Sunday, June 30, 2024
ஆடுகள் எப்போதும் ஓநாயையே நம்புகின்றன!
•ஆடுகள் எப்போதும் ஓநாயையே நம்புகின்றன!
இத்தனை அழிவுக்கு பின்னரும் இத்தனை அழிவிற்கும் காரணமான இந்திய அரசு உதவும் என்று இன்னமும் நம்மில் சிலர் நம்புகின்றனர்.
அதுவும் நாங்கள் இந்து என்று சொன்னால் இந்திய இந்து அரசு உதவும் என்றுகூட சிலர் நம்புகின்றனர்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் இதே நாளில் பாஜக தலைவர் அண்ணாமலை யாழ்ப்பாணம் வந்தார்.
அப்போது , வடக்கும் கிழக்கும் இந்திய பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அவர் கூறினார்.
அவர் குறிப்பிட்ட அந்த பிரதேசத்தில்தான் சிங்கள அரசு இந்து கோயில்களை அழித்துவிட்டு புத்த விகாரைகளைக் கட்டுகிறது.
அவர் குறிப்பிட்ட அந்த தமிழர் பிரதேசத்தில்தான் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை சிங்கள அரசு நடத்துகிறது.
கச்சதீவில் வைக்கப்பட்ட புத்தர் சிலையை பாப்பரசர் மூலம் மன்னார் ஆயரால் நீக்க முடிகிறது.
ஆனால் இந்து ஆலயங்களை அழித்துவிட்டு புத்த விகாரை கட்டப்படுவதை இந்திய பிரதமர் மூலம் அண்ணாமலையால் நிறுத்த முடியவில்லை.
மாறாக தமிழின அழிப்பை மேற்கொள்ளும் சிங்கள அரசுக்கு இந்திய அரசானது கடன்களையும் உதவிகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறது.
இந் நிலையில் லண்டனில் சிலர் அண்ணாமலையை அழைத்து உறவுப்பாலம் கட்டினார்கள்.
இதுவரை சம்பந்தர் ஐயா கட்டிய ஈழ இந்திய உறவுப்பாலத்தால் ஈழத் தமிழர் பெற்ற நன்மைகள் என்ன?
இந்நிலையில் சம்பந்தர் ஐயாவைவிட அப்படி என்ன பெரிய பாலத்தை இந்த லண்டன் தமிழ் அமைப்பினரால் கட்டிவிட முடியும்?
குறைந்த பட்சம் இந்தியாவில் 40 வருடங்களாக அகதிகளாக இருப்பவர்களுக்கு இவர்களால் குடியுரிமை பெற்றுக் கொடுக்க முடியுமா?
அல்லது, சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளையாவது விடுதலை செய்ய முடியுமா?
இதுவரை சம்பந்தர் ஐயா இந்திய தூதரை அடிக்கடி சந்தித்து வந்தார். இப்போது சுமந்திரன் சந்திக்க ஆரம்பித்திருக்கிறார்.
இந்த சந்திப்புகளால் இதுவரை இவர்கள் பெற்ற தீர்வு என்ன? இவர்கள் எந்த அடிப்படையில் தொடர்ந்தும் இந்திய அரசை நம்பி வருகின்றனர்?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment