Tuesday, April 30, 2024

1994ல் நான் துறையூர் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருந்தேன்.

1994ல் நான் துறையூர் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருந்தேன். அப்போது தமிழ்நாட்டில் ஜெயா அம்மையார் ஆட்சி நடைபெற்றது. அவ்வேளை கல்வி அமைச்சர் ஒருமுறை சேலத்திற்கு விஜயம் செய்தார். அவரை வரவேற்பதற்காக மாணவர்கள் நீண்டநேரம் வெய்யிலில் காத்திருக்க வைப்பட்டனர். இதனால் சில மாணவர்கள் மயக்கமுற்று விழுந்துவிட்டனர். இது மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்;பலையை தோற்றுவித்தது. அதையடுத்து “மாணவர்களை அரசியல் நிகழ்வில் பங்குபற்ற வைக்கலாமா?” என்றதொரு கட்டுரை போட்டியை தினமணி பத்திரிகையில் ஆசிரியர் மாலன் அறிவித்தார். மாணவர்களை அரசியலில் பங்குபற்ற வைக்க வேண்டும். இன்னும் அதிகமாக பங்குபற்ற வைக்க வேண்டும் என நான் ஒரு கட்டுரை எழுதி அனுப்பினேன். எல்லோரும் மாணவர்களை பங்குபற்ற வைக்கக்கூடாது என கட்டுரை எழுதிய நிலையில் நான் பங்குபற்ற வைக்க வேண்டும் என்று எழுதியதோடு எனக்கு அதில் முதல் பரிசும் கிடைத்தது. நான் எனது அக் கட்டுரையில் ஒரு உதாரணத்தை சுட்டிக்காட்டியிருந்தேன். இலங்கை கம்யுனிஸ்ட் தலைவர் ஒருவர் ரஸ்சியாவுக்கு சென்றிருந்தார். அப்போது அவர் ஒரு சிறுவர் பாடசாலையையும் காணச் சென்றார். அங்கிருந்த வெள்ளைநிற மாணவர்கள் எவ்வித கூச்சமும் தயக்கமும் இன்றி சகஜமாக தன்னுடன் பழகியது அவருக்கு ஆச்சரியம் கொடுத்தது. அதுமட்டுமன்றி அவர் அவ் மாணவர்களின் அறிவுதிறனை சோதிக்க விரும்பி “இரண்டு ரூபா பொருள் ஒன்றை நாலு ரூபாவுக்கு விற்றால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?” என கேட்டார். அதற்கு அந்த மாணவர்கள் ஆறு மாதம் தண்டனை கிடைக்கும் என கூறினார்கள். ஆம். அப்போது ஸ்டாலின் தலைமையில் சோசலிச ஆட்சி ரஸ்சியாவில் நடைபெற்றது. அங்கு இவ்வாறு பொருட்களை அதிக விலையில் விற்பது குற்றம். இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் குழந்தைகள் எப்படிப்பட்ட சமூகத்தில் வளர்க்கப்படுகிறார்களோ அதையே அவர்கள் பிரதிபலிப்பார்கள். எனவே சமூகம் அமைதியாக வாழ மதம் தேவை என்று நினைப்பது தவறு. மாறாக அதற்குரிய கல்வி மற்றும் அரசே தேவை.

No comments:

Post a Comment