•தோழர் சண் அவர்களின் 25வது நினைவு தினம்!
இன்று (08.02.2018) தோழர் சண்முகதாசன் அவர்களின் 25வது நினைவு தினம் ஆகும்.
தோழர் சண்முகதாசன் அவர்களுடன் அவருடைய இறுதிக் காலங்களில் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
1989ல் தமிழக நக்சல்பாரி தோழர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவரை வீடியோ பேட்டி எடுத்தேன். எனது கேள்விகள் பலவற்றுக்கு அவர் பொறுமையாக சிறப்பான பதில்களை அளித்தார்
1990ல் தோழர் சணமுகதாசன் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர் எழுதிய “ஒரு கம்யுனிசப் போராளியின் அரசியல் நினைவுகள்” என்னும் புத்தகத்தை தமிழ்நாடு அமைப்பு கமிட்டியினரின் “கிளாரா” அச்சகத்தில் அச்சிட்டு வெளியிட்டேன்.
1983ல் இனக் கலவரத்தின் பின் தோழர் சண் வடபகுதிக்கு விஜயம் செய்த போது வடமராச்சியில் எமது தோழர்களுக்கு அரசியல் வகுப்புகள் எடுத்தார். அப்போது எமது கேள்விகள் அனைத்திற்கும் அவர் பொறுமையாக விளக்கம் அளித்தார்.
இயக்கங்கள் எல்லாம் இந்தியாவுக்கு அதிக அளவில் இளைஞர்களை அழைத்து சென்று பயிற்சி வழங்கியபோது 1984 தைப் பொங்கலுக்கு தமிழீழம் பிறக்கும் என்று கூறினார்கள்.
இது குறித்து தோழர் சண்முகதாசன் அவர்களிடம் கேட்டபோது “இந்தியா ஒருபோதும் தமிழீழம் பெற்று தராது. மாறாக அது தமிழ் இளைஞர்களின் விடுதலைப் போராட்டத்தை அழிக்கும்” என்றார்.
தோழர் சண்முகதாசனை நாம் ஏன் நினைவு கூர வேண்டும்?
•ரஸ்சியாவில் குருசேவ் முன்வைத்த திருத்தல்வாதத்தை அம்பலப்படுத்தி இலங்கையில் மாவோசிச சிந்தனையை அறிமுகப்படுத்தியவர்
•இலங்கையில் பாராளுமன்ற பாதையை நிராகரித்து ஆயுதம் ஏந்திய மக்கள் யுத்தப்பாதையை முன்வைத்தவர்
•இலங்கை தமிழ் மக்களுக்கு இந்திய அரசு நண்பன் அல்ல. அதுவும் ஒரு எதிரியே என்று இனம் காட்டியவர்
•“தமிழீழம்” தமிழ் மக்களுக்கு சிறந்த தீர்வு அல்ல என்பதை விளக்கி இனப்பிரச்சனைக்கு தீர்வாக பிரதேச சுயாட்சியை முன்வைத்தவர்.
•“அடிக்கு அடி” என தாழ்த்தப்பட்ட மக்களுக்கு போதித்து சாதீயத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர்
தோழர் மாசேதுங் அவர்களுடன் பழகிய தோழர் சண்முகதாசன் அவர்களுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு எமக்கு கிடைத்தமை உண்மையிலே மிக்க மகிழ்வு அளிக்கிறது.
அவர் காட்டிய மாசேதுங் சிந்தனையில் அவர் முன்வைத்த புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்பதே அவருக்கு செய்யும் அஞ்சலியாகும்.
No comments:
Post a Comment