Friday, January 19, 2018

தோழர் சிவலிங்கம் அவர்கள் “ஒரு ஈழப்போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் குறித்து கருத்துக்கள் தெரிவித்துள்ளார்.

லண்டனில் இருக்கும் தோழர் சிவலிங்கம் அவர்கள் “ஒரு ஈழப்போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் குறித்து கருத்துக்கள் தெரிவித்துள்ளார்.
தோழர் சிவலிங்கம் அவர்கள் ஒரு அரசியல் ஆய்வாளர். அவர் நீண்டகால இடதுசாரிச் சிந்தனையும் செயற்பாடும் கொண்டவர். முற்போக்கு அரசியல் நடவடிக்கைகளுக்கு தனது ஆதரவையும் பங்களிப்பையும் தொடர்ந்து நல்கி வருபவர்.
எனது நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ள தோழர் சிவலிங்கம் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தோழர் சிவலிங்கம் அவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு,
ஓர் ஈழப் போராளியின் பார்வையில் ‘தோழர். தமிழரசன்’ எனும் தலைப்பிலான தோழர் பாலன் அவர்களால் தயாரிக்கப்பட்ட நூல் கிடைக்கப்பெற்றேன்.
மிகவும் கைக்கடக்கமான சிறிய நூலாயினும் விவாதங்கள் பலவற்றைத் தூண்டும் கோட்பாடுகளையும், சம்பவங்களையும் அது கொண்டிருக்கிறது. இந்தியச் சிறைகளில் ஓர் அரசியல் கைதியாக அனுபவங்களைப் பெற்றிருந்த தோழர். பாலன் தனது சிறை அனுபவங்களை, அத் தண்டனையை அனுபவிப்பதற்கான பின் புலங்களை. தனது அரசியல் நட்பு சக்திகளை அரசியல் கோட்பாட்டு பின்னணியில் விளக்கங்களுடன் தந்துள்ளார்.
இச் சம்பவங்கள் இடம்பெற்ற காலங்கள் ஓடிவிட்ட போதிலும், வரலாறு பதியப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இச் சிறிய ஆவணம் வெளிவந்திருப்பது நன் முயற்சியே. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற நிகழ்வுகளைத் தற்போது தரும்போது அவை ஓர் வரலாறு என்ற கணிப்பைப் பெற்று விடுகின்றன. 1987ம் ஆண்டு தமிழ் நாட்டினைச் சேர்ந்த பொதுவுடமைக் கட்சியின் தலைவரான தமிழரசன் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டபோது கொல்லப்படுகிறார். இவர் நம்பிய புரட்சிகர அரசியல் குறித்து இன்று பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
இவற்றின் பின்புலத்திலிருந்து இந் நூலைப் பார்க்கிறேன். சமூக மாற்றத்தை நோக்கிய போராட்டங்கள் உலகெங்கும் நடைபெற்றன. தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. சமூக ஒடுக்குமுறை, அதிகார சக்திகளின் ஒடுக்குமுறை போன்றன முதலாளித்துவத்தின் பிரிக்க முடியாத கூறாக தொடரும் வரலாறாகும். சமூக, பொருளாதார அநீதிகளுக்கு எதிராக ஒடுக்கப்படும் வர்க்கங்கள் கூட்டாகவும், தனித்தும் போராடுகின்றன. இவை சமூகத்தின் பல்வேறு மட்டங்களில் வெவ்வேறு தோற்றங்களில் நிகழ்கின்றன.
இந்திய மண்ணில் சமூக மற்றும் பொருளாதார விடுதலைக்காக பல்வேறு தளங்களில் நடைபெறும் போராட்டங்கள் அதே மாதிரியான ஒடுக்கு முறைக்குள் சிக்கிப் போராடும் சக்திகளோடு தேச எல்லைகள் கடந்து ஏதோ ஒரு விதத்தில் இணைந்து தமது பலத்தை அதிகரிக்கவும், விஸ்தரிக்கவும் முயற்சிக்கின்றன.
அவ் வகையில் அமைந்த ஓர் வரலாறே தோழர். தமிழரசனின் வீர வரலாறாகவும் உள்ளது. அவரால் தோற்றுவிக்கப்பட்ட பொதுவுடமைக் கட்சிக்கும், இலங்கையில் குடியேற்றவாத எச்ச சொச்சங்களுடனும், பேரினவாத ஒடக்குமுறைகளுக்கும் எதிராக போராடும் தேசிய சிறுபான்மை இனங்களின் வரலாறும் இணைந்து சென்றதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.
