•மலைகளை அகற்றும் மூடக் கிழவனாக மாறுவோம்!
கொழும்பில் மீதொட்டமுலவில் ஏற்பட்ட குப்பை மலைச் சரிவால் 23 பேர் உயிரிழந்துள்ளனர். 150க்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இது இயற்கை அழிவு அல்ல. மனிதனால் மனிதனுக்கு எற்படுத்தப்பட்ட செயற்கை அழிவு. நிச்சயம் இதனை இலங்கை அரசால் தடுத்திருக்க முடியும்.
100 மீற்றர் உயரத்திற்கு கொட்டப்பட்ட இந்த குப்பை மலை விரைவில் சரியவிருக்கிறது என்பதை ஆய்வாளர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுட்டிக் காட்டியுள்ளனர்.
மக்களும் இதற்கு எதிராக பல தடவை போராட்டம் நடத்தியுள்ளனர். இருந்தும் அரசோ அல்லது அதிகாரிகளோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது அங்கு குப்பை கொட்டுவதை அரசு தடை செய்துள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமும் வேறு இடமும் வழங்குவதாக அரசு உறுதியளித்துள்ளது.
இந்த நடவடிக்கையை முன்னரே எடுத்திருந்தால் அநியாயமாக 23 உயிர்கள் பலியானதை தடுத்திருக்க முடியும்.
அரசும் அதிகாரிகளும் அக்கறையற்று இருந்தமைக்கு காரணம் இந்த மக்கள் ஏழை மக்கள் என்பது மட்டுமல்ல சாதியிலும் மிக தாழ்த்தப்பட்ட நிலையில் இருப்பதே.
மக்களின் வாக்கு பெற்று பதவியைப் பெற்றவர்கள் தங்கள் நலனைக் கவனிக்கிறார்களே யொழிய மக்கள் நலனைக் கவனிப்பதில்லை.
ரயிலில் வடை விற்ற மாகாண முதலமைச்சர் ஒருவர் பதவி பெற்றதும் தற்போது கோடிக் கணக்கான ரூபா பெறுமதியில் ஹோட்டல் கட்டுகிறார். தான் 10 மாடி ஹோட்டல் கட்டுவதாக திமிராக பேட்டி வேறு கொடுக்கிறார்.
ஊழல் செய்யும் முதலமைச்சரை தண்டிக்க வேண்டிய ஜனாதிபதியோ அதுபற்றி அக்கறையின்றி தனக்கு 60 கோடி ரூபா செலவில் குண்டு துளைக்காத இரண்டு வாகனங்களை இறக்குமதி செய்கிறார்.
இப்போது யுத்தம் இல்லை. ஜனாதிபதிக்கு பாரிய உயிர் அச்சுறுத்தலும் இல்லை. அதுமட்டுமன்றி ஏற்கனவே பல குண்டு துளைக்காத வாகனங்கள் ஜனாதிபதிக்கு இருக்கின்றது.
இந்நிலையில் 60 கோடி ரூபாவுக்கு புதிய சொகுசு வாகனம் ஜனாதிபதிக்கு தேவையா என்று கேட்டால் அவர் எளிமையானவர், வீட்டில் இருந்து உணவு கொண்டு வந்து தன் கையால் சாப்பிடுகிறார் என்று சுமந்திரனும் சம்பந்தர் அய்யாவும் கதை சொல்கிறார்கள்.
சம்பந்தர் அய்யா ஒரு சிறய அறையில் எளிமையாக வாழ்வதாக சுத்துமாத்து சுமந்திரன் கதை விடுகின்ற அதே நேரத்தில் சம்பந்தர் அய்யாவுக்கு சொகுசு பங்களா திருத்தவும் மேலும் புதிய வாகனம் வாங்குவதற்கும் 5 கோடி ரூபா ஒதுக்குவதாக பாராளுமன்றத்தில் அமைச்சர் பிரோரணை கொண்டு வந்துள்ளார்.
இப்படி ஜனாதிபதி, அமைச்சர், எதிர்க்கட்சிதலைவர் எல்லோரும் தமது நலன்களை கவனிப்பதற்கு கோடிக்கணக்கான ரூபாய்களை ஒதுக்கிக்கொண்டிருக்கும் போது மக்கள் குப்பை மiயில் சிக்குண்டு இறந்து கொண்டிருக்கின்றனர்.
சீனாவில் ஒரு மூடக்கிழவன் தனது தோட்டத்திற்கு போவதற்கு தடையாக இருந்த மலையை குடைந்து பாதை அமைத்தான் என்ற கதையை கூறியே மக்களை அணிதிரட்டினார் தோழர் மாசேதுங்.
அதேபோல் இலங்கை மக்களும் தமது வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் ஏகாதிபத்தியம் தரகுமுதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம் இனவாதம் போன்ற குப்பை மலைகளை அகற்ற மூடக் கிழவனாக மாற வேண்டும்.
இதனை முதலில் வீண் முயற்சி என்பார்கள். அப்புறம் வெற்றி பெற்றதும் விடா முயற்சி என்று பாராட்டுவார்கள்.
No comments:
Post a Comment