Sunday, April 30, 2017

•சிறைவாசி நளினி முருகன் எழுதிய நூல் குறித்து

•சிறைவாசி நளினி முருகன் எழுதிய நூல் குறித்து
நீண்டகால சிறைவாசியான நளினி எழுதிய “ராஜீவ் கொலை- மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்” என்னும் நூல் வெளிவந்துள்ளது.
600 பக்கம் கொண்ட இந் நூல் எழுத்தாக்கம் தொகுப்பு பா. ஏகலைவன். வைகோ, திருமாவளவன், சீமான், கௌத்தூர் மணி,திருச்சி வேலுசாமி, இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், வழக்கறிஞர் புகழேந்தி மற்றும் முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன் ஆகியோர் அணிந்துரை வழங்கியுள்ளனர்.
ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த சிபிஜ புலனாய்வு அமைப்பை கிழி கிழி என்று கிழித்து தொங்க விட்டிருக்கிறார் நளினி இந்த நூலில்.
உண்மையில் சிபிஜ இன் முகத்திரையை அவர் நன்கு தோலுரித்து அம்பலப்படுத்தியுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.
மத்திய அரசின் கீழ் உள்ள சிபிஜ புலனாய்வு அமைப்பே இந்தளவு மோசமாக நடந்து கொள்கிறது எனில் தமிழ்நாடு அரசின் கீழ் உள்ள கியூ பிரிவு புலனாய்வு அமைப்பு எந்தளவு மோசமாக நடந்து கொள்ளும் என்பதை ஊகிக்க வைக்கிறது இந்த நூல்.
25 வருட சிறைவாசம். அதில் அவர் அனுபவித்த கொடுமைகளும் சித்திரவதைகளும் வலிகள் நிறைந்தவை. படிக்கும்போது கண்ணீரை வரவழைக்கின்றன.
நளினி விரைவில் விடுதலை பெற வேண்டும். மீதி இருக்கும் சொற்ப காலத்தையாவது அவர் தன் கணவர் மற்றும் பிள்ளையுடன் சந்தோசமாக கழிக்க வாய்ப்பளிக்க வேண்டும்.
ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது நான் மதுரை மத்திய சிறையில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டிருந்தேன். அப்போது மதுரை சிறை கண்காணிப்பாளர் ராஜ்குமார் முன்னிலையில் சிபிஜ அதிகாரி, ஜபி அதிகாரி, கியு பிரிவு அதிகாரி, என ஆறு அதிகாரிகள் என்னை விசாரணை செய்தனர்.
நானும் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தபடியால் ராஜீவ் குண்டு வெடிப்பு பற்றி எனக்கு ஏதும் தெரியுமா என்று அறிவதற்காக இந்த விசாரணையை அவர்கள் மேற்கொண்டார்கள் என நம்புகிறேன்.
விசாரணையின் போது சிவராசன், தானு ஆகியோரது படங்களை காட்டி இவர்களை தெரியுமா எனக் கேட்டார்கள். நான் எனக்கு தெரியவில்லை என்று பதில் கூறியிருந்தபோதும் சிவராசனை எங்கோ பார்த்த ஒரு உணர்வு வந்தது.
இந்திய ராணுவம் இலங்கையில் தமிழ் மக்கள் மீது அழிவுகளை மேற்கொண்ட போது அவற்றை கட்டுரைகளாக எழுதி இந்திய புரட்சி சஞ்சிகைகளான கேடயம், மனஓசை புதிய ஜனநாயகம் புதிய கலாச்சாரம் போன்றவற்றில் வெளிவரச் செய்தேன். அத்துடன் அச் சஞ்சிகைகளை இரகசியமாக இறக்குமதி செய்து கரவெட்டியில் எமது நூல் நிலையத்தில் மக்கள் படிப்பதற்கு வைத்து வந்தேன்.
இதனைப் படிப்பதற்காக பருத்தித்துறை வல்வெட்டித்துறை போன்ற இடங்களில் இருந்து எல்லாம் இளைஞர்கள் வந்தார்கள். அவ்வாறு ஒருநாள் ரகு என்ற புலிப் போராளி ஒருவர் என்னைப் பார்க்க வந்திருந்தார். அவரை கூட்டி வந்தவர் எனது ஊரைச் சேர்ந்த முகுந்தன் என்ற புலிப் போராளி. ( இந்த முகுந்தன்தான் பின்னர் ஜனாதிபதி சந்திரிக்கா கொலை முயற்சியில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்)
