•இன்று உலக புத்தக தினம் (23.04.2017)
புரட்சியில் துப்பாக்கிகளைவிட பெரிய ஆயுதம் புத்தகங்களே என்று ரஸ்சிய புரட்சியை மேற்கொண்ட தோழர் லெனின் கூறியுள்ளார்.
உண்மைதான். வாசிப்பதன் மூலமே ஒரு மனிதன் பூரணத்துவம் பெறுகின்றான் எனில் அதற்கு புத்தகங்கள் அவசியமாகின்றன.
எங்கே நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகின்றவோ அங்கே விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள் என்றார் தோழர் சே குவாரா
அது உண்மைதான் என்பதை ஈழத்தில் கண்டோம். முதலில் யாழ்ப்பாணம் நூலகம் இலங்கை அரசால் எரிக்கப்பட்டது. பின்னர் தமிழர்கள் எரிக்கப்பட்டார்கள்.
எமது தமிழ் சமூகத்தில் புத்தகங்களுக்கும் வாசிப்பிற்கும் கொடுக்கும் முக்கியத்துவம் மிகவும் குறைவாகவே இருக்கிறது.
என் 10 வது வயதில் வாசிக்கும் பழக்கத்தை என் தந்தையாரே எனக்கு ஏற்படுத்தினார். பருத்தித்துறையில் இருந்த யுனைட்டெட் புத்தகசாலையில் பெரியாரின் புத்தகங்களை 25 சதத்திற்கு வாங்கி தந்தார்.
பின்னர் இயக்கத்தில் சேர்ந்த காலத்தில் மனோ மாஸ்டர் போல்ஸ்விக் கட்சியின் வரலாறு புத்தகத்தை தந்து மாக்சிய நூல்களை படிக்க ஆரம்பித்து வைத்தார்.
இந்த வாசிப்பு பழக்கம் நான் சிறை மற்றும் சிறப்புமுகாமில் எட்டு வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த வேளையிலும் அதற்காக பலமுறை போராட வைத்தது.
மதுரை சிறையில் நான் அடைத்து வைக்கப்பட்டிருந்த வேளை தோழர் பொழிலனால் தரப்பட்ட ஜீனியர் விகடன் சஞ்சிகையை அனுமதிக்க சிறை நிர்வாகம் மறுத்தது. இதற்கு அனுமதி கோரி 4 நாட்கள் நான் உண்ணாவிரதம் இருந்தேன்.
அப்போது கண்காணிப்பளாக இருந்த ராமன் என்பவர் இது குறித்து சிறைத்துறை தலைவரிடம் அனுமதி கேட்டு எழுதியிருப்பதாகவும் அதுவரை சிறையில் உள்ள நூல் நிலையத்தில் உள்ள புத்தகங்களை படிக்கும் படி கூறினார்.
சிறையில் நூல் நிலையம் இருப்பது அதுவரை நான் அறிந்திருக்கவில்லை. அதைவிட ஆச்சரியம் அந்த நூல் நிலையத்தில் மாக்ஸ் லெனின் ஸடாலின் எழுதிய நூல்கள் நிறைய இருந்தன.
ஜீனியர்விகடனை அனுமதி மறுத்த சிறைநிர்வாகம் மாக்சிய நூல்களை தனது நூல் நிலையத்தில் வைத்திருந்தது ஆச்சரியமாக இருந்தது.
எது எப்படியோ ஜீனியர் விகடனுக்காக நான் நடத்திய போராட்டம் எனக்கு நல்ல மாக்சிய நூல்களை படிக்க வழி வகுத்தது
அடுத்து துறையூர் சிறப்புமகாமில் அடைக்கப்பட்டிருந்தவேளை பத்திரிகை படிக்க அனுமதி கோரி 14 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தேன்.
பொதுவாக அடைத்து வைத்திருப்பவர்களுக்கு பத்திரிகை வழங்க வேண்டும். றேடியோ கேட்க அனுமதிக்க வேண்டும். ரிவி பார்க்க அனுமதிக்க வேண்டும்.
ஆனால் சிறப்புமகாமில் இவற்றை தராதது மட்டுமன்றி எமது செலவில் பெற்றுக்கொள்ளவும் அனுமதி மறுக்கப்பட்டது.
நாம் வேறு வழியின்றி எமக்கு சாப்பாடு பார்சல் கட்டி வரும் பேப்பர்களை படித்தோம். இதனை அறிந்த அதிகாரிகள் உடனே எமக்கு புரியாத மலையாள பத்திரிகைகளில் சாப்பாடு கட்டி தர ஏற்பாடு செய்தார்கள்.
இதனால் வேறு வழியின்றி பத்திரிகை படிக்க அனுமதிக்குமாறு கோரி 14 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தேன். அதன் பின்னரே அனுமதி தரப்பட்டது.
நான் விடுதலையாகும் வரை எனது சொந்த செலவில் தினமணி பத்திரிகை பெற்று படித்து வந்தேன். இதன்மூலம் அடைத்து வைக்கப்பட்டிருந்த சக அகதிகளும் இதனையே வாசித்தனர்.
இவ்வாறு தினமணி பத்திரிகை வாங்கி படித்து வந்தவேளை அதில் நடந்த கட்டுரை போட்டி ஒன்றில் பங்கு பற்றி முதல் பரிசு பெற்றேன். மாலன் அப்போது ஆசிரியராக இருந்தார். பரிசுப் பணம் 500 ரூபா என் கைக்கு வந்து சேரவேயில்லை.
ஒவ்வொரு வருடமும் புத்தக தினம் வரும்போது இந்த புத்தக வாசிப்பிற்காக நான் சிறையிலும் சிறப்புமுகாமிலும் நடத்திய போராட்டங்களும் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.
No comments:
Post a Comment