கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் இருக்கும் தோழர் இந்து ( சிறீதர் )அவர்கள் “ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தோழர் தமிழரசனிடம் அரசியல் வகுப்பு பெற்ற “பேரவை”த் தோழர்களில் தோழர் இந்தும் ஒருவர். அவர் 6 வருடங்களுக்கு மேலாக சிறை வாழ்வை அனுபவித்தவர்.
தோழர் இந்து எனது நூல் குறித்து தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளமைக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அவர் தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு,
தோழர் தமிழரசனுடைய அரசியல் பயிற்சி முகாமில் நானும் மாக்சிய லெனினிய மாவோ சேதுங் சிந்தனையை அவரிடம் பயிலும் போது இச் சிந்தனைகளில் அவர் பெற்றிருந்த ஆழமான அறிவும் தெளிவும் என்னை வியக்க வைத்தது.
மாசேதுங் கூறிய “மக்களோடு சேர்ந்து உழையுங்கள் மக்களோடு சேர்ந்து உண்ணுங்கள், மக்களோடு சேர்ந்து உறங்குங்கள,; மக்களுக்கு கற்றுக்கொடுங்கள், மக்களிடமிருந்தே கற்றுக்கொள்ளுங்கள்” இவற்றை தோழர் தமிழரசன் தன்னுடைய வாழ்க்கையில் வாழ்ந்து காட்டிய ஒருவராகவும் காணப்பட்டார்.
தோழர் பாலன் எழுதிய இந்நூலை படிக்கும்போது தோழர் தமிழரசனுடன் பழகிய அந்த நாட்கள் மீண்டும் நினைவுக்கு வருகின்றன. தோழர் பாலன் மிகச் சரியாகவே வரலாற்றை பதிவு செய்துள்ளார். அவருடைய இந்தப் பணி நிச்சயம் பாராட்டுக்குரியது.
இந் நூலுக்காக தோழர் பாலன் தோழர் சாந்தனுடன் நடத்திய உரையாடல் போன்று என்னுடனும் நடத்தியிருந்தால் நானும் தோழர் தமிழரசன் குறித்து பல இனிய நினைவுகளை கூறியிருக்க முடியும். அவரது அடுத்த நூலில் தோழர் தமிழரசன் குறித்த எனது கருத்துக்களையும் இடம்பெற வைப்பார் என நம்புகிறேன்.
தோழர் பாலன் தொடர்ந்தும் இதுபோன்ற சிறந்த நூல்களை எழுத வேண்டும். அவருக்கு என் வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment