• தோழர் புலவர் கலியபெருமாள் பற்றி சில வரிகள் - தோழர்
பாலன்
புலவர்
கலியபெருமாள் அவர்களை தவிர்த்துவிட்டு தோழர் தமிழரசன் வரலாற்றை யாரும் எழுதிவிட முடியாது. அதுபோல் புலவர் கலியபெருமாள் வாழ்க்கை வரலாற்றிலும் தோழர் தமிழரசன் பங்கு குறிப்பிடத்தக்கதாகவே எப்போதும் இருக்கும். புலவர் எழுதிய மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன் என்ற சுயசரிதை நூலில்
தோழர் தமிழரசன் குறித்து அவர் எழுதிய வரிகளைப்
படிக்கும் எவரும் இதனை உணர்ந்து கொள்வர்.
தோழர்
கலியபெருமாள் அவர்களை எல்லோரும் புலவர் என்றே அழைத்தார்கள். பெண்ணாடத்தில் இறங்கி புலவர் வீடு என்று விசாரித்தால்
அனைவரும் காட்டுவார்கள். புலவர் பெண்ணாடம் அருகில் உள்ள சௌந்திர சோழபுரம்
என்னும் கிராமத்தில் குஞ்சான் அஞ்சலை தம்பதியினருக்கு 04.03.1924ம் ஆண்டு இரண்டாவது
மகனாக பிறந்தார். அவர் தனது 83வது
வயதில் 16.05.2007யன்று பெண்ணாடத்தில் மரணமடைந்தார்.
புலவர்
கலியபெருமாள் மாக்சிச லெனினிச மாவோயிச தத்துவ வழிகாட்டலில் புரட்சியை முன்னெடுக்க தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார்.
இதனால் அவரை மட்டுமன்றி அவரது
மனைவி பிள்ளைகள் உறவினர்கள் பலரையும்கூட கைது செய்து சிறையில்
அடைத்து சித்திரவதை செய்தது தமிழக காவல்துறை. அரசியல் காரணங்களுக்காக தமிழகத்தில் ஒரு முழு குடும்பத்தையே
சிறையில் அடைக்கப்பட்டது என்றால் அது
புலவர் குடும்பம் ஒன்று மட்டுமே. அதேபோல் நான் அறிந்தவரையில் தமிழகத்தில்
பொலிஸ் தடையை மீறி மக்களே ஒன்றுதிரண்டு
சென்று வயலில் விதைத்து அறுவடை செய்து கொடுத்ததும் புலவருக்கு மட்டுமே. தமக்காக போராடுபவர்களை மக்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள் என்பதை புலவர் வாழ்க்கையில் நாம் காணலாம்.
புலவர்
வீட்டுக்கு பலமுறை நான் சென்றிருக்கிறேன். அவ்வேளைகளில் புலவருடன்
மட்டுமன்றி புலவர் குடும்பத்தவர்கள் எல்லோருடனும் நான் பழகியிருக்கிறேன். எல்லோரும் தோழமையோடு
பழகினார்கள். எப்போது சென்றாலும் எந்நேரம் சென்றாலும் புலவர் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி
எங்களை சாப்பிட வைத்தே அனுப்புவார்கள்.
முதல்
முறையாக எனது தோழர்களை அழைத்துக்கொண்டு
புலவர் வீட்டிற்கு சென்றிருந்தேன். எமது தோழர்கள் மார்க்சிச
அரசியல் வகுப்புகள் எடுப்பதற்குரிய ஏற்பாட்டின்படி அவர்களை அழைத்துச் சென்றேன். புலவர் வீட்டிலேயே அனைவரும் தங்கினோம். எமக்கு மூன்று வேளைகளும் உணவு தயாரித்து தந்துகொண்டிருந்தனர்
புலவரின் மனைவியும் மகள் மற்றும் மருமகள்மார்.
எங்கள் தோழர்களுக்கு பிடிக்கும் என்று புட்டு
, இடியப்பம் செய்து தந்தது மட்டுமன்றி அவற்றுக்கு சம்பல், சொதி என்பனகூட எமது
தோழர்களிடமே கேட்டு கேட்டு சமைத்து தந்ததை மறக்க முடியாது. அதுவும் புலவரின் மகள் கண்ணகி திருமணத்திற்கு
முதல்நாள்கூட எமக்கு அக்கறையாக சாப்பாடு செய்து தந்ததையோ அல்லது திருமணத்திற்காக சென்னை செல்வதற்காக ரயில்நியைத்தில் அவர் நின்றபொழுதிலும் தன்
தாயாரிடம் “சிரமம் பாராமல் தோழர்களுக்கு புட்டு செய்து கொடுங்க அம்மா” என்று கூறியதையோ எப்படி எம்மால் மறந்துவிட முடியும்?
புலவர்
வீட்டில் எமது தோழர்கள் இருந்தவேளை
பகல் வேளைகளில் அயலவர்கள் அழைத்துச் சென்று உணவு தருவார்கள். சிலவேளைகளில்
அயல் கிராமங்களில் இருந்துகூட வந்து அழைத்துச் செல்வார்கள். அனைவரும் அவர்கள் என்ன சாதியாக இருந்தாலும்
எங்களை தங்கள் குடும்பத்தவர்களாகவே பார்த்தார்கள். தங்களுக்கு உண்ண உணவு இல்லாவிட்டாலும்கூட
எமக்கு உணவு தர வேண்டும்
என்று விரும்பினார்கள்.
இந்நிலையில்
தமிழகத்தில் பயிற்சி முடிந்த எமது தோழர்களை திரும்ப
நாட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டிய பணி எனக்கு இருந்தது.
அப்பொது நாம் வேதாரணியம் என்னும்
இடத்தில் இருந்து வள்ளம் மூலம் சென்று வந்து கொண்டிருந்தோம். எனவே தோழர்களை அழைத்துக்கொண்டு
நாடு திரும்புவதற்காக வேதாரணியம் சென்றேன். அந்நாளில் பொலிகண்டியில் இலங்கை கடற்படை மீது புலிகள் தாக்குதல்
நடத்தியதால் கடற்படையின் தீவிர கண்காணிப்பு காரணமாக கடற்பயணம் செய்ய முடியாமல் இருந்தது. இருப்பினும் நாங்கள் வடமராட்சியில் மருதங்கேணிக்கு அருகில் நாகர்கோயில் கடற்கரையில் தரையிறங்க இருந்ததால் கடற்படையால் ஆபத்து வராது என்று நினைத்தோம். ஆனால் நாம் நினைத்ததற்கு மாறாக
நாகர்கோயில் கடற்கரையில் நாம் அண்மித்த வேளை
கடற்படை திடீரென தாக்க ஆரம்பித்துவிட்டது. நாம் அனைவரும் குதித்து
தப்பிவிட்டோம்.
ஆனால் நாம் சென்ற வள்ளமும்
அதில் இருந்த ஆயுதங்கள் வெடிமருந்துகள் யாவும் கடற்படை கைப்பற்றிவிட்டது. இந்நிலையில் வள்ளத்தில் வந்த அனைவரும் இறந்துவிட்டதாக
இலங்கை அரசு தன் வானொலியில்
அறிவித்தது. இதனால் தமிழ்நாட்டில் குறிப்பாக பெண்ணாடத்தில் நானும் என்னுடன் பயணித்த தோழர்களும் இறந்துவிட்டதாக செய்தி பரவி விட்டது. புலவர்
குடும்பம் உட்பட அவர் கிராமத்தவர்கள் அனைவரும்
சோகத்தில் மூழ்கினர்.
இப்போது
போன்று அப்போது தகவல் தொடர்பு சாதனங்கள் இருக்கவில்லை. இதனால் நாம் அனைவரும் இறக்கவில்லை.
தப்பிவிட்டோம் என்ற செய்தியை உடன்
அறிவிக்க முடியவில்லை. இருந்தும் ஒரு வாரத்தில் புதுவள்ளம்
எடுத்து மாதகல் கடற்கரையில் இருந்து மீண்டும் வேதாரணியம் சென்று இறங்கினேன். என்னை மீண்டும் கண்டதும் எனது தோழர்கள் உட்பட
அனைவரும் மிக்க மகிழ்சி அடைந்தனர். குறிப்பாக புலவர் குடும்பத்தினர் உட்பட அவரது கிராமத்தவர்கள் எம் மீது வைத்திருந்த
அன்பை கண்டு நெகிழ்ந்தேன்.
எமது
தோழர்களுக்கு மூன்று வேளையும் உணவு தயாரிப்பது, பரிமாறுவது
மற்றும் தங்க வைப்பது போன்றவை
யாவற்றையும் புலவரும் அவரது குடும்பத்தினருமே கவனித்துக் கொண்டார்கள். இது அவர்களுக்கு பெரும்
சிரமம் கொடுப்பதாக எமது தோழர்கள் கருதினார்கள்.
புலவரோ அல்லது அவரது குடும்பத்தினரோ அவ்வாறு நினைக்க வில்லையாயினும் நாங்கள் தனியாக வேறு இடம் செல்ல
வேண்டும் என விரும்பினோம். எனவே
ஒரு நல்ல இடம் ஏற்பாடு
செய்யுமாறு தோழர் தமிழரசனிடம் நாங்கள் கேட்டுக்கொண்டோம். அதன்படி அவர் பெரம்பலூருக்கு அருகில்
மலையாளப்பட்டி என்னும் இடத்தில் மலையடிவாரத்தில்
ஒரு இரகசியமான இடத்தை ஏற்பாடு செய்து கொடுத்தார். அந்த இடத்தில் எமது
தோழர்கள் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு
தமிழரசன் மற்றும் அவரது தோழர்களால் மாக்சிய அரசியல் கல்வி போதிக்கப்பட்டது.
இதனால்
அதன்பின்பு புலவரையும் அவரது குடும்பத்தவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு குறைந்துவிட்டது. எனினும் தோழர் தமிழரசன் இறந்த பின்பு புலவர் சென்னை வந்து என்னை சந்தித்தார். தோழர் தமிழரசன் மறைந்தாலும் அவர் முன்னெடுத்த பாதை
தடைபடக்கூடாது என்றும் அது தொடர்வதற்கு தன்னால்
இயன்ற பங்களிப்பு செய்ய தயார் என்று கூறினார். இது தொடர்பாக பின்னர்
பல தடவைகள் புலவர் அவர்களை நான் சந்தித்திருக்கிறேன்.
இவ்வேளையில்
தாம்பரத்திற்கு அருகில் கௌரிவாக்கம் என்னும் இடத்தில் நான்
இருந்து வருவதை அறிந்து கொண்ட கியூ பிராஞ் பொலிஸ்
ஒருநாள் என்னை கைது செய்ய முயற்சி
செய்தது. ஆனால் அந்தவூரைச் சேர்ந்த சில இளைஞர்களின் முயற்சியால்
நான் கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிக் கொண்டேன்.
தமிழகத்தில் எனக்கு நெருக்கடி அதிகரித்தமையினாலும் நாட்டில் எமது அமைப்பு பணியின்
காரணமாகவும் நான் இலங்கை திரும்பிச்
செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது. விமானம் மூலம் இலங்கை செல்ல முடிவு செய்து அதற்காக திருச்சி சென்றேன். அங்கு எனது பயணத்திற்கு வேண்டிய
ஒழுங்குகள் மேற்கொள்ள வேண்டி சில நாட்கள் தங்கியிருந்தேன்.
அவ்வேளையில் பெண்ணாடம் சென்று புலவரைச் சந்தித்த போதுதான் தோழர் லெனினைக் கண்டேன்.
