Wednesday, February 28, 2018

இந்திய அரசு, ஈழத் தமிழர் போராட்டத்தை அழிக்க ஏன் அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறது?

இந்திய அரசு,
ஈழத் தமிழர் போராட்டத்தை அழிக்க
ஏன் அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறது?
1983ம் ஆண்டு முதல் இந்திய அரசானது ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கியே வருகிறது.
ஆனால் இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு விடுதலை பெற்று தரும் என்று இன்னமும் சிலர் கூறிவருகின்றனர்.
இலங்கையை ஆக்கிரமிக்கவே இந்திய அரசு தமிழர் பிரச்சனையை பயன்படுத்தியது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
வெறும் ஆக்கிரமிப்பு மட்டும் காரணம் என்றால், சிறிய இலங்கை தீவில் எதற்காக நாலு தூதரங்களை இந்திய அரசு வைத்திருக்கிறது?
சீன ஊடுருவலைத் தடுப்பதற்காகவே இந்திய அரசு நாலு தூதரகங்களை இலங்கையில் வைத்துச் செயற்படுகிறது என்று அந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அப்படியென்றால், மாலைதீவில் சீன ஊடுருவல் , நேபாளத்தில் சீன ஊடுருவல், மியான்மரில் சீன ஊடுருவல் நடக்கிறது. அங்கெல்லாம் ஏன் இந்திய அரசு இந்தளவு அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை?
இலங்கையில் சீனா வெறும் பொருளாதார ஒப்பந்தங்களையே செய்துள்ளது. ஆனால் நேபாளம், மியான்மர் போன்றன ராணுவ ஒப்பந்தங்களை செய்துள்ளன.
இலங்கை இந்தியாவின் எல்லை நாடு கிடையாது. அண்மையில் உள்ள நாடு. ஆனால் நேபாளம், மியான்மர் போன்றன இந்தியாவின் எல்லை நாடுகள்.
சீனாவுடன் ராணுவ ஒப்பந்தம் செய்த எல்லை நாடுகளைவிட பொருளாதார ஒப்பந்தம் செய்த அண்மை நாடான இலங்கை எப்படி இந்தியாவுக்கு அதிக அச்சுறுத்தல் நாடு ஆகும்?
இன்னும் சொல்லப்போனால், சீனாவுடன் இலங்கை செய்யும் வியாபாரத்தை விட சீனாவுடன் இந்தியா செய்யும் வியாபாரம் பல மடங்கு அதிகம்.
அதைவிட, சீனாவுடன் இலங்கை செய்துகொண்ட பொருளாதார ஒப்பந்தங்கள் யாவும் இந்திய அரசின் சம்மதம் பெற்றே செய்யப்பட்டுள்ளது.
எனவே இலங்கையில் சீன ஊடுருவல் குறித்து இந்தியா அச்சம் கொள்கிறது என்பதும் அதன் காரணமாகவே இந்தியா அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறது என்பதும் தவறான வாதமாகும்.
உண்மையில், ஈழத் தமிழர் போராட்டத்தை இந்திய அரசு நசுக்குவதற்கு காரணம் ஈழத் தமிழர்கள் போராட்டம் தமிழக தமிழர்களுக்கு ஓர் எழுச்சியைக் கொடுத்தவிடும் என்ற அச்சமே.
காஸ்மீர், அசாம், மணிப்பூர், நாகலாந்து என பல மாநிலங்களில் நடக்கும் போராட்டங்கள் குறித்து அச்சப்படாத இந்திய அரசு தமிழக மக்களின் போராட்டத்திற்கு ஏன் அச்சப்பட வேண்டும் என சிலர் கேட்கலாம்.
காஸ்மீர், அசாம், நாகலாந்து போன்றன பிரிந்தால் இந்தியா உடையாது. ஆனால் தமிழ்நாடு பிரிந்தால் அடுத்த கணமே இந்தியா உடைந்து விடும்.
இந்தியா உடைந்தால் ஆகக்குறைந்தது 30 புதிய நாடுகள் உருவாகும். அப்புறம் இந்தியா என்ற நாடே இருக்காது.
எனவேதான் இந்திய அரசு ஈழத் தமிழரின் போராட்டத்தை கண்டு அச்சமடைகிறது.
எனவேதான் ஈழத் தமிழர் போராட்டத்தை நசுக்க இந்திய அரசு அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறது.

No comments:

Post a Comment