•இரண்டு மரணங்கள்
அதுவும் பெண் மரணங்கள்
அதுவும் பெண் மரணங்கள்
ஒன்று தமிழ்நாட்டில் நடந்த மரணம். இன்னொன்று கனடாவில் நடந்த மரணம். இரண்டிலும் பெண் மரணமடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் சாலை ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த கட்அவுட் விழுந்து சாலையில் சென்று கொண்டிருந்த பெண் மரணமடைந்துள்ளார்.
இதற்கு எதிராக தமிழக மக்கள் காட்டிய எழுச்சி இனி கட்அவட் வைப்பதில்லை என்ற அறிவிப்புகளை அரசியல் கட்சிகளை செய்ய வைத்துள்ளது.
ஆனால் கனடாவில் ஒரு தமிழ் பெண் தன் கணவனால் பட்டப்பகலில் ரோட்டில் வைத்து கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருக்கிறார். இது குறித்து தமிழ் மக்கள் எதிர்ப்பு குரல் எழுப்பாதது ஆச்சரியமாக இருக்கிறது.
கனடா போன்ற மேலைத்தேய நாடுகளில் கணவன் மனைவியினர் ஒருவரை ஒருவர் பிடிக்க வில்லை என்றால் இலகுவாக பிரிந்து கொள்ள முடியும்.
இலகுவாக விவாகரத்து பெற்றுக்கொள்ள முடியும். அதுமட்டுமல்ல பொருளாதார தேவைகளுக்காகவும் ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்க வேண்டிய நிர்ப்பந்தமும்கூட இல்லை.
பிரிந்து தனியாக இருப்பவர்களுக்கு தேவையான பொருளாதார உதவிகளை அரசே வழங்கி வருகிறது.
இந்நிலையில் ஒரு பெண் தன் கணவனால் கனடாவில் கொலை செய்யப்பட்டிருப்து காட்டுமிராண்டித்தனமாகும்.
இதற்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். இனி இதுபோன்று இன்னொரு கொலை நடக்க அனுமதிக்கக்கூடாது.
திருமணத்தின் பின் வரதட்சணைக் கொடுமை காரணமாக பல பெண்கள் காஸ் வெடித்து கொல்லப்படுவது இந்தியாவில் அதிகம். ஏனெனில் அங்கு திருமணத்தின் பின் பெண் புருஷன் வீட்டில் சென்று வாழ்கிறாள்.
ஆனால் ஈழத்தில் இவ்வாறான கொலைகள் அரிது. ஏனெனில் இங்கு திருமணத்தின் பின்பும் பெண் தன் தாய் தந்தையருடன் தன் பிறந்த வீட்டில்தான் வாழுகிறாள்.
இதை “வீட்டோடு மாப்பிளை” என்று இந்தியாவில் கேலி செய்கிறார்கள். ஆனால் என்னைப் பொருத்தவரையில் ஈழத் தமிழர்கள்; பெண் பாதுகாப்பு குறித்து முற்காலத்திலேயே சிந்தித்துள்ளார்கள் என்றே தோன்றுகிறது.
அதுமட்டுமல்ல பெண் பிள்ளைக்கே வீடு சீதனமாக கொடுக்கப்படுவதும் பெண் பிள்ளைகளே தம் தாய் தந்தையரை கடைசிவரை பராமரிப்பதும் ஒரு சிறந்த சமூக ஒழுங்காகவே எனக்கு தோன்றுகிறது.
இந்த பெண் தன் தாய் தந்தையரை விட்டு தன் உறவினர்களை விட்டு கணவனை மட்டும் நம்பி கனடா வந்திருக்கிறார். அவரை கனடா பொலிஸ் மட்டுமல்ல கனடாவில் இருக்கும் 3 லட்சம் தமிழர்களும் பாதுகாக்க தவறிவிட்டனர்.
இனியாவது இப்படி ஒரு மரணம் எந்த பெண்ணுக்கும் நடக்காமல் விழித்துக் கொள்வோம்!
No comments:
Post a Comment