தோழர்
லெனினை எனக்கு அறிமுகப்படுத்தியவர் புலவர் கலியப்பெருமாள் அவர்களே. ஒருமுறை புலவரை சந்திப்பதற்காக அவரது பெண்ணாடம் வீட்டிற்கு சென்ற போது ஒரு துடிப்பான
இளைஞரைக் காட்டி இவர் எமது அமைப்பு
தோழர், பெயர் லெனின் என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் லெனின் பெயர் கொண்டவர்களை ஈழத்திலோ அல்லது தமிழகத்திலோ நான் இதற்கு முன்னர்
சந்தித்ததில்லை. எனவே புலவரிடம் லெனின்
என்பது அவரது சொந்தப் பெயரா? அல்லது அமைப்பு பெயரா எனக் கேட்டேன். புலவர்
எனது கேள்வியின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டவராக "இவரது அப்பா ஒரு மாக்சிய உணர்வாளர்.
அதனால்தான் அவர் தன் மகனுக்கு
லெனின் என பெயர் வைத்திருக்கிறார்"
என்று காரணத்தை விளக்கினார்.
புலவரை சந்தித்துப் பேசிய பின்பு நான் பெண்ணாடம் பஸ்
நிலையத்திற்கு திரும்பி வந்தேன். அப்போது லெனின்தான் என்னை தனது சயிக்கிளில் ஏற்றிச்
சென்று இறக்கிவிட்டார். அதுமட்டுமல்ல எனக்குரிய பஸ் வரும்வரை காத்திருந்து
எனக்கு காப்பி வாங்கித் தந்து உரையாடினார்.
அப்போது அவருடனான உரையாடலில் போராட்டத்தில் அவருக்கு இருந்த ஆர்வத்தை நான் உணர்ந்தேன். லெனினுடனான
எனது முதல் சந்திப்பு ஒரு சில மணி
நேரமாயினும் போராட்டம் குறித்த அவரது ஆர்வமும் அக்கறையும் மட்டுமல்ல தோழமை
அணுகுமுறையும் அவரை நான் நினைவில்
கொள்ள வைத்தன.
பின்னாளில் இதே லெனின் தமிழ்நாடுவிடுதலைப்படைக்கு
தலைமை தாங்கி பொலிஸ் நிலையங்களை வெற்றிகரமாக தாக்குவார் என்றோ அந்த செய்திகளை புலவர்
வந்து சிறையில் இருக்கும் எனக்கு பெருமையுடன் கூறுவார் என்றோ நான் நினைத்திருக்கவில்லை.
திருச்சியில்
நான் தோழர் மாறனுடன் தங்கியிருந்தேன். அப்போது அவர் என்னிடம் சில
பயிற்சிகளை பெற விரும்பினார். எனவே
அதற்கு வசதியான இடத்தை தேடியபோது புலவர் தனது தோட்டத்திற்கு அருகில்
பெண்ணாடம் ஆற்றங்கரையில் செய்யலாம் என்றும் அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை தான் செய்து தருவதாகவும்
கூறினார். எனவே அதன்படி ஒருநாள்
மாலை நேரம் தோழர் மாறனுக்கும் அவருடன் சேர்த்து புலவர் அறிமுகப்படுத்திய இன்னொரு தோழருக்கும் தேவையான பயிற்சிகளை நான் வழங்கினேன். அப்போது
எமக்கு உதவியாகவும் பாதுகாப்பிற்காகவும் புலவரால் அனுப்பப்பட்டவர் லெனின். இது அவருடான எனது
இரண்டாவது சந்திப்பாகும்.
பயிற்சியின்
போது பாரிய சத்தங்கள் ஏற்பட்டன. இதனால் அங்கு வயல் வேலை முடிந்து
வந்து கொண்டிருந்த பெண்கள் பயந்து அலறியடித்து ஓடினார்கள். அவர்களிடம் சென்று "பயப்படாதீர்கள். கோயில் திருவிழாவுக்காக வானவெடி விட்டு பழகுகிறோம்" என சொல்லி சமாளித்தார்.
அதேவேளை அவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
பெண்ணாடம் காவல் நிலையத்திற்கு அருகில் தமது இரு நண்பர்களை
நிறுத்தியிருந்தார். ஒருவேளை பொலிஸ் சந்தேகம் கொண்டு வெளியே வந்தால் தகவல் சொல்வதற்காக அவர்களை நிறுத்தியிருந்தாக பின்னர் அவர் என்னிடம் கூறினார்.
ஆனால் நல்ல வேளையாக சத்தங்கள்
கேட்டிருந்தும் இருட்டு நேரமாகையால் பொலிசார் வெளியே வந்து பார்க்க முயலவில்லை.
பயிற்சி
முடிந்ததும் புலவர் வீட்டில் எமது இரவு உணவை
அனைவரும் உட்கொண்டோம். எல்லோரும் மிகுந்த மகிழ்வுடன் இருந்தோம். விடைபெறும்போது புலவர் எனது கரங்களைப் பற்றி
" தோழர் நீங்கள் செய்த உதவிகள் மறக்க முடியாதவை. தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தில் என்றும் நினைவு கூறத்தக்கவை. பாதுகாப்பாக ஊர் போய் சேர்ந்ததும்
தகவல் அனுப்புங்கள்" என்றார். அதற்கு நான் "என்
வரலாற்றுக் கடமையைத்தானே நான் செய்துள்ளேன்" என்று பதில்
அளித்துவிட்டு அவருடைய வீட்டிலிருந்து கிளம்பினேன். என்னையும் தோழர் மாறனையும் லெனினே சயிக்கிளில் ஏற்றிச் சென்று பெண்ணாடம் பஸ் நிலையத்தில் இறக்கி
விட்டார். அப்போது பல்வேறு இடங்களில் அவர் நிறுத்தி வைத்திருந்த
பல இளைஞர்கள் வருவதைக் கண்டபோது எனது பாதுகாப்பு குறித்து
அவர் கொண்டிருந்த அக்கறையை என்னால் உணர முடிந்தது. அதுமட்டுமன்றி
புலவர் வீட்டில் நாம் அனைவரும் உணவு
உட்கொண்டபோதும் பஸ்க்கு காத்திருக்கும் அந்த சொற்ப நேரத்திலும்
காப்பி வாங்கி கொடுத்து என்னை அருந்த வைத்த அவரது ஆர்வம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரும் அன்று எதிர்பாராதவிதமாக பயிற்சிகளில் கலந்துகொண்டார். அதனால் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் ஏற்பட்டிருப்பதை என்னால் உணர முடிந்தது. இறுதியாக
பஸ் வரும்போது நான் விடை பெற்றவேளை
அவர் எனது கரங்களை இறுகிப்
பற்றியதும் எமது பஸ் மறையும்வரை
அவர் கை ஆட்டிக்கொண்டே நின்றதும்
இன்றும் என் நினைவில் அழியாமல்
இருக்கின்றது.
ஒருமுறை
என்னை நேரில் பார்க்க விரும்பிய தோழர் இளவரசன் புலவருடன் சேர்ந்து திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். அவர் எனது வழக்கில்
இல்லாததால் என்னை பார்வையிடுவதற்கு அனுமதி அளிக்க முடியாது என்று நீதிபதி கூறிவிட்டார். இதனால் புலவர் மட்டும் அனுமதி பெற்று என்னைப் பார்த்து பேசுவதற்காக நீதிமன்ற வாசலில் பொலிஸ் வண்டிக்குள் அமர்ந்திருந்த என்னிடம் வந்தார். புலவரை யார் என்று தெரியாத
ஒரு பொலிஸ்காரர் "யோவ் பெரிசு அங்கால
போய்யா, இங்காலயெல்லாம் வரக்கூடாது" என்று மரியாதைக் குறைவாக திட்டிவிட்டார். இதனால் பெரும் கோபம் அடைந்த புலவர் உடனே அந்த பொலிஸ்காரர்
சட்டையை பிடித்து "எப்படி நீ உன்னைவிட வயசான
என்னை மரியாதைக் குறைவாய் திட்டலாம்?" எனக் கேட்டு சண்டைக்கு
போய்விட்டார். இதைப் பார்த்த எமது வழக்கு
தோழர்கள் 15 பேரும் உடனே ஓடிவந்து புலவருக்கு
ஆதரவாக குரல் கொடுத்தார்கள். அவர்கள் மட்டுமல்ல வழக்கறிஞர்கள் மற்றும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மக்கள் எல்லாம் பொலிசாருக்கு எதிராகவே குரல் எழுப்பினார்கள். விடயம் விபரீதமாக மாறுவதை உணர்ந்து கொண்ட காவல்துறை உயர் அதிகாரிகள் உடனே
தலையிட்டு அந்த பொலிஸ்காரரை புலவரிடம்
மன்னிப்பு கேட்கவைத்து பிரச்சனையை மேலும் வளர விடாமல் முடித்துக்கொண்டார்கள்.
