Tuesday, March 20, 2018

சண்முகதாசன் நினைவுப் பேருரை -அ.மார்க்ஸ்


சண்முகதாசன் நினைவுப் பேருரை             கொழும்பு, பிப்ரவரி 17, 2017

மார்க்சியத்தின் சமீபத்திய போக்குகளும் உலகமயமான பொருளாதாரத்தில் தொழிலாளர் இயக்கங்களின் எதிர்காலமும் - அ.மார்க்ஸ்

மார்க்சியக் கற்கைகளுக்கான சண்முகதாசன் நிலையத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில் இலங்கை கம்யூனிச இயக்கம் மற்றும் இலங்கைத் தொழிற்சங்க இயக்கம் ஆகியவற்றின் முன்னோடித் தலைவரான மதிப்பிற்குரிய தோழர் சண்முகதாசன் அவர்களின் 25ம் ஆண்டு நினைவுப் பேருரை ஆற்றும் இந்த அரிய வாய்ப்பை அளித்த இவ் அமைப்பின் பொறுப்பாளர்களுக்கும், நிறைவுரையாற்ற உள்ள மரியாதைக்குரிய இதர தோழர்களுக்கும், இந்த நினைவரங்கில் பங்குபெற வந்துள்ள எல்லோருக்கும் என் நன்றிகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்

ஐந்தாண்டுகளுக்கு முன் இந்த அரங்கில் நிகழ இருந்த எனது உரை துரதிர்ஷ்ட வசமாக நிறுத்தப்பட்ட சம்பவம் இங்கு கூடியுள்ளவர்களுக்கு நினைவிருக்கலாம். இந்த இடைப்பட்ட ஐந்தாண்டுகளில் உலகப் பொருளாதார அமைப்பும், அரசியலும், தொழிலாளர்களின் நிலையும் இன்னும் பெரிய அளவு மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளன. இவற்றைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

ஒன்று

20ம் நூற்றாண்டை 1914 ல் தொடங்கி, 1991ல் முடிந்த “சிறிய நூற்றாண்டு” என்பார் மார்க்சிய வரலாற்றறிஞர் எரிக் ஹாப்ஸ்வாம். அந்த நூற்றாண்டு, முதல் உலகப் போர் (1914) மற்றும் ருஷ்யப் புரட்சியில் (1917) தொடங்கி சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் சிதைவோடு (1989 -91) முடிகிறது என்பது இதன் பொருள். இந்தச் ‘சிறிய நூற்றாண்டை’ வாழும் மார்க்சிய அறிஞர்களில் ஒருவரான பேராசிரியர் கோரான் தெர்பான், “தொழிலாளி வர்க்கத்தின் நூற்றாண்டு” (Age of the Working Class) எனக் குறிப்பிடுவார். போப் 13ம் லியோ போன்றோரே தம் ‘திருமறைக் கடிதத்தில்’ (Rarem Novarum, 1891) தொழிலாளி வர்க்கத்தின் முக்கிய பங்கை அப்போது ஏற்க வேண்டிய நிலையில் இருந்தனர். தொழில் வளர்ச்சி, முதலாளி வர்க்கத்தின் செல்வக் கொழிப்பு, இன்னொரு பக்கம் பெருந்திரளான மக்களின் துயர்மிகு வாழ்க்கை என்பதாக இக்காலகட்டம் அமைந்தது எனவும், தொழிலாளர்கள் மத்தியில் இறுக்கமான ஒரு ஒருங்கிணைவும் பெரிய அளவில் தன்னனம்பிக்கையும் செழித்திருந்த ஒரு காலகட்டமாக அது விளங்கியது எனவும் குறிப்பிட்டு இரு தரப்பினரும் தம் கடமைகளில் பொறுப்பாக இருக்க வேண்டும் என எச்சரிப்பார் போப்பாண்டவர். மதத் தலைமைகளே தொழிலாளிவர்க்கத்தின் எழுச்சியைக் கண்டு முதலாளி வர்க்கத்தை எச்சரிக்க நேர்ந்த கணம் அது.

