Tuesday, April 30, 2024

நினைவஞ்சலிகள்

• நினைவஞ்சலிகள் கருணாரட்ணம் அடிகளார் ஒரு கிருத்தவ பாதிரியார். அவர் இறுதிக் காலங்களில் வன்னியில் மனிதவுரிமை பணிகளில் ஈடுபட்டு வந்தார். 20.04.2008 யன்று ராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினரால் இவர் கொல்லப்பட்டார். நாளை அவருடைய 16வது நினைவு தினம் ஆகும். கருணாரட்ணம் அடிகளார் எனது கரவெட்டி கிராமத்தை சேர்ந்தவர். அதனால் அவரை எனக்கு சிறுவயது முதல் தெரியும் . 1984ல் ஒருநாள் இராணுவம் யாழ் நகர வீதியில் சென்ற பலரை சுட்டுக் கொன்றது. அதில் கருணாரட்ணம் அடிகளாரும் எதிர்பாராத விதமாக சுடப்பட்டார். சுட்டுக் கொன்றவர்களின் உடலை ராணுவம் தன் வண்டியில் எடுத்துச் சென்று முகாமில் எரிக்க திட்டம் போட்டிருந்தது. அவ்வாறு எடுத்துச் செல்லும்போது கருணாரட்ணம் அடிகளார் உடலில் உயிர் இருப்பதைக் கண்ட ராணுவ வீரன் ஒருவன் அவர் கழுத்தில் தொங்கிய சிலுவை மாலையை கண்டு ( ஒருவேளை அவ் ராணுவ வீரனும் கிருத்தவராக இருக்கக்கூடும்) அவரை இழுத்து வீதியில் எறிந்து விட்டு சென்று விட்டான். கழுத்தில் சூடுபட்டு உயிருக்காக போராடிக் கொண்டிருந்த கருணாரட்ணம் அடிகளாரை ஊர் மக்கள் எடுத்துச் சென்று யாழ் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் வன்னியில் போராட்டத்திற்கு ஆதரவாக மனிதவுரிமை பணிகளில் ஈடுபட்டு வந்தார். எனக்கு அவரது பணி ஆச்சரியம் தரவில்லை. எனெனில் அவரது சுபாவமே அதுதான். யாராவது அவர் கண் முன்னால் வேதனைப்பட்டால் அவரால் பொறுக்க முடியாது. அத்தகையவரை ராணுவம் கண்ணிவெடி வைத்து கொன்றுவிட்டதை அறிந்தபோது உண்மையிலே மிகவும் கவலை அடைந்தேன். அவர் ஒரு கிருத்தவ பாதிரியார். அதுவும் மனிதவுரிமை பணிகளில் ஈடுபடும்போது சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டார். ஆனால் இதுவரை போப்பாண்டவரோ அல்லது எந்தவொரு கிருத்தவ அமைப்போ அவர் கொலைக்கு நீதி பெற்றுக்கொடுக்கவில்லை.

No comments:

Post a Comment