அதன் பிறகு புலவர் என்னிடம் பேசினார். அப்போது இளவரசன் சந்திக்க வந்திருக்கும் விடயத்தை கூறினார். இளவரசன் கொடுத்தனுப்பிய 500 ரூபா பணத்தை என்னிடம்
ஒப்படைத்தார். தூரத்தில் இளவரசன் என்னை பார்த்துக்கொண்டு நிற்பது தெரிந்தது. ஆனால் அவருடன் நேரில் பேச வாய்ப்பு கிடைக்காமற்
போனது எனக்கு வருத்தமாக இருந்தது.
புலவர்
கலியபெருமாள் தன் வாழ்வின் இறுதிவரை
புரட்சியை நேசித்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக ஈழத் தமிழர்களுக்கு தனது
உறுதியான ஆதரவை எப்போதும் வழங்கியவர். 1983 க்கு முன்னர் பெரும்பாலும்
அனைத்து இயக்கங்களும் இந்திய புரட்சிகர சக்திகளுடன் தொடர்புகள் கொண்டிருந்தனர். பின்னர் இந்திய அரசுக்கு அஞ்சி தொடர்புகளை துண்டித்துவிட்டனர் அல்லது வெளிப்படையாக தொடர்பு கொள்வதை தவிர்த்தனர்.
புலவர்
கலியப்பெருமாள் தனது இறுதிக்காலங்களில் எழுதிய “மக்கள்
துணையோடு மரணத்தை வென்றேன்” என்னும் புத்தகத்தில் 113ம் பக்கத்தில் சிறைக்குள்
பிரபாகரனுடன் சந்திப்பு என்னும் தலைப்பில் எழுதிய வரிகள் வருமாறு,
"சென்னை
பாண்டி பஜாரில் பிரபாகரன் அணிக்கும் முகுந்தன் அணிக்கும் மோதல் எற்பட்டு பிரபாகரனையும் ராகவனையும் காவல் துறையினர் கைது செய்து சென்னை
மத்திய சிறையில் அடைத்தார்கள். பிரபாகரனை எங்கள் அறைக்கு அருகிலேயே அடைத்தார்கள். இராகவன் என்னிடம் பேசும்போது எங்கள் விடுதலைப் போராட்டத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா எனக் கேட்டார். “ஆம்,
உங்கள் விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கிறேன்” என்று
கூறினேன். அடுத்து “உங்கள் கட்சி ஆதரிக்கின்றதா?” என்று இராகவன் கேட்டார். “எங்கள் கட்சி ஆதரிக்கவில்லை” என்று
சொன்னேன். “வங்கதேச விடுதலையை ஆதரித்த சீனா எங்கள் விடுதலைப்
போராட்டத்தை ஆதரிக்குமா?” என்று கேள்வி எழுப்பினார். அதைப்பற்றியெல்லாம் நீங்கள் யோசிக்காதீர்கள். சீனாவுக்கும் இலங்கைக்கும் நல்ல உறவு இருக்கிறது.
மாவோ எழுதிய ராணுவப்படைப்பு என்ற நூலில் இருந்து
படிப்பினைகளைப் பெற்று உங்கள் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து செல்லுங்கள் என்று வழிகாட்டினேன்".
"நானும்
பிரபாகரனும் ஒரே சிறையில் இருந்தோம்.
அவர் தன் பகுதியிலிருந்து பெரும்பாலும்
என்னுடன் பேசுவார். அதன் பின் விடுதலையாகி
சிறையில் இருந்து சென்றுவிட்டார்கள். என்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது பிரபாகரன் என்னை இரண்டு முறை வெளியில் சந்தித்து
நலம் விசாரித்தார்".