என்னை பார்க்க வந்த அதே ரகுதான் போட்டோவில் இருந்த சிவராசன் என்பதை உடனே என்னால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. ஏனெனில் போட்டோவில் அவர் குர்தா அணிந்து ஒரு இந்தியர் போல் காட்சியளித்தார்.
அடுத்து அந்த அதிகாரிகள் ராஜீவ் கொலை பற்றி என்ன நினைக்கிறாய் என என்னிடம் கேட்டார்கள். அதற்கு “ஒரு ஈழத் தமிழனாக மிக்க மகிழ்ச்சி அடைகிறேன”; என்று பதில் கொடுத்தேன். இதைக் கேட்டதும் அவர்களுக்கு ஒருபுறம் கோபம். இன்னொருபுறம் ஆச்சரியமாக “ஏன்?” என்று கேட்டார்கள்.
“நான் மூன்று தடவை இந்திய ராணுவத்திடம் பூவரசம் கட்டையால் அடி வாங்கியிருக்கிறேன். அதேபோல் இந்திய ராணுவத்தால் ஏதோ ஒருவழியில் பாதிக்கப்படாத ஒரு தமிழன் இருக்க முடியாது. எனவேதான் பாதிக்கப்பட்ட அத்தனை தமிழர்களும் மகிழ்ச்சி அடைகிறார்கள்” என்றேன்.
எனது பதிலைக் கேட்ட கண்காணிப்பாளர் ராஜ்குமார் “ ராஜீவ் காந்தி செய்த மிகப் பெரிய தவறு இதுதான் “ என்று கூறினார். மற்ற அதிகாரிகள் மௌனமாக தலையை குனிந்த வண்ணம் இருந்தனர்.
இங்கு எனது வருத்தம் என்னவெனில் அணிந்துரை எழுதிய தலைவர்களும் சரி, வழக்கில் சம்பந்தப்பட்டவர்களும் சரி எவருமே ராஜீவ் காந்தி இந்திய ராணுவத்தை அனுப்பி பல்லாயிரம் அப்பாவி தமிழர்களை கொன்ற அரசியலை பேசவில்லை என்பதே.
இலங்கையில் இந்திய ராணுவத்தால் பல்லாயிரம் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டமைக்கு நீதி வழங்கியிருந்தால்,
இலங்கையில் பல அப்பாவி தமிழ் பெண்கள் இந்திய ராணுவத்தால் பாலியல் வல்லுறவு செய்தமைக்கு நியாயம் வழங்கப்பட்டிருந்தால்,
இலங்கையில் தமிழ் மக்களின் கோடிக் கணக்கணக்கான ரூபா பெறுமதியான சொத்துக்கள் இந்திய ராணுவத்தால் சேதமாக்கப்பட்டமைக்கு நிவாரணம் வழங்கப்பட்டிருந்தால் ,
ராஜீவ் கொலை நடந்திருக்காது என்ற உண்மையை யாரும் எடுத்துக்கூறவில்லையே.
தன்னை சந்திக்க வந்த பிரியங்கா தனது தந்தை நல்லவர் என்றும் அவரை ஏன் அநியாயமாக கொன்றீர்கள் என்றும் கவலையுடன் கேட்டதாக நளினி எழுதுகிறார். அப்போதாவது “உங்கள் தந்தையால் இலங்கையில் பல பெண்கள் தங்கள் கணவரை, பிள்ளைகளை இழந்து கண்ணீர் வடித்துக்கொண்டு இருக்கிறார்கள்” என்று நளினி சொல்லியிருக்கலாம்.
ராஜீவ் கொலை என்பது ஒரு அரசியல் கொலை. அதனால் இன உணர்வாளர்களை கைது செய்து தண்டனை வழங்கியது இந்திய அரசு. எனவேதான் அவர்களை காப்பாற்ற வேண்டியது தமது கடமை என தமிழ் மக்கள் கருதுகிறார்கள். இவ்வாறு கருதியதால்தான் செங்கொடி போன்றவர்கள் தமது உயிரைக் கொடுத்து எழுவர் உயிரை காப்பாற்றியுள்ளனர்.
மரண தண்டனையில் இருந்து இவர்களை காப்பாற்றியது தமிழ் மக்களே. இனி இவர்களை சிறையில் இருந்து விடுவிக்கப்போவதும் தமிழ் மக்களே.
எனவே எந்தளவு விரைவாக மக்களுக்கு உண்மைகளை தெரியப்படுத்த முடியுமோ அந்தளவு விரைவாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் கடமையாகும்.

No comments:

Post a Comment