ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்
லண்டனில் இருக்கும் வாசன் அவர்கள் “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் குறித்து கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
எனது நூல் பற்றி தனது கருத்துக்களை தெரிவித்துள்ள வாசன் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
அவர் தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு,
மனித குல வரலாறானது என்றுமே போராட்டங்களாலும் புரட்சிகர சிந்தனைகளாலுமே வழி நடத்தப்பட்டு ஒரு முன்னோக்கிய பாதையிலே பயணித்து வருகின்றது.
இவ்வரலாற்றில் இது ஈட்டிய வெற்றிகள் அதிகம். கூடவே தோல்விகளும் பின்னடைவுகளும் கூடிய துயரம் பதிந்த வரலாறுகளும் நிறையவே உண்டு. அத்துடன் மறக்கடிக்கப்பட்ட போராட்டங்களும் மானிட வரலாற்றில் நிறையவே உண்டு.
இவ்வகையில் மறக்கடிக்கப் பட்ட வரலாறான தமிழ்நாடு விடுதலைப் படையின் ஸ்தாபகர்களில் ஒருவரான தமிழரசனின் வாழ்க்கை வரலாற்றினையும் அவரது கொள்கைகளையும் விளக்கி தோழர் பாலன் எழுதிய “ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” என்ற நூலொன்று வெளிவந்துள்ளது.
ஏற்கனவே “சிறப்பு முகாம் எனும் சித்திரை வதை முகாம்” “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” என்ற இரு நூல்களை எழுதிய தோழர் பாலனது மூன்றாவது நூல் இது.
தமிழரசன் அதிகமானோர் அறிந்திராத ஒரு மனிதர். அறிந்த ஒரு சிலரும் அவரைப் பற்றிய ஒரு தவறான கருத்தையும் கன்னோட்டத்தையுமே கொண்டிருப்பதினை எம்மால் அவதானிக்க முடிகின்றது.
தமிழ் நாடு விடுதலைப்படையின் ஸ்தாபர்களில் ஒருவரான அவரை ஒரு பயங்கரவாதியாக அல்லது மக்கள் விரோத அரசியலை மேற்கொண்ட ஒரு கொலைகாரனாக கொள்ளைக்காரனாக இன்று விமர்சிப்பவர்கள் அநேகர்.
மேலும் இன்று தமிழ் பாசிச சக்தியாக வளர்ச்சி பெற்றுள்ள ‘நாம் தமிழர்’ அணியினர் அவரைப் புகழ்ந்தோதுவதினாலும் அவரது பதாகைகைளைத் தாங்கிச் செல்வதினாலும் அவரையும் ஒரு தமிழ் இன வெறியராக அடையாளப்படுத்துவோரும் உள்ளனர்.
இந்நிலையில் அவரின் உண்மை முகத்தை வெளிப்படுத்தும் வகையில் தோழர் பாலன் அவர்கள் இந்நூலை எழுதி வெளியிட்டுள்ளார்.
நூலின் ஆரம்பத்தில் தோழர் தமிழரசனை சுருக்கமாக அறிமுகம் செய்த நூலாசிரியர் தமிழரசன் பின் பற்றிய தத்துவங்களையும் பாதைகளையும் விபரித்து அவர் படுகொலை செய்யப்பட்ட நாள் வரை செய்த தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் விபரமாக எழுதியுள்ளார்.
அவற்றில் அவர் இடது சாரி தத்துவங்கள் மீது கொண்ட நம்பிக்கையையும் சாதீயம் குறித்த அவரது பார்வையினையும் இலங்கை மீதான இந்தியாவின் ஆக்கிரமிப்பு எண்ணம் குறித்த அவரது தீர்க்கதரிசனமான கருத்துக்களையும் மிகவும் விரிவாகவே விளக்கியுள்ளார்.
ஆயினும் எத்தனையோ தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் அவர் புரிந்துள்ள போதிலும் தமிழ்நாடு விடுதலைப்படை குறித்தும் தமிழரசன் குறித்தும் எம்மிடையே முரண்பாடான கருத்துக்களும் நெருடல்களும் நிறையவே உண்டு.
முதலில் இந்திய மார்க்சிய லெனினிய பொதுவுடைமைக் கட்சி என்ற பதாகையின் கீழ் (இபொக மாலெ) ஒன்றிணைந்த இந்தியாவின் கீழ் இணைந்து செயற்பாடு வந்த நக்சல்பாரிகளிடமிருந்து பிரிந்து தமிழ்தேசியம் தொடர்பான கருத்தினை முன் வைத்து அதிலிருந்து முரண்பட்டு புலவர் கலியபெருமாள், சுந்தரம், தமிழரசன் போன்றவர்கள் தமிழ்நாடு மார்க்சிய லெனினிய பொதுவுடைமைக் கட்சியையும் அதன் ஆயுதப் பிரிவாக தமிழ்நாடு விடுதளிப்படையையும் உருவாக்குகின்றனர்.
இப்படியாக அதிகார பூர்வமாக இந்திய நக்சல்பாரிகள் இயக்கமானது இந்திய தரப்பு, தமிழ்நாடு தரப்பு என பிரிய வழி வகை செய்கின்றனர். இப்பிரிவிற்கான முன்னோடிகளாக இருந்த இவர்கள் மீது இன்றளவும் பாரிய விமர்சங்கள் மற்றைய பொதுவுடைமைத் தோழர்களால் வைக்கப்படுகின்றன.
மேலும் தமிழகத்தில் ‘மக்களுக்கான யுத்தமா? மண்ணுக்கான யுத்தமா?’ என்ற கருத்தாக்கத்தில் மக்களுக்கான யுத்தத்தினை முதன்மைப் படுத்தி ‘மக்கள் யுத்தக் குழு’ என்ற நக்சல்பாரி இயக்கம் ஒரு மக்களுக்கான யுத்தத்தினை மேற்கொண்டு வரும் காலகட்டத்தில் மண்ணிற்கான யுத்தம் என்ற பதாகையுடன் இவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை மக்கள் போராட்டத்திற்கு இவர்கள் இழைத்த துரோகமாக இன்றளவும் பல்வேறு விமர்சங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
இன்று தமிழ் பாசிச சக்தியாக உருவெடுத்திருக்கும் ‘நாம் தமிழர்’ கட்சியினர் தமிழரசனை கொண்டாடுவது, எவ்வளவுதான் இடதுசாரி கொள்கை மீது பற்றுறுதி கொண்டிருந்தாலும் இனத் தேசியம் எனும் கருத்துவாக்கத்தை கடைப்பிடிப்பவர்கள் ஏதாவது ஒரு தருணத்தில் பாசிச சக்தியாக உருவெடுக்கும் அபாயம் உள்ளதையே வெளிப்படுத்துகின்றது.
மேலும் மிக அழகான முறையில் அச்சிடப்பட்டு ஒரு உன்னத நோக்கம் கொண்டு சீரிய முறையில் காலத்தின் தேவை கருதி பதிப்பிக்கப்பட்ட இந்நூலிலும் பல முரண்பாடுகளையும், பலவீனங்களையும் போதாத்தன்மைகளையும் எதிர்கொள்கிறோம்.
இது குறித்தும் பல்வேறு விமர்சங்களையும் கருத்துக்களையும் நாம் வைக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்.
ஒரு நூலிற்குரிய பலவீனங்களாக விளங்கும் ‘கூறியது கூறல் குற்றம், குறை படக் கூறல் கற்றம்’ என்ற இலக்கண மொழிக்கமைய தோழர் பாலனது எழுத்து முறைமையிலும் கூறியதை திரும்பக் திரும்பக் கூறும் ஒரு பலவீனமான அம்சம் ஒளிந்து கிடக்கின்றது.
இதனை நாம் அவரது ‘சிறப்பு முகாம் எனும் சித்திரவதை முகாம்’ நூல் பற்றி எழுதும் போதே குறிப்பிட்டிருந்தோம். அத்தகைய கூறியது கூறல் இந்நூலிலும் அதிகமாக விரவிக் கிடக்கின்றது. அத்துடன் அவர் ஏற்கனவே எழுதிய ‘இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு’ எனும் முழுப் புத்தகமுமே இந்நூலின் ஒரு பெரும்பகுதியாக புதையுண்டு கிடக்கின்றது. இது தோழர் தமிழரசன் வரலாற்றை கூற வந்த அவர் அதனை விட்டு அதிகம் விலகி கூற வந்த விடயத்தின் பேசு பொருளை பலவீனமாகியுள்ளார்.
அத்துடன் ‘தோழர் தமிழரசனும் அவர் பின் பற்றிய தத்துவங்களும்’ எனும் அத்தியாயத்தில் மிகவும் அவசியமற்ற விதத்தில் ட்ரொட்ஸ்கிய வாதத்தின் மீது அவசியமற்ற முறையில் சேறு பூசுவதற்கு அதிக பக்கங்களை வீணடித்துள்ளார். இது இங்கு புகலிடத்தில் இயங்கி வரும் ட்ரொட்ஸ்கிய வாதிகள் உடன் அவருக்குண்டான பகை முரண்பாடு காரணமாகவும் இருக்கலாம்.
இதே போன்றே ‘தமிழரசனும் சாதியத்திற்கு எதிரான போராட்டமும்’ எனும் அத்தியாயத்தில் சாதீயம் குறித்து பல்வேறு பயனுள்ள விடயங்களை அலசி ஆராய்ந்து எழுதியிருந்தாலும் இது இந்நூலின் மையவோட்டத்தை சிதைக்கும் ஒரு விடயமாகவே எம்மால் கருத முடிகின்றது.
அத்துடன் இந்நூலினை வாசிக்கும்போது எம்மிடையே பல்வேறு கேள்விகளும் எழுகின்றன. முக்கியமாக இன்று முன்னெப்போதையும் விட தமிழ் இன உணர்வாளர்களின் குரல்களும் அது சார்ந்த கட்சிகளின் எண்ணிக்கையும் என்றுமில்லாதவாறு மிகவும் அதிகரித்துள்ளது.
இவர்கள் நடாத்தும் கருத்தரங்குகள், விழாக்கள், மாநாடுகளில் தமிழரசனின் பதாதைகளோடு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் பதாதைகளும் சமமாக உயர்த்திப் பிடிக்கப் படுகின்றன.
ஆனால் தமிழ்நாடு விடுதலைப்படையின் தோழமை கட்சியான தமிழீழ பாதுகாப்புப் பேரவையின் அநேகமான தோழர்கள் விடுதலைப் புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களை வரலாறு எமக்குத் தெரியப்படுத்துகின்றது. எனவே இவ்விரு தலைவர்களையும் ஒரே பதாகையின் கீழ் உயர்த்திப்பிடிக்கும் செயலானது முற்றிலும் முரண்பாடான விடயமாகவே எம் பார்வையில் தெரிகின்றது. இது குறித்து ஆசிரியரின் பார்வை என்ன என்பது தெளிவு படுத்தப் படவில்லை.
மேலும் படுகொலை செய்யப்பட்ட தமிழரசனில் இருந்து மற்றைய தோழர்களின் படுகொலைகள் அனைத்தும் போலீஸ் அதிபர் தேவாரம் தலைமையில் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். உத்தரவிற்கினங்கவே நடைபெற்றது என்பது வரலாறு எமக்குத் தெரியப்படுத்தும் பாடம் ஆகும். ஆனாலும் இந்நூலில் எம்ஜியாரின் குறித்தும் அவரது காட்டாட்சி குறித்தும் எதுவித விபரங்களும் இல்லாமல் மறைக்கப்பட்டது மிகப்பெரிய குறையாகவே எம்மால் அவதானிக்கப்படுகின்றது.
இத்தகைய பலவேறு குறைபாடுகள், போதாமைகள் இருந்துள்ள போதிலும் இந்நூலானது தெரிவிக்கும் தகவல்கள் மிகவும் அபரிதமானவை. உதாரணமாக சாதீயம் குறித்து எழுதும் ஆசிரியர், கன்பொல்லை கிராம எழுச்சி, கந்தன் கருணை நாடகம், கீழ்வெண்மணி என பல விடயங்களையும் தகவல்களையும் தெரிவித்திருப்பது அவரது கடுமையான உழைப்பிற்கு சான்றாக விளங்குகின்றது.
இன்றைய தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தமிழரசன் காட்டிய பாதையில் பயணிப்போர் பலர். அதேபோல் அவரை கடுமையான விமர்சனத்திற்கு உட்படுத்துவோர் பலர்.
ஆயினும் ஒரு விவாதத்திற்கான ஒரு ஆரம்பப் புள்ளியை தொடக்கி வைத்த தோழர் பாலனது முயற்சி என்றுமே பாராட்டிற்குரியது.
தோழர் பாலன் அவர்கள் தொடர்ந்தும் எழுத வேண்டும் என்பதே எமது விருப்பமும் விண்ணப்பமும் ஆகும்
No comments:
Post a Comment