இது
பற்றி பழ. நெடுமாறன் அவர்கள்
குறிப்பிடும்போது
“சென்னை
சிறையில் புலவர் இருந்தபோது தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களும் சில மாதங்கள் அந்த
சிறையில் இருந்தார். சிறையில் இருவரும் மிக நெருக்கமாக பழகி
நட்பு கொண்டனர். பிற்காலத்தில் பிரபாகரன் அவர்கள் என்னிடம் பேசும்போது நான் பார்த்த தமிழ்நாட்டு
தலைவர்களில் உறுதியும் எது நேர்ந்தாலும் கலங்காத
உள்ளமும் நிறைந்தவர் புலவர் கலியபெருமாள் ஆவார். உண்மையான மக்கள் தொண்டர் அவர் என வாயாரப்
புகழ்ந்துரைத்தது இன்னமும் எனது செவிகளில் ரீங்காரம்
செய்து கொண்டிருக்கிறது” என்று
குறிப்பிட்டுள்ளார்.
புலவர்
தன் வாழ்வின் இறுதிக் கணம்வரை ஈழத் தமிழர்களுக்கு உறுதியான
ஆதரவை வழங்கியுள்ளார். அதனாலேயே அவர் ஈழத் தமிழர்களுக்கு
ஆதரவாக நடத்தப்பட்ட கொடைக்கானல் டிவி டவர் வெடிகுண்டு
வழக்கில் தமிழக காவல்துறையால் இணைக்கப்பட்டார். வயதான காலத்தில் வழக்கின் நிமித்தம் அலைக்கழிக்கப்ட்டபோதும் ஈழத் தமிழர்களுக்கான தனது
ஆதரவை ஒருபோதும் அவர் கைவிட்டதில்லை. தமிழின
விடுதலைக்காக உழைத்த புலவர் கலியபெருமாள் அவர்களை ஈழத் தமிழ் மக்கள்
என்றும் நினைவில் கொள்வர். இது உறுதி.
ஈழத்
தமிழ் மக்களின் போராட்டம் குறித்து புலவர் அவர்களின் கருத்தை பதிவு செய்ய விரும்பிய நான் அது தொடர்பாக
ஒரு வினாக் கொத்தை தயாரித்து தோழர் முகிலனுக்கு அனுப்பியிருந்தேன். தோழரின் கருத்தை வீடியோவில் பதிவு செய்து அனுப்பும்படி தோழர் முகிலனிடம் நான் கேட்டிருந்தேன். தோழர்
முகிலனும் உடனே புலவரை தொலைபேசியில்
தொடர்பு கொண்டு கேட்டிருக்கிறார். புலவரும் மிக்க மகிழ்சியுடன் “தாராளமாக செய்யலாம். நான் இப்ப கொஞ்சம்
உடல் நிலை சரியிலாமல் இருக்கிறேன்.
சீரானதும் வாருங்கள்” என்று கூறியிருக்கிறார். ஆனால் அதுவே அவரது இறுதியான சுகயீனமாக இருக்கப்போகிறது என்று தோழர் முகிலனும் நினைக்கவில்லை. நானும் நினைக்கவில்லை. புலவரின் கருத்தை வீடியோவாக பதிவு செய்து அனுப்பவதாக கூறிய தோழர் முகிலன் இறுதியில் புலவரின் மரண நிகழ்வையே வீடியோவாக
அனுப்பி வைத்தார்.
புலவரும்
தோழர் தமிழரசனும் தங்களது அனுபவங்கள் குறித்து பலதடவைகள் என்னிடம் கூறியிருக்கின்றனர். தோழர் தமிழரசனுடன் ஒன்றாக பயணித்த புலவர் ஒரு கட்டத்தில் ஒதுங்கியிருக்க
முடிவு செய்த காலகட்டத்திலும் இருவரும் ஒருவர் மீது மற்றவர் பரஸ்பரம் மதிப்பு
வைத்திருந்தனர்.
No comments:
Post a Comment