அவர்கள் வருகிறார்கள்.
அவர்கள் தமது 5 கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனத்தில் வருகிறார்கள்
அவர்கள் தமக்கு தம் கையால் குடை பிடிப்பதில்லை.
எனவே தமக்கு குடை பிடிக்க ஒருவரை அழைத்து வருகிறார்கள்.
அவர்களால் சில நிமிடம்கூட தாகத்துடன் இருக்க முடியாது. எனவே கூடவே தண்ணீர் பாட்டில்களுடன் வருகிறார்கள்.
அவர்களால் சில மணி நேரம்கூட பசியுடன் இருக்க முடியாது. எனவே சில மணி நேரங்களில் நிகழ்சி முடிய வேண்டும் என வற்புறுத்துகின்றனர்.
என்னே வேடிக்கை?
அவர்கள் பசியால் இறந்தவர்களுக்கு, தாகத்திற்கு தண்ணீர் கூட கிடைக்காமல் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த வந்திருக்கிறார்கள்.
கேப்பாப்பிலவு மக்களின் போராட்டத்தில் பங்கு பெற போட்டி போடாதவர்கள்,
காணாமல்போனவர்களின் உறவுகளுக்கு உதவ போட்டி போடாதவர்கள்,
அரசியல்கைதிகளின் விடுதலைக்கு உதவ போட்டி போடாதவர்கள்,
முள்ளிவாய்க்காலில் தீபம் ஏற்ற போட்டி போட்டு வந்திருக்கிறார்கள்.
தமது காலடியில் 40 ஆயிரம் தமிழரின் பிணங்கள் புதையுண்டு கிடக்கின்றது என்ற உணர்வு அவர்களுக்கு இல்லை.
அந்த புதையுண்ட தமிழர்களுக்கு நியாயம் பெற வேண்டும் என்ற நோக்கமும் அவர்களுக்கு இல்லை.
அவர்களுடைய அக்கறை எல்லாம் அடுத்த தேர்தலில் எப்படி தமக்கு பதவி பெற்றுக்கொள்வது என்பது பற்றியே.
“இந்த வருட இறுதிக்குள் தீர்வு தராவிடில் பெரும் போராட்டம் வெடிக்கும்” என்ற அறிக்கையுடன் அவர்கள் வருவார்கள்.
அதனை பெரும் சாணக்கியம் என்று புகழ்ந்து எழுதவும் எம்மில் சில செம்புகள் இருப்பதே எமது பெரும் சாபக்கேடு!
No comments:
Post a Comment