“ஐரோப்பா ஆஸ்திரேலியா முதலான பகுதிகளில் தொழிலாளி வர்க்கக் கட்சிகள் தேர்தல் அரசியலிலும் ஆட்சிகளை நிர்ணயிப்பதிலும் முக்கிய சக்திகள் ஆயின. அக்டோபர் புரட்சி என்பது சமூக மாற்ற அரசியலுக்கான ஒரு மாதிரியாக சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு மட்டுமின்றி உலகெங்கிலும் விளங்கும் நிலை எற்பட்டது. ஆப்ரிக்க நாடுகள் பலவற்றிலும் கூட தொழிலாளி வர்க்கக் கட்சிகள் உருவாயின. நேருவின் இந்தியா உட்பட காலனியத்திலிருந்து விடுபட்ட நாடுகள் பலவும் திட்டமிட்ட பொருளாதாரம் (planned economy), சோஷலிச வடிவ வளர்ச்சி என்றெல்லாம் பேசவும், அந்தத் திசையில் இயங்கவும் முற்சிக்கும் நிலை உருவானது. மே தினம் சிக்காகோவில் (1886) மட்டுமின்றி ஹவானாவிலும் (1890), பிற லத்தீன் அமெரிக்க நகரங்களிலும் எழுச்சியுடன் கடைபிடிக்கப்படும் நிலை ஏற்பட்டது. மெக்சிகோவில் வெனுஷியானோ கரான்சா, ப்ரேசிலில் கெடுலியோ வர்காஸ், அர்ஜென்டினாவில் ட்ராட்ஸ்கியிசப் போராளிகள், பொலிவியாவில் சுரங்கத் தொழிலாளிகளின் எழுச்சி முதலியன அரசியல் அந்தந்த நாடுகளில் அரசியல் மாற்றங்களுக்குக் காரணமாயின..” – என்றெல்லாம் கோரான் தெர்பார்ன் சென்ற நூற்றாண்டுத் தொழிலாளர் எழுச்சிகளையும் அவை உலகளவில் ஏற்படுத்திய தாக்கங்களையும் பட்டியலிடுவார்.

ஹிட்லர் கூட ‘தேசிய சோஷலிச ஜெர்மன் தொழிலாளர் கட்சி’ என்றுதான் தன் கட்சிக்குப் பெயரிட நேர்ந்தது. சோவியத் யூனியனைத் தொடர்ந்து ஜெர்மன், ஸ்வீடன் முதலான நாடுகள் மே தினத்தைப் பொது விடுமுறை தினமாக அனுசரிக்கத் தொடங்கின.

எழுத்துக்களிலும் கலைவடிவங்களிலும் தொழிலாளி வர்க்கம் கொண்டாடப்படும் நிலையும் ஏற்பட்டது. ப்ரெக்ட் முதல் பிகாசோ வரை இடதுசாரி ‘அவான் கார்ட்டே’ இலக்கியவாதிகள் சோஷலிசச் சிந்தனைகளால் ஊக்குவிக்கப்பட்ட படைப்புகளை வெளிப்படுத்தினர். பெல்ஜியச் சிற்பி கான்ஸ்டான்டின் ம்யூனியர் பல்வேறு தொழில்களைச் செய்யும் தொழிலாளிகளைச் சிற்பங்களாக வடித்தார். ப்ரசல்சில் அவர் எழுப்பிய உழைப்பின் வெற்றிச் சின்னத்தை ஒட்டி சென்னை மெரீனாவிலும் கூட உழைப்பாளிகள் சிலை வடித்துக் கொண்டாடப்பட்டனர்.  ப்ரசியாவின் ஏர்னஸ்ட் யுங்கர் எழுதிய “The Worker” எனும் புகழ் பெற்ற கட்டுரை (1932) மூன்றாவது எஸ்டேட் வீழ்ந்து தொழிலாளி வர்க்க  ஜனநாயகம் உருவாகும் என்கிற நம்பிக்கையை விதைத்தது.
எனில் சென்ற நூற்றாண்டைத் தொழிலாளி வர்க்கத்தின் நூற்றாண்டு எனச் சொல்லலாமா?

“தொழிலாளி வர்க்கத்தின் ஆட்சி என்கிற கோட்பாட்டை முன்வைத்த மார்க்சீயம் தோற்றுவிட்டது, இனி வர்க்கப் போராட்டத்திற்குக் காலமில்லை, இனி கலாசாரங்களுக்கிடையேயான மோதல்கள் (clash of civilizations) மட்டுமே சாத்தியம்” என சாமுவேல் ஹட்டிங்டன் போன்றோர் சொல்வதுதான் உண்மையா?