ஆனால் இந்த இயக்கங்கள் தத்தமது ஆரம்ப காலத்தில் இயக்கச் செயற்பாடுகளுக்காக மேற்கொண்ட அரச கட்டுமானங்களுக்கு எதிரான உதாரணமாக பொலீஸ் நிலைய தாக்குதல்களும், வங்கிக் கொள்ளைகளும் இன்று பயங்கரவாத செயற்பாடுகளாக வர்ணிக்கப்படும் பின்னணியில் இந் நூல் சமூக, பொருளாதார விடுதலையை நோக்கிய போராட்டங்கள் பலம் வாய்ந்த முதலாளித்துவ கட்டுமானங்களான பொலீஸ், ராணுவம், நீதிமன்றம், சிறைச்சாலை என நீண்டு செல்லும் நிறுவனங்களுடன் போராட நிர்ப்பந்திக்கப்படுகின்றன.
முதலாளித்துவ நிறுவனங்களும், அதன் ஊது குழல்களான ஊடகங்களும் இவற்றைச் சமூக விரோத செயல்களாகக் காட்டிப் போராளிகளைச் சமூகத்திலிருந்தும் தனிமைப்படுத்துகின்றன. இவ் வகையான சம்பவங்கள் குறிப்பாக சமூக மாற்றத்தை உந்தித் தள்ள உதவும் போராட்டத் தலைவர்கள் தேடி அழிக்கப்பட்டு அல்லது சிறைப்படுத்தப்பட்டு முளையிலேயே கிள்ளி எறியப்படுகின்றனர்.
இந் நூலில் வெளிப்படும் போராளிகள் சாமான்யர்கள் அல்ல. இவர்கள் சிறந்த கல்வியைப் பெற்ற அறிவாளிகள். இதனால்தானோ என்னவோ அநியாயங்களை அவர்களால் ஜீரணிக்க முடிவதில்லை.
மூன்றாம் உலக நாடுகளில் இடம்பெற்ற குடியேற்ற ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் ஏகாதிபத்தியத்திற்கு எதிரானவை மட்டுமல்ல, அவை சமூக ஏற்றத்தாழ்விற்கும் எதிரானதாக இருந்தன. இதனால் குடியேற்ற ஆட்சி முடிவுக்கு வந்த பின்னரும் முதலாளித்துவத்திற்கு எதிரான போர் தொடர்ந்தும் நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஏனெனில் குடியேற்ற ஆட்சியாளர்கள், ஏகாதிபத்திய சார்பு முதலாளித்துவ சக்திகளிடமே அதற்கு ஏற்றவாறான ஆட்சிப் பொறி முறையுடன் நாட்டை வழங்கிச் சென்றனர். அதுவே பாராளுமன்ற ஆட்சி முறையாகும்.
குடியேற்ற ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற போராட்டங்களுக்கான கோட்பாடுகளை மாக்சிச, லெனினிய, மாவோ சிந்தனைகள் வழங்கின. முதலாளித்துவம் என்பது தனது நலன்களைப் பாதுகாக்கும் பொருட்டு ஈற்றில் ஆயுதங்களைப் பயன்படுத்தத் தவறாது எனப் புரிந்த கொண்ட இச் சிந்தனையாளர்கள் அவ்வாறான சூழலில் ஒடுக்கப்படும் வர்க்கம் தவிர்க்க முடியாமல் ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்படும் என்பதால் அவர்களும் தயாராக இருத்தல் அவசியம் என்றனர்.
இத்தகைய கோட்பாடுகளில் ஒன்றான மாசேதுங் சிந்தனைகள் தோழர். தமிழரசனின் பொதுவுடமைக் கட்சி, பேரவை என்பவற்றை இணைந்து செயற்பட உதவின. இலங்கையில் நிலவும் சாதி ஒடுக்குமுறை, சிங்கள பௌத்த பேரினவாதம் என்பவற்றின் விகாரத் தோற்றங்களைத் தமிழ் நாட்டு மக்கள் அறிவதற்கு இந்த உறவுகள் வழி வகுத்தன.
இந் நூலில் வெளிப்படுத்தப்படும் புரட்சி பற்றிய கோட்பாட்டு விவாதங்கள் இன்று மேலும் கேள்விக்குட்படுத்தப்பட்டு வருகின்றன. சீனக் கம்யூ. கட்சி ‘ சீனக் குணாம்சங்களுடன் சோசலிச நிர்மாணம்’ என புதிய சிந்தனைகளை மாக்சிச, லெனினிய, மாஓ, டென்சியா சிந்தனைகள் என புதிய வியாக்கியானங்களுடன் சமீபத்தில் இடம்பெற்ற தனது 19வது காங்கிரசில் முன்வைத்துள்ளது.
