Tuesday, April 30, 2024
மக்களோடு சேர்ந்து உழையுங்கள்!
• மக்களோடு சேர்ந்து உழையுங்கள்!
• மக்களோடு சேர்ந்து உண்ணுங்கள்!
• மக்களோடு சேர்ந்து உறங்குங்கள்!
தோழர்மாஓ சேதுங் சிந்தனையை கற்றுத் தந்த தோழர் தமிழரசன்!
1984ல் தமிழ்நாட்டில் மலையாளப்பட்டி என்னும் இடத்தில் அமைந்திருந்த அரசியல் பயிற்சி முகாமில் எமது தோழர்களுக்கு தோழர் தமிழரசன் அவர்கள் மாக்சிய தத்துவங்களை போதித்தார்.
அப்போது ஒரு நாள் பெரம்பலூருக்கு அருகில் இருந்த மிகவும் வறிய மக்களின் அழைப்பின் பேரில் எமது சில தோழர்களை அழைத்துக்கொண்டு சென்றார்.
அந்த மக்கள் ஒருவேளை உணவுக்கே மிகவும் கஸ்டப்படுபவர்கள். இருப்பினும் அவர்கள் ஈழப்போராளிகளுக்கு உணவு வழங்கவேண்டும் என்று ஆசைப்பட்டதனால் தோழர் தமிழரசன் எமது தோழர்களை அவர்களது இடத்திற்கு அழைத்து சென்றார்.
உணவு உண்பதற்கு முன்னர் எல்லோரும் குளத்தில் குளிக்கலாம் என்று தோழர் தமிழரசன் கூறினார்.
இதைக் கேட்டதும் எமது தோழர்கள் மிகவும் மகிழ்வு கொண்டு குளத்தை நோக்கி ஓடினார்கள்.
மிகவும் ஆர்வமுடன் குளிப்பதற்காக ஒடியவர்கள் குளிக்காமல் குளக்கரையில் நிற்பதைக் கண்ட தோழர் தமிழரசன் ஆச்சரியத்துடன் ஏன் என்று வினவினார்.
எமது தோழர்கள் என்னதான் பாட்டாளி வர்க்க சிந்தனை கொண்டிருந்தாலும் அவர்கள் பெரும்பாலும் மத்தியதர வர்க்கத்தில் இருந்து வந்தவர்கள்.
எனவே அவர்களின் உணவு உடை பழக்க வழக்கங்களில் அந்த வர்க்க குணாம்சம் இருக்கவே செய்தது.
அந்த குளம் குட்டையாகவே இருந்தது. கால் பாதம் நனையும் அளவிற்கே தண்ணீர் இருந்தது. அதுவும் கலங்கி மஞ்சள் நிறத்தில் இருந்தது.
அதில் ஒரு புறத்தில் எருமைகள் கிடந்து புரண்டு கொண்டிருந்தன. இன்னொரு புறத்தில் பன்றிகள் குட்டிகளுடன் நடமாடிக் கொண்டிருந்தன.
இதைப் பார்த்த எமது தோழர்கள் அருவருத்து குளிப்பதற்கு தயங்கினர்.
இதைப் பரிந்து கொண்ட தோழர் தமிழரசன் “ மக்களோடு சேர்ந்து உழையுங்கள். மக்களோடு சேர்ந்து உண்ணுங்கள். மக்களோடு சேர்ந்து உறங்குங்கள் என்று தோழர் மாவோ கூறினார்” என்று சொல்லிக்கொண்டு தான் முதலில் தண்ணீரில் இறங்கி குளித்தார்.
மாவோ வின் வரிகளைக் கேட்தும் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட எமது தோழர்கள் “புரட்சி ஓங்குக” என்று உரத்துக் கோசம் இட்டவாறு ஒவ்வொருவராக குளத்தில் குதித்து விளையாடினர்.
பின்பு சாப்பிடுவதற்காக அந்த மக்களின் வீடுகளுக்கு சென்றபோது அங்கு இலையில் சோறும் சுண்டெலிக் கறியும் வைக்கப்பட்டிருந்தது.
எலிக்கறி அதுவும் அதன் தலையுடன் பார்த்ததும் எமது தோழர்களுக்கு வாந்தி வராத குறை. யாருமே சாப்பிட வில்லை.
இதைப் புரிந்து கொண்ட தோழர் தமிழரசன் “அந்த மக்கள் தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கே சோறு சாப்பிடுவார்கள். அந்தளவுக்கு சோறே அம் மக்களுக்கு மிகவும் உயர்ந்த சாப்பாடு. அதை உங்களுக்கு தந்திருக்கிறார்கள். நீங்கள் சாப்பிடவில்லை என்றால் அவர்கள் மிகவும் வருத்தப்படுவார்கள” என்றார்.
தோழர்கள் புரிந்து கொண்டனர். இம்முறை தோழர் தமிழரசன் கூறுமுன்னரே எமது தோழர்கள் “மக்களோடு சேர்ந்து உழையுங்கள். மக்களோடு சேர்ந்து உண்ணுங்கள். மக்களோடு சேர்ந்து உறங்குங்கள் என்று தோழர் மாவோ கூறினார்” என்று உரத்து கூறிக்கொண்டு சாப்பிட்டார்கள்.
என்ன வேடிக்கை என்றால் முதலில் சாப்பிட தயங்கியவர்கள் சாப்பிட்டு சுவை பிடித்துக்கொள்ள மேலும் மேலும் கேட்டு வாங்கி சாப்பிட்டார்கள்.
அந்த மக்களும் மிக்க மகிழ்வோடு உணவு பரிமாறினார்கள்.
உணவு முடிந்த பின்பு அவர்களும் எமது தோழர்களும் மாறி மாறி சில பாடல்கள் பாடியும் மற்றும் நடிப்புகள் செய்து காட்டியும் அனைவரையும் மகிழ்வுறச் செய்தார்கள்.
இந்த சம்பவத்திற்கு பின்பு எமது தோழர்கள் எப்போதும் தோழர் தமிழரசனை இந்த மாவோவின் வரிகளை உரத்து உச்சரித்து கிண்டல் செய்வார்கள்.
அவரும் நன்றாக சிரித்து நகைச்சுவை செய்வார்.
குறிப்பு-ஏப்-14 தோழர் தமிழரசன் 79வது பிறந்த தினத்தை முன்னிட்டு இது ஒரு மீள்பதிவு ஆகும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment