Wednesday, February 28, 2018

லண்டனில், ஆர்ப்பாட்டம் செய்யப்போகும் சிங்கள சகோதரர்களுக்கு!

•லண்டனில்,
ஆர்ப்பாட்டம் செய்யப்போகும்
சிங்கள சகோதரர்களுக்கு!
புலிக்கொடியை தடைசெய்யுமாறு கோரி எதிர்வரும் சனிக்கிழமையன்று லண்டனில் ஆர்ப்பாட்டம் செய்யபோவதாக அறிந்தோம்.
ஒரு கொடியை தடை செய்தால் ஒன்பது கொடி உயரும் என்பார்கள். அதுபோல் உங்கள் போராட்டம் பல்லாயிரம் தமிழர்களை புலிக்கொடி ஏந்த வைக்கப்போகிறது.
உண்மையில் புலிக்கொடி மீண்டும் ஏற்றப்படுவதை நீங்கள் விரும்பவில்லை எனில் நீங்கள் போராட வேண்டியது லண்டன் அரசுக்கு எதிராக அல்ல இலங்கை அரசுக்கு எதிராகவே.
ஏனெனில் கடந்த ஒரு வருடமாக காணாமல்போனவர்களின் உறவுகள் எந்த புலிக்கொடியும் ஏந்தாமல் போராடி வருகிறார்கள். ஆனால் இலங்கை அரசு அவர்களை கண்டுகொள்ளவேயில்லையே,
கேப்பாப்பிலவில் மீள்குடியேற்றம்கோரி மக்கள் போராடி வருகிறார்கள். சிறு குழந்தைகள்கூட வீதியோரத்தில் உறங்கி வருகிறார்கள். ஆனால் இலங்கை அரசு கண்டு கொள்ளவில்லை.
சிறையில் உள்ளவர்கள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி பல வருடங்களாக போராடி வருகிறார்கள். ஆனால் இலங்கை அரசு கண்டுகொள்ளவில்லை.
இவர்கள் எல்லாம் புலிக் கொடி ஏந்திப் போராடவில்லை. ஆயுதம் எந்திப் போராடவில்லை. அகிம்சை வழியிலேயே போராடி வருகிறார்கள். ஆனாலும் இலங்கை அரசு கண்டு கொள்ளவில்லை.
இலங்கை அரசு இந்தப் பிரச்சனைகளைத் தீர்த்திருந்தால் லண்டனில் உள்ள தமிழர்கள் போராடியிருக்கமாட்டார்கள். புலிக்கொடி ஏந்தியிருக்கமாட்டார்கள்.
எனவே புலிக்கொடிதான் உங்கள் பிரச்சனை என்றால் புலிக்கொடி மீண்டும் ஏந்தப்படுதற்கான காரணங்களை தீர்க்கும்படி உங்கள் இலங்கை அரசிடம் கூறுங்கள்.
தலைவர் சம்பந்தர் அய்யா புலி இல்லை. அவர் புலிக்கொடி ஏந்தவும் இல்லை. மாறாக சிங்கக்கொடி ஏந்தியவர். அவரே இனவாதம் தொடர்ந்தால் தமிழீழம் மலரும் என்று கூறியிருப்பதை புரிந்து கொள்ளுங்கள்.
அதைவிட “ புலிகள் உருவாதில்லை. இலங்கை அரசின் தவறுகளால் உருவாக்கப்படுகிறார்கள்” என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கூறயதையும் உணர்ந்து கொள்ளுங்கள்.
இதற்கப்புறமும் நீங்கள் போராடுவீர்களாயின் உங்களுக்கு உறுதியாக கூறுகிறோம் “ ஒரு இனத்தை அடக்க முனையும் எந்த இனமும் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாது”.
அதைவிட முக்கியமானது, "தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டமே சிங்கள மக்களுக்கும் விடுதலையைப் பெற்றுக்கொடுக்கப் போகிறது"

No comments:

Post a Comment