அதாவது முதலாளித்துவத்திலுள்ள முன்னேற்றகரமான கூறுகளை சீனக் கம்யூ. கட்சி தனது கோட்பாடுகளில் இணைத்துள்ளது. எனவே ஏற்கெனவே குறிப்பிட்ட கோட்பாடுகளில் பல கைவிடப்பட்டு புதியன இணைந்துள்ளன. இதன் விளக்கங்கள் விவாதத்திற்குரியன. இதனால் புரட்சி என்பது புதிய அர்த்தத்தில் பொருளாதார மாற்றம் என்ற வகையில், வறுமையை ஒழித்து உற்பத்தியை அதிகரித்தல் என உணர்த்தப்படுகிறது. எனவே மாஓ சிந்தனைகள் தற்போது சீனாவிற்கு மட்டுமே உரியதான விதத்தில் மாற்றப்படுகின்றன.
இந் நூலில் இலங்கையின் அரசியல் பொருளாதார நிலமைகளும் தரப்பட்டுள்ளன. இலங்கையில் விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் நிலைத்திருந்த வேளையில் முக்கியமான கனிம வளங்கள் பாதுகாக்கப்பட்ட விபரங்களும், தற்போது அவை தனியார் மயமாக்கப்பட்டுச் சுரண்டப்படும் அவலங்களும் தரப்பட்டுள்ளன.
இதிலுள்ள பிரதான அம்சம் என்னவெனில் இந்திய அரசு தமிழ் மக்களுக்கு உதவ முன்வந்தமைக்கான காரணிகளின் பின்னணி அனுபவங்கள் மூலமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
உதாரணமாக பாலசிங்கம், சந்திரகாசன் ஆகியோர் அமெரிக்க சி ஐ ஏ உளவாளிகள் என அடையாளப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்ட பின் தமிழ் நாட்டு மக்களின் அழுத்தம் காரணமாக மீள அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் செய்தியாகும். இந்திய எதிர்ப்பு உளவாளிகள் எனக் கருதப்பட்டவர்கள் எவ்வாறு நாட்டிற்குள் மீண்டும் அழைக்கப்பட்டார்கள்? அவ்வாறானால் அரசின் குற்றச்சாட்டுகள் தவறானவை அல்லது மக்கள் பலம் அரசின் போக்கை மாற்றக்கூடியது என்பதற்கு இது நல்ல உதாரணம் என்பதாகும்.
‘தமிழக மக்கள் இலங்கைத் தமிழர் பிர்ச்சனையில் ஒருமித்த ஆதரவை வழங்கினார்கள். ஆனால் பல ஈழப் போராளி அமைப்புகள் இந்திய அரசை நம்பிய அளவிற்கு தமிழக மக்களை நம்பவில்லை. இந்திய அரசு செய்த உதவிகளுக்குத் தமிழக மக்களே காரணம் என்பதையும் உணரவில்லை.’
இவ்வாறாக இந் நூல் குறிப்பிட்டுச் செல்கிறது.
இலங்கை அரசு குறித்த இந்திய அரசின் நிலைப்பாடுகள் என்பது குறிப்பாக தமிழ் மக்களை அவர்கள் எவ்வாறு கணிக்கிறார்கள்? இயல்பாகவே இந்திய நலன்களுடன் இணைந்து செல்லும் சக்தியாக கருதினார்களா? அல்லது வெறுமனே இலங்கை அரசை எந் நேரமும் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கு உதவும் துருப்புச் சீட்டாக கருதினார்களா?
அவ்வாறானால் தமிழக மக்கள் இப் பிரச்சனையை எவ்வாறு நோக்கினார்கள்? குறிப்பாக தமிழக அரசியல் கட்சிகள் இலங்கைத் தமிழர் பிரச்சனையைத் தத்தமது அரசியல் தேவைக்கே பயன்படுத்தினர். தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆட்சிக் காலத்தில்தான்; இறுதிப் போரின் போது பல ஆயிரம் மக்கள் இறந்தார்கள். இக் கட்சிகள் மத்திய அரசின் போக்கிற்கு ஆதரவாகவே செயற்பட்டன. இந்த வகையில் ஒரு புறத்தில் சாமான்ய இந்திய குடிமகன் இக் கொடுமைகளை எதிர்த்துத் தமது உயிர்களைத் தியாகம் செய்யும் போது அவர்களின் அரசு மறுபக்கம் செயற்பட்டுள்ளது.
இலங்கைத் தேசிய இனங்கள் தமது எதிர்காலம் தொடர்பான ஆதரவிற்கு இந்தியாவை எப்படி அணுகுவது? என்பது விவாதப் பொருளாகவே உள்ளது. ஏமாற்றம் என்பது முடிவுப் பொருளாக இருக்கையில் இவ் விவாதங்கள் அவசியமாகவே உள்ளன.
சமீப கால சர்வதேசிய சமூக, பொருளாதார,அரசியல் மாற்றங்களின் பின்னணியில் புதிய அரசியல் பாதைக்கான புதிய விவாதங்களை நகர்த்த இந் நூல் உதவலாம் என நம்புகிறேன்.

No comments:

Post a Comment