இரண்டு

மார்க்சீயத்திற்கு இப்படிக் கல்லறை வாசகம் எழுதிக் கொண்டிருப்போர் அதற்கு ஆதாரமாக எதைச் சொல்கிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். அவர்கள் மார்க்சீயம் முன்வைத்த அடிப்படைக் கோட்பாடுகள் எதுவும் பொய்த்துவிட்டன என நிறுவவில்லை. நிறுவவும் முடியாது. அவர்கள் சொல்வதெல்லாம் ஒன்றுதான். சோஷலிசக் கட்டுமானங்கள் எனச் சொல்லப்பட்ட புரட்சிக்குப் பிந்திய சமுதாயங்கள் அனைத்தும் தகர்ந்து விட்டன என்பதுதான். இது மட்டுமே அவர்கள் காட்டும் ஒரே நிரூபணம்.
மார்க்ஸின் பங்களிப்பு என்பதில் புரட்சிக்குப் பிந்திய சமுதாயம் பற்றிப் பெரிதாக ஏதும் இல்லை. 'கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை', ‘கோதா வேலைத் திட்டம்’ முதலானவற்றில் மெலிதாகச் சிலவற்றைக் கோடி காட்டியதற்கு அப்பால் அவர் அது குறித்து விரிவாக ஏதும் பேசவில்லை. அப்படியானால் மார்க்சின் பங்களிப்புகள்தான் எவை?

மார்க்ஸ் மறைந்தபோது அவர் கல்லறையில் ஏங்கல்ஸ் ஆற்றிய சொற்பொழிவில் மார்க்சின் பங்களிப்புகளாகச் சொல்வது - அவர் முதலாளியத்தின் இயங்கு விதிகளைக் கண்டறிந்தவர்; பொருளாயதத் தேவைகளே மனிதர்களை வரலாறு பூராவிலும் இயக்கி வந்துள்ளது என்கிற பின்னணியில் மானுட வளர்ச்சி வரலாற்றின் பொதுத் தன்மைகளைச் சொன்னவர் அவர்- என்பன மட்டுமே.

ஆக மார்க்சின் பங்களிப்புகளில் சோஷலிசக் கட்டுமானம் குறித்த ஆய்வுக்கு இடமிருக்கவில்லை என்பதுதான் இதன் மூலம் நாம் அறிவது. அவை பின்னாளில் ருஷ்யா, சீனா. என அந்தந்த அரசுகளால் அவரவர்க்குப் புரிந்தபடி முயற்சிக்கப்பட்டன. அவற்றில் ஏற்பட்ட தோல்விகள் ஆய்வுக்குரியவை என்பதில் கருத்து மாறுபாடில்லை. ஆனால் அவற்றை மார்க்சீயத்தின் தோல்வி எனச் சொல்ல இயலாது. சோவியத் ருஷ்யா, சீனா, வியட்நாம், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் எதுவும் முழுமையான சோஷலிசச் சமுதாயங்களாக மலரவில்லை. அவற்றை ஆய்வாளர்கள் “புரட்சிக்குப் பிந்திய சமுதாயங்கள்” என்றுதான் குறிப்பிடுகின்றனர். அதற்கு மேலாக எதையும் உரிமை கொண்டாடுவதில்லை.

இன்னொன்றையும் நாம் இங்கு கவனிக்க வேண்டும். முதலாளியமும் இங்கு வெற்றி பெறவில்லை என்பதுதான் அது. மார்க்ஸ் சொன்னது போலவே அது தொடர்ந்து நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இன்று பட்டினிச் சாவுகளையும் கடும் ஊழல்களையும், பெரும் சுற்றுச் சூழல் கேடுகளையும், சாதி, மத, இன வெறுப்புகளையும் வெளிப்படுத்தும் நாடுகள், சமூகங்கள் அனைத்தும் பூர்ஷுவாச் சமூகங்கள்தான். முதலாளித்துவ நாடுகள்தான். தொடர்ந்து பொருளாதார நெருக்கடிகளால் திணறுபவையும் அவைதான். ஆயிரக் கணக்கில் பட்டினிச் சாவுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் காணா, ஏமன், எதியோப்பியா முதலான அரசுகள் எல்லாம் சோஷலிசக் கட்டுமானங்களா? முழுக்க முழுக்கச் சந்தைப் பொருளாதாரத்தைச் செயல்படுத்தும் முதலாளித்துவ நாடுகள்தானே.

சோஷலிசம் தோற்றுவிட்டது எனச் சொல்பவர்கள் உரிய ஆய்வு நெறிகளுடன் அதை நிறுவியதும் இல்லை. திட்டமிட்ட பொருளாதாரம் தோல்வியிலேயே முடியும் என இதுவரை கோட்பாட்டு ரீதியாக யாரேனும் நிறுவியுள்ளனரா? சோஷலிசமும் ஜனநாயகமும் இணைந்திருப்பது சாத்தியமில்லை என இதுவரை நிறுவப்பட்டுள்ளதா? தனிச் சொத்தும் சந்தைப் பொருளாதாரமும் மட்டுமே ஜனநாயகம் செழித்திருப்பதற்கான நிபந்தனைகள் என எந்த முதலாளித்துவ நிபுணர்களாவது கோட்பாட்டு ரீதியாகத் தருவித்துள்ளனரா?
இல்லை. இல்லை. இல்லை.

மூன்று

புர்ட்சிக்குப் பிந்திய சமுதாயங்கள் வீழ்ந்தது உண்மைதான். ஆனால் இன்னொரு பக்கம் வரலாற்றில் அவை மிகப்பெரிய சாதனைகளைச் செய்துள்ளதையும் நாம் மறந்துவிட முடியாது. தனிச் சொத்துக் குவிப்பின் மீது மார்க்சீயம் வைத்த விமர்சனம் உலகளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. தென் ஆப்ரிகாவில் இனவாதத்தின் வீழ்ச்சி, இந்தியா முதலான நாடுகளில் தீண்டாமை சட்ட விரோதம் ஆக்கப்பட்டது, உலகளாவிய மனித உரிமைப் பிரகடனம், கூலித் தொழிலாளர் (wage labour) மற்றும் பழங்குடி மக்களின் உரிமைகள் சட்டமாக்கப் படுதல், வங்கிகள் மற்றும் நிதி மூலதனத்தின் மீதான அரசுக் கட்டுப்பாடுகள், நில உச்சவரம்புச் சட்டங்கள் நிறைவேற்றப்படுதல், அதிக வருமானங்களின் மீதான கூடுதலான வரி விதிப்பு, கல்வி, மருத்துவம், போக்குவரத்து முதலியன அரசுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுதல், ஓய்வூதியப் பாதுகாப்பு, கல்வி மற்றும் மருத்துவம் முதலியன பெரும்பாலும் இலவசமாக அளிக்கப்படுதல் முதலியன சென்ற நூற்றாண்டில் நடைமுறையானது என்பதெல்லாம் நேரடியாகக் கம்யூனிஸ்ட் கட்சிகள் அல்லது ஆட்சிகளின் சாதனைகளாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் 20ம் நூற்றாண்டில் மேலுக்கு வந்த இந்த சமூக நலப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் அன்று உலகெங்கிலும் ஓங்கியிருந்த கம்யூனிசச் சித்தாந்தத்தின் பங்களிப்பை யாரும் அவ்வளவு எளிதாக மறுத்துவிட முடியாது.

இன்று மார்க்சீயம் மற்றும் சோஷலிசக் கட்டுமானங்கள் வீழ்ந்துவிட்டன, இனி வ்ர்க்க முரண்பாடுகளுக்குக் காலமில்லை என்கிற கூப்பாடுகளின் பின்னணியில் மேற்குறித்த சென்ற நூற்றாண்டின் சமூகப் பாதுகாப்புகள் அனைத்தும் பறிபோய்க் கொண்டுள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

முதலாளியக் கட்சிகளின் ஆட்சிகளுக்குள்ளும் இடதுசாரிக் கருத்தியல்கள், மற்றும் இயக்கங்களின் இருப்பும் எதிர்ப்பும் இனவாதம் (racism), காலனியம் ஆகியவற்றின் வீழ்ச்சிகளில் முக்கிய பங்கு வகித்தன; அங்கோலாவுக்கு கியூபா போன்ற ஒரு சிறிய நாட்டிலிருந்த இடதுசாரி அரசு அனுப்பிய படைகள்தான் தென் ஆப்ரிக்க இனவாத அரசின் ஆக்ரமிப்பை முறியடித்தது. ஸ்டாலின், மாஓ கால ஆட்சிகளின் அத்துமீறல்கள் விமர்சனத்துக்குரியவை என்பதில் கருத்து மாறுபாடில்லை. ஆனால் ஸ்டாலினியத்தையும், மாஓயிசத்தையும் ஏற்றுக் கொண்டு தியாக உணர்வுடனும் அர்ப்பணிப்புடனும் செயல்பட்ட இயக்கங்கள்தான் இந்தியா உள்ளிட்ட எத்தனையோ நாடுகளில் பழங்குடி மக்கள் உள்ளிட்ட மக்களின் பிரச்சினைகளைக் கையிலெடுத்து அவர்களுக்குப் பாதுகாப்பளித்தன. இன்றும் அளித்து வருகின்றன.

எல்லாவற்றிற்கும் மேலாக உலகளவில் புவிஅரசியல் பன்மைத்துவம் (geo-political pluralism) காக்கப்பட்டதில் புரட்சிக்குப் பந்திய சமூகங்களின் பங்களிப்புகளை அவ்வளவு எளிதாக மறந்துவிட இயலாது. சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் வீழ்ச்சிக்கு அடுத்த பத்தாண்டுகளில் இங்கு கட்டமைக்கப்பட்ட இஸ்லாமிய வெறுப்பு (islamophobia), “9/11 க்குப் பின் உலகம் மாறிவிட்டது” என்கிற முழக்கத்தின் பின்னணியில் மேற்கொள்ளப்பட்ட வளைகுடாப் போர்கள், எல்லை தாண்டி அடுத்த நாட்டு மக்களை அழிக்கும் ட்ரோன் தாக்குதல்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைக் கவிழ்த்து அந்நாடுகளின் தலைவர்களைத் தூக்கிலிடும் கொடுமைகள், இலட்சக் கண்கான சிரிய அகதிகள் இன்று உலகெங்கும் தஞ்சம் தேடி அலைந்து திரியும் நிலை இவை அனைத்தும் இன்று உருவாகியுள்ள ஒற்றைத் துருவ உலகின் விளைவுகள்தானே. பேரழிவு ஆயுதங்கள் (Weapons of Mass Destruction) வைத்திருந்தார் எனவும், இரட்டக் கோபுரத் தாக்குதலுக்கு உதவினார் எனவும் குற்றம் சாட்டி அமெரிக்காவும் பிரிட்டனும் மேற்கொண்ட ஈராக் படைஎடுப்பும், அவை மேற்கொண்ட அழிவு நடவடிக்கைகளும் தவறானவை, அவை பொய்யான குற்றச் சாட்டுகள் என சர் ஜான் சில்காட்டின் ஆய்வறிக்கை இன்று (2016) ஆதார பூர்வமாக நிறுவியுள்ளது. 

டோனி ப்ளேய்ர் பகிரங்க மன்னிப்புக் கேட்கிறார். ஒபாமா, “நான் அப்போதே தவறு எனச் சொன்னேன்” எனச் சொல்லி நழுவுகிறார். ஆனால் அந்தப் பொய்யான குற்றச்சாட்டுகளின் அழிவில் ஒரு நாடு சின்னாபின்னமாக்ககப்பட்டது, இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட சன்னி முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர், ஐ.எஸ் என்கிற பயங்கரவாத அமைப்பு உருவாக அந்தத் தாக்குதல் காரணமாக இருந்தது. வார்சா ஒப்பந்தக் கூட்டமைப்பு கலைக்கப்பட்ட போது அவற்றிலிருந்து பிரிந்த நாடுகள் நேட்டோ (NATO) வுக்குள் சேர்த்துக் கொள்ளப்படமாட்டாது எனக் கொடுக்கப்ப்பட்ட வாக்குறுதி இன்று அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் சோவியத்துக்குப் பிந்திய உலகில் புவி அரசியல் பன்மைத்துவம் அழிந்ததன் விளைவுகள்தானே.

நான்கு

இவ்வளவையும் இங்கு சுட்டிக் காட்டுவது என்பது சோஷலிசக் கட்டுமான்னங்களில் இருந்த பிரச்சினைகள் குறித்த விவாதம் தேவையில்லை என்பதற்காக அல்ல. உலகெங்கிலும் சோஷலிசக் கட்டுமானங்களாக அறியப்பட்ட நாடுகள் இன்று அம் முயற்சியைக் கைவிட்டு விட்டதாக வெளிப்படையாக அறிவித்தும் அறிவிக்காமலும் அப்பாதையிலிருந்து விலகி, பல்வேறு மட்டங்களில் தம்மை உலக முதலாளிய அமைப்புகளுடன் இணைத்துக் கொண்டுள்ளன, ரஷ்யா உட்பட சோவியத் யூனியனிலிருந்து பிரிந்த நாடுகளும், வார்சா ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளும், இடதுசாரிச் சாய்வுடன் இருந்த லத்தீன் அமெரிக்க நாடுகள் பலவும் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் என்கிற கோட்பாட்டை முற்றாகக் கைவிட்டுப் பல கட்சி ஆட்சி முறைக்கு வந்துள்ளன. இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் பலவும் ஏற்கனவே பல கட்சி ஆட்சி முறைக்குள் செயல்பட்டு வந்தவை. அவை இப்போது பா.வ. சர்வாதிகாரம் என்பதைக் கொள்கை அளவிலும் கூட வற்புறுத்துவதில்லை.

சோஷலிசக் கட்டுமான முயற்சிகளைக் கைவிட்டு உலக முதலாளியத்துடன் இணைதல் என்பதன் பொருள் திட்டமிட்ட பொருளாதாரம் என்பதைக் கைவிட்டு சந்தைப் பொருளாதாரத்தை ஏற்றுக் கொள்வதுதான் என்பதை விளக்க வேண்டியதில்லை. சீனா ஒரு கட்சி ஆட்சிமுறையைக் கைவிடவில்லை ஆயினும் இன்று அது சந்தைப் பொருளாதாரத்தை ஏற்றுக் கொண்டு விட்டது. லத்தீன் அமெரிக்க நாடுகளில் சோஷலிசச் சாய்வுடன் இருந்த நாடுகளும் சந்தைப் பொருளாதாரத்துடன் சமரசமானவைதான். முதலாளிய நாடுகளில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகளில் பலவும் இது குறித்து வெளிப்படையான விவாதங்களை முன்வைக்காவிட்டாலும் மௌனமாக அவற்றை ஏற்றுக் கொள்பவையாகவே உள்ளன.

ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி அழுத்தம் திருத்தமாகத் தான் சந்தைப் பொருளாதாரத்தைக் கைவிட்டுவிட்டதாக அறிவித்துள்ளது. அக் கட்சியின் தலைமைப் பொறுப்பில் உள்ள ஃபுவா டெட்சுசோ 2002 லும் 2006 லும் இரு முறை சீனாவுக்கு அழைக்கப்பட்டு அங்கு உரையாற்றினார். அவற்றை இணையத் தளங்களில் காணலாம். 2002ல் பெய்ஜிங்கில் உள்ள Chinese Academy of Social Sciences ல் அவர் ஆற்றிய உரையின் தலைப்பு ‘லெனினும் சந்தைப் பொருளாதாரமும்’ என்பதுதான். அதில் அவர் மிகத் தீவிரமாக சந்தைப் பொருளாதாரத்தை ஆதரிப்பதோடு லெனின் காலத்திலேயே திட்டமிட்ட பொருளாதாரம் கைவிடப்பட்டதாக அவர் வாதிடுகிறார். இந்த அம்சத்தில் தற்போதைய சீனப் பாதையை அவர் முழுமையாக ஏற்றுக் கொள்கிறார். இந்தியாவில் செயல்படும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நூல் வெளியீட்டு நிறுவனமான ‘பாரதி புத்தகாலயம்’ ஃபுவா வின் இரு கட்டுரைகளையும் மொழியாக்கி வெளியிட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. “எங்களது பாதை சந்தைப் பொருளாதாரத்துடம் சோஷலிசத்தை அடைவது. சந்தைப் பொருளாதாரத்தையும் திட்டமிட்ட பொருளாதாரத்தையும் இணைப்பது. படிப்படியாகச் சோஷலிசத்தை நோக்கிச் செல்வது” என்கிறார். ஒரு முதலாளிய உலகிற்குள் திட்டமிட்ட பொருளாதாரத்தைக் கடைபிடிப்பது என்பதில் உள்ள சிக்கல்களை எவ்வாறு லெனின் எதிர்கொள்ள நேர்ந்தது என்பதையும் அதன் விளைவாக அவர் எவ்வாறு சந்தைப் பொருளாதாரத்துடன் சமரசமாக நேர்ந்தது என்பதையும் விரிவாகப் பேசுகிறார்.

லத்தீன் அமெரிக்க சோஷலிச முயற்சிகளைத் தன் நூல்களில் விரிவாக ஆராயும் மார்த்தா நுஸ்பாம், “சமூக உயிரிகளாக (social beings) மக்களைக் கருதி ஒருங்கிணைக்கப்பட்ட மனித வளர்ச்சியை (integral human development) 21ம் நூற்றாண்டு சோஷலிசம் கடைபிடிக்க வேண்டும்; சமூகச் சொத்து என்கிற கருத்தாக்கம் வலிமைப் படுத்தப்பட வேண்டும்; பொருளாதார வளர்ச்சிக்கு அரசைக் காட்டிலும் சமூகத்தைப் பொறுப்பாக்க வேண்டும்; தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தம்மைத் தேர்ந்தெடுத்த சமூக அடித்தளத்திலிருந்து விலகக் கூடாது, தங்களைத் தேர்ந்தெடுத்த மக்கள் முன் தம் செயல்பாடுகள் குறித்த கணக்கை அவர்கள் தொடர்ந்து சமர்ப்பித்து (render accounts) வர வேண்டும். அவர்களின் வழக்கமான வேலைகளைத் தொடர்ந்து செய்து அந்த ஊதியத்தின் மூலம்தான் தம் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்” என்கிற அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்.

சேகுவாராவின் தலைமையில் கியூபாவில் மேற்கொள்ளப்பட்ட “பொருளாதார மேலாண்மைக்கான திட்டமிட்ட நிதி அமைப்பு” (Budgetary Finance System of Economic Management) என்பதை ஒரு எடுத்துக்காட்டாக மார்த்தா முன் வைக்கிறார். தொழில்களைத் தேசிய உடைமை ஆக்கினால் மட்டும் போதாது. மார்க்சியக் கருத்தியல் அடிப்படையில் திட்டங்களை வகுத்து அந்த அடிப்படையில் தொழிலகங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தல், தொழிலகங்களின் உரிமையை உண்மையான வகையில் தொழிலாளர்களுக்கு மாற்றியமைத்தல், பொருளாதாரச் செயற்பாடுகளில் அறம் சார்ந்த நிலைபாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்தல் ஆகியவற்றிற்கு மார்த்தா முக்கியத்துவம் அளிக்கிறார்.

“முதலாளித்துவ நிறுவனங்களின் செயலூக்கமற்ற கருவிகளை (dull instruments of capitalism) வைத்துக் கொண்டு நாம் சோஷலிசத்தைக் கட்ட முடியாது. ஆனால் இந்தக் கருவிகளை நாம் ஒரே நாளில் தூக்கி எறிந்துவிடவும் முடியாது. தேசிய அளவிலான பொருளாதாரத் திட்டமிடுதலின் கீழ் முதலாளியத் தொழிலகங்களைக் கொண்டு வந்து அவற்றைப் படிப்படியாக மாற்றி அமைக்க வேண்டும். முதலாளிகள் ஆழமான தேசப் பற்றுடன் செயல்பட வேண்டும். அரசு வங்கிகளின் ஊடாக அவர்களுக்கு எளிய முறையில் கடன் வசதிகள் அளிக்கப்பட வேண்டும்”- என்பன சோஷலிசக் கட்டுமானம் குறித்த பழைய அனுபவங்களிலிருந்து அவர் கற்றுக் கொண்ட பாடங்களாக முன்வைக்கப்படும் கருத்துக்கள்.
தனியார் நிறுவனங்களுக்கும் சோஷலிசக் கட்டுமானத்தில் இடமுண்டு; எனினும் அவர்களின் செயல்பாடுகள் சோஷலிச அரசின் மூலம் கட்டுப்படுத்தப்பட வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் சமூகக் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும்; அவர்கள் மக்களுக்குப் பொறுப்பாக வேண்டும் என்றெல்லாம் மார்த்தா சொல்லும்போது அவை எல்லாம் சோஷலிசக் கட்டுமானங்களில் சரியாக நிறைவேற்றப்படவில்லை, அவற்றின் விளைவே அங்கு மிகப் பெரிய அளவில் கட்சி அதிகாரவர்க்கம் உருவானது என்கிற கருத்தை அவர் முன்வைப்பதை நாம் விளங்கிக் கொள்கிறோம்.

லத்தீன் அமெரிக்கப் பொருளாதார அரசியல் செயல்பாடுகளை விரிவாக ஆய்வு செய்துள்ள டாக்டர் ஹெலன் கெல்லர் வெனிசூலாவை மையமாக வைத்துச் செய்த ஆய்வுகளின் அடிப்படையில் (Venezeula, Building a Socialistic Communal Economy) ஒரு சோஷலிச அரசின் கட்டுப்பாட்டில் தனியார் நிறுவனங்களைக் கொண்டு வருவதில் உள்ள சிக்கல்களை விரிவாகப் பேசுகிறார். படிப்படியாக தனியார் நிறுவனக்களைக் கட்டுக்குள் கொண்டுவருவது சாத்தியமில்லை என்கிறார். அரசுத் துறைகள் மூலம் ஈட்டப்படும் அந்நியச் செலாவணியைத் தனியார் நிறுவங்கள் உற்பத்தியைப் பெருக்குவதற்குச் செலவிடுவதில்லை என்கிறார். மாறாக அந்நிய நிறுவனங்களிடமிருந்து உதிரி பாகங்களை வாங்கி இணைத்துக் கருவிகளைச் செய்து கொள்ளை லாபம் அடிக்க அந்த நிதியை அவை பயன்படுத்துகின்றன என்பதை ஆதாரங்களுடன் விளக்குகிறார். 2013 க்குப் பிந்திய லத்தின் அமெரிக்காவை ஆய்வு செய்யும் மார்க்சிய அறிஞர் ஜேம்ஸ் பெட்ராஸ் (Latin America: Class Struggle and Resistance in the Age of Extractive Capitalism) இடது சாய்வு அரசுகளின் (centre left regimes) நிலைமை மோசமாகி வருவதைச் சுட்டிக் காட்டுகிறார். பொருளாதார நெருக்கடிகள் மற்றும் வர்க்கப் போராட்ட அமைப்புகள் முதலாளியத்தால் உள் வாங்கப்பட்டுச் செயலிழக்கும் ஆபத்து குறித்து அவர் எச்சரிக்கிறார்.
பாட்டாளி வர்க்கத்தை அதிகாரத்தில் அமர்த்துவதற்கு ஆயுதப் போராட்டத்திற்கு  முக்கியத்துவம் அளிப்பதையும் இன்று உலகக் கம்யூனிஸ்ட் கட்சிகள் பலவும் கைவிட்டுள்ளன.
மரபுவழி மார்க்சியத்தில் நின்று அணுகும் இவர்கள் வைக்கும் இவ்விமர்சனங்கள் சோஷலிசக் கட்டுமானம் இன்றைய சூழலில் எத்தகைய சிக்கல்கள் நிறைந்ததாக உள்ளன என்பதை சுட்டிக்காட்டுகின்றன.

ஐந்து

ஒன்றை நாம் மறந்துவிடக் கூடாது. மார்க்சியம் என்பது உருப்பெற்று முடிந்துபோன ஒரு தத்துவமல்ல. தன்னை வளர்த்துக் கொண்டே இருந்ததுதான் அதன் வரலாறு. மார்க்சின் தொடக்க கால எழுத்துக்களுக்கும் பிற்கால எழுத்துக்களுக்கும் உள்ள வளர்ச்சிகளை இன்று அறிஞர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். மார்க்சுக்குப் பிந்திய கடந்த நூற்றாண்டுகளில் உலகம் மிகப் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. லெனின் தன் காலத்தில், மார்க்சுக்குப் பின் ஏற்பட்டுள்ள மாற்றங்களை விளக்க இன்னும் எழுபது மார்க்சுகள் தேவை எனக் குறிப்பிட்டார். அந்த அடிப்படையில் தன் காலத்திய மேலை முதலாளியம் எவ்வாறு ஏகாதிபத்தியமாக உருப்பெற்றுள்ளது என்பதை விளக்கி மார்க்சியத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தினார்.
பல்வேறு பண்பாட்டு, வரலாற்று வேறுபாடுகள் உள்ள நாடுகளையும் ஒன்றாக இணைத்து சோவியத் யூனியனாகக் கட்டமைக்கும் அனுபவத்தின் ஊடாக தேசிய இனப் பிரச்சினை குறித்த அணுகல்முறையை லெனினுக்குப் பின் ஸ்டாலின் உருவாக்கினார். சீனா, இந்தியா முதலான நாடுகளின் தனித்துவத்தை முன்னிறுத்தி ‘புதிய ஜனநாயகப் புரட்சி’ எனும் கருத்தாக்கத்தை மாஓ முன்வைத்தார்.

லெனின், ஸ்டாலின், மாஓ முதலானோருக்குப் பின் ஏற்பட்டுள்ள மாற்றங்களை விளக்க இன்னும் எழுநூறு மார்க்சுகள் வேண்டும் என்கிற நிலை இன்று ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தகவல் தொழில்நுட்பங்களிலும் அதன் ஊடாக மக்கள் மீதான கண்காணிப்