ஓ! அப்துல் ரவூப், எங்களை மன்னித்து விடு!
அம்மாவுக்கு பின்பு சின்னம்மாவா? என்ற இன்றைய அரசியல் பட்டிமன்றத்தின் நடுவே ஈழத் தமிழர்களுக்காக உயிர் நீத்த அப்தல் ரவூப் தியாகம் மறந்து போனது ஒன்றும் ஆச்சரியமான விடயம் இல்லைத்தான்.
என்ன செய்வது? அப்தல் ரவூப்பிற்கு நம்மவர் போல் ரஜனிக்கு பிறந்தநாள் கொண்டாட தெரியவில்லை. அவன் ஈழத் தமிழர்களையும் தன் உடன்பிறப்பாக நினைத்தது முட்டாள்தனம்தான்.
தமது அபிமான நடிகர்களுக்கு கட்அவுட் கட்டி பால் அபிசேகம் செய்யும் இளைஞர் கூட்டத்தின் மத்தியில் ஈழத் தமிழர்களுக்காக தன் உயிரை தியாகம் செய்த அப்துல் ரவூப் பிழைக்கத் தெரியாதவன்தான் போலும்.
1995ம் ஆண்டு மார்கழி மாதம் 15ம் திகதி. ஈழத் தமிழர்களுக்காக அப்துல் ரவூப் தன்னையே எரித்துக்கொண்ட நாள்.
சந்திரிக்கா ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழர்கள் இடம்பெயர்ந்த துயரச் செய்தியைக் கேட்டு அப்துல் ரவூப் துடித்த நாள் அது.
அது ஜெயா அம்மையாரின் இருண்ட ஆட்சிக் காலம். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்போர் தடா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட காலம் அது.
அப்துல் ரவூப் மரணம்,
• ஈழத் தமிழர்களுக்கு தமிழக மக்களின் ஆதரவு உண்டு என்பதை உலகிற்கு வெளிப்படுத்தியது
• தடா சட்டத்தின் மூலம் தமிழக மக்களின் அதரவுக் குரலை நசுக்க முடியாது என்பதை காட்டியது.
• ராஜீவ் மரணத்தால் தமிழக மக்களின் ஈழ ஆதரவு நிலை மாறவில்லை என்பதைக்காட்டியது.
• எல்லாவற்றுக்கும் மேலாக ஈழத் தமிழர்களுக்காக மரணத்தை தழுவவும் தமிழக இளைஞர்கள் தயங்க மாட்டார்கள் என்பதை இந்திய அரசுக்கு காட்டியது.
• தமக்காக குரல் கொடுக்க தாய்த் தமிழகம் இருக்கிறது என்பதை ஈழத் தமிழர்களுக்கு உணர்த்தியது.
இத்தனை பயன் உள்ள செய்திகளையும் அப்துல் ரவூப் தன் மரணம் மூலம் உலகத்திற்கு எடுத்துக் கூறினான்.
ஆனால் நாம் அப்துல் ரவூப்பையும் அவரது தியாகத்தையும் மறந்துவிட்டோம். அதனை நினைவு கூர தவறிவிட்டோம்.
அப்துல் ரவூப் இறந்தபின்பு ஜெயா அம்மையாரின் பொலிஸ் அவரது தாய் தந்தையரை மிரட்டியது. காதல் தோல்வியில் அப்துல் ரவூப் தற்கொலை செய்தான் என்று கூறும்படி வற்புறுத்தியது. அவ்வாறு கூறினால் பணம் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியது.
ஆனால் அந்த ஏழைப் பெற்றோர் எதற்கும் அஞ்சவில்லை. ஆசை வார்த்தைகளுக்கு மசியவில்லை. ஈழத் தமிழர்களுக்காக தம் மகன் உயிர் விட்டதை எண்ணிப் பெருமைப்படுவதாகவே கூறினார்கள்.
இன்றும்கூட அவர்கள் அந்த கருத்தையே கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் நம்மவர்கள் அப்துல் ரவூப்பை மறந்துவிட்டார்கள். அவரின் தியாகத்தையும்கூட நினைவு கூர தவறி விட்டார்கள்.
ஓ! அப்துல் ரவூப் எங்களை மன்னித்துவிடு!
No comments:
Post a Comment