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னர் தன் தாயாரின் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கள யுவதி ஒருவர் சிங்கப்பூர் சென்று விபச்சாரம் செய்தபோது கைது செய்யப்பட்ட செய்தி பத்திரிகைகளில் வெளிவந்திருந்தது.
விபச்சாரம் அதுவும் சிறுவர் விபச்சாரம் உலகில் இலங்கையே முதலிடம் வகிக்கிறது. தன்னை பௌத்த நாடு என்று பெருமைப்படும் இலங்கையானது சிறுவர் விபச்சாரம் குறித்து கொஞ்சம்கூட வெட்கமின்றி இருக்கிறது.
சிங்கள இனத்திற்காகவும் பௌத்தத்திற்காகவும் உயிரை விடுவோம் என்று கூறித்திரியும் பிக்குகளும் தலைவர்களும் இந்த சிங்கள பௌத்த மக்களின் வறுமை குறித்து கவலைப்படுவதில்லை.
வடபகுதியில் பல லட்சம் ரூபா செலவில் பௌத்த விகாரைகள் கட்ட முற்படுவோர் தென்பகுதியில் பட்டினியால் வாடும் குழந்தைகளுக்கு புத்தர் போதித்ததுபோல் அன்பு காட்ட முற்படுவதில்லை.
இலங்கையில் இனப் பிரச்சனை தீர்க்கப்படாமைக்கும் மக்களுக்கு அபிவிருத்தி செய்ய முடியாமைக்கும் புலிகளே காரணம் என்று இலங்கை அரசு கூறிவந்தது.
கடந்த ஏழு வருடங்களாக புலிகளும் இல்லை. யுத்தமும் இல்லை. ஆனால் மக்களுக்கு எந்த அபிவிருத்தியும் செய்யப்படவில்லை.
புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் 200 பில்லியன் டாலர் பணம் இலங்கை அரசு செலவழித்ததாக சிவசங்கர்மேனன் கூறுகிறார்.
யுத்தத்திற்காக 200 பில்லியன் டாலர் செலவு செய்த இலங்கை அரசு இன்று மக்களுக்கு அபிவிருத்தி செய்ய பணம் இல்லை என்று கூறுகிறது.
யுத்தம் முடிந்தால் பாலும் தேனும் ஆறாக ஓடும் என்று ஆசை வார்த்தை கூறினார்கள். ஆனால் யுத்தம் முடிந்து 7 வருடமாகிவிட்டது .மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை.
யுத்தகாலத்தில்கூட வன்னியிலோ அல்லது தென் இலங்கையிலோ எந்தவொரு மக்களும் வறுமையின் கொடுமை தாங்காமல் தற்கொலை செய்யவில்லை.
ஆனால் இன்று தமிழ் மக்கள் மட்டுமல்ல சிங்கள மக்கள்கூட வறுமையின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்கின்றார்கள் எனில் என்ன அhத்தம்?
இதுதான் நல்லாட்சியின் இலட்சணமா? இந்த அரசு சிங்கள மக்களைப் பற்றியே கவலை கொள்ளாத நிலையில் தமிழ் மக்கள் குறித்து அக்கறை கொள்ளுமா?
குறிப்பு- சம்பந்தர் அய்யா வாக்குறுதியளித்தபடி இந்த அரசு மூலம் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்க இன்னும் 9 நாட்களே உள்ளது.

No comments:

Post a Comment