ஜனாதிபதி மைத்திரி- ஹலோ மிஸ்டர் சுமந்திரன்! மிஸ்டர் சம்பந்தனை எழுப்புங்கள். இந்தமுறை எப்படி எங்களை ஜநா வில காப்பாற்றப் போறீங்க? சின்னப் பெம்பிளைப் பிள்ளை எல்லாம் நடந்து நீதி கேட்டு ஜெனீவா வருகினமாம்.
சுமந்திரன்- நீங்க ஒன்றுக்கும் யோசியாதீங்க சேர். நானும் சம்பந்தர் ஜயாவும் அதைப் பற்றித்தான் இப்ப பேசிக் கொண்டிருந்தோம்.
ஜனாதிபதி மைத்திரி- முதல்ல நடந்தது இனப்படுகொலை அல்ல என்று எங்களுக்காக பேசினீங்க. அப்புறம் நாங்கள் கேட்காமலே எங்களுக்கு கால அவகாசம் வாங்கித் தந்தீங்க. இந்த முறை என்ன செய்யப் போறீங்க?
சுமந்திரன்- சேர்! நீங்க சம்பந்தர் ஜயாவுக்கு பதவி தந்தீங்க. இரண்டு சொகுசு பங்களா தந்தீங்க. 6 ஜீப் வண்டியும் 30 பொலிஸ் பாதுகாப்பும் தந்திருக்கீங்க. இப்போ பதவி போனாலும்கூட தந்த பங்களாவை பறிக்கல்லை. விட்டு வைச்சிருக்கீங்க. எனக்குகூட ஜனாதிபதி சட்டத்தரணி பதவி தந்தீங்க. எஸ்.ரி.எவ் பொலிஸ் பாதுகாப்பு தந்தீங்க. அதையெல்லாம் மறக்காமல் நன்றியுடன் இருப்போம்.
ஜனாதிபதி மைத்திரி- இன்னும் என்ன வேண்டுமானாலும் கேளுங்க மிஸ்டர் சுமந்திரன். நிச்சயம் தருகிறோம். ஆனால் இம்முறையும் எங்களை எப்படியும் ஜ.நா வில காப்பாற்றி விடுங்க.
சுமந்திரன்- “இப்ப இருக்கிற அரசு நல்லாட்சி செய்கிறது. அதில் எமக்கு நம்பிக்கை இருக்கிறது” என்று சம்பந்தர் அய்யா அமெரிக்க தூதுவரிடம் கூறிவிட்டார். இந்திய அரசை நீங்கள் கொஞ்சம் கவனித்தால் அப்புறம் ஜ.நா வில் எந்தப் பிரச்சனையும் வராது சேர்.
ஜனாதிபதி மைத்திரி- அதுதான் அவர்கள் கேட்ட பலாலி விமான நிலையம் கொடுத்தாயிற்று. காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் சீமெந்து தொழிற்சாலை கொடுத்தாயிற்று. திருகோணமலை துறைமுகமும் கொடுத்தாயிற்று. அப்புறம் என்ன?
சுமந்திரன்- இல்லை சேர். அந்த 50 ஆயிரம் வீட்டுத்திட்டத்தையும் தமக்கு தர வேண்டும் என்று இந்திய அரசு எதிர்பார்க்கிறது
ஜனாதிபதி மைத்திரி – அதெப்படி சுமந்திரன் கொடுக்க முடியும்? இந்தியா ஒரு வீட்டுக்கு 7 லட்சம் ரூபா சொல்கிறது. ஆனால் சீனா அதே வீட்டை 4 லட்சம் ரூபாவில் கட்டி தருவதாக கூறுகிறது. நான் இந்தியாவுக்கு கொடுத்தால் அப்புறம் ஜே.வி.பி பாராளுமன்றத்தில் கேள்வி கேட்குமே.
சுமந்திரன்- எனக்கு விளங்குது சேர். ஆனால் வடபகுதி கடலில் எண்ணெய் ஆய்வுக்கு சீனாவுக்கு வழங்கியதையும் இந்தியா விரும்பவில்லை.
ஜனாதிபதி மைத்திரி- ஏற்கனவே மன்னாரில் 6 எண்ணெய்வயல் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றில்கூட இன்னும் வேலை ஆரம்பிக்கவில்லை. அப்படியிருக்க பருத்தித்துறைகடல் எண்ணெய் வளத்தையும் எப்படி இந்தியாவுக்கு கொடுக்க முடியும்?
சுமந்திரன் - என்னவோ சேர். ஆனால் “மகிந்தவை முற்றிலும் பகைக்க வேண்டாம். ஒரு தொடர்பை பேணுங்கள்” என்று இந்திய தூதர் சம்பந்தர் ஜயாவிடம் கூறியுள்ளார். எனவே கொஞ்சம் கவனமாய் இருங்கள்.
ஜனாதிபதி மைத்திரி – என்னது? அப்ப திருப்பதிக்கு ஒருக்கால் தரிசனம் போக வேண்டும் போல் இருக்கிறது. சரி பரவாயில்லை. ஆனால் நீங்க ஜநா விடயத்தை கவனமாக பாருங்க.
No comments:
Post a Comment