Tuesday, April 30, 2024

ஈழத்தில் பல இயக்கங்கள் இருந்ததும்

ஈழத்தில் பல இயக்கங்கள் இருந்ததும் அவற்றில் உட்கொலைகள் நடந்ததும் யாவரும் அறிந்த விடயமே. ஆனால் நான் இருந்த இயக்கத்தில் உட்கொலைகள் எதுவும் நிகழவில்லை. அதற்கு தோழர் தமிழரசன் வழி காட்டலும் ஒரு காரணம் என ஒருமுறை பதிவு செய்திருந்தேன். உடனே தமிழ்நாட்டு தோழர் தமிழ்முகிலன் “ அப்படியென்றால் தோழர் தமிழரசன் அமைப்பில் ஏன் உட்கொலைகள் நடந்தன?” என்று கேட்டார். தமிழரசன் அமைப்பில் எத்தனை உட்கொலைகள் நடந்தன? ஏன் நடந்தன? என்பன பற்றி எனக்கு தெரியாது. ஆனால் இவை யாவும் தமிழரசன் உயிரோடு இருந்த போது நடக்கவில்லை. அவர் இறந்த பின்பு நடந்ததாக கூறப்படுகிறது. தோழர் தமிழரசன் உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் இப்படியான உட்கொலைகள் நடந்திருக்காது என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். ஏனெனில் அதற்கு ஒரு உதாரணத்தை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தோழர் தமிழரசனுடன் கூட இருந்த முக்கிய தோழர் ஒருவர் கடுமையாக முரண்பட்டு அமைப்பில் இருந்து விலகிச் சென்றார். போகும்போது அமைப்பு ஆயுதத்தையும் எடுத்துச் சென்றுவிட்டார். அந்த தோழரின் உறவினர் ஒருவர் கியூ உளவுப்பிரிவு அதிகாரியாக இருந்தார். அதனால் அந்த தோழர் தம்மை காட்டிக் கொடுக்கக்கூடும் என மற்ற தோழர்கள் அஞ்சினார்கள். அதனால் அந்த விலகிச் சென்ற தோழர் மீது நடவடிக்கை எடுக்கும்படி அவர்கள் தோழர் தமிழரசனை வலியுறுத்தினார்கள். ஆனால் தோழர் தமிழரசன்; அந்த விடயத்தை சாதுரியமாக கையாண்டு எந்த விபரீதமும் ஏற்படாமல் தீர்த்தார். இன்னொரு விடயத்தையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மருதையாற்று பாலத்தில் வெடிகுண்டு சம்பவம் நடந்தபோது மருதையன் தலைமையில் இயங்கிய மகஇக அமைப்பு அதனைக் கண்டித்து சுவரொட்டி ஒட்டியது. ஈழத்தில் பல அமைப்புகள் இருந்தன. ஆனால் ஒரு அமைப்புகூட இன்னொரு அமைப்பு செய்த தாக்குதலை கண்டித்து போஸ்டர் ஒட்டியது கிடையாது. ஆனால் தன்னை புரட்சிகர இயக்கமாக கூறும் மகஇக வானது இன்னொரு புரட்சிகர இயக்கமான தோழர் தமிழரசன் அமைப்பினர் செய்த தாக்குதலை கண்டித்து போஸ்டர் ஒட்டி காட்டிக்கொடுத்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இது குறித்து தோழர் தமிரசனிடம் கேட்டபோது அவர் சிரித்துக்கொண்டே தங்களை கைது செய்துவிடுவார்களோ என்ற பயத்தில் இப்படி செய்துள்ளார்கள். அதை பெரிது படுத்தத் தேவையில்லை என்றார். அதுதான் தோழர் தமிழரசன்.

No comments:

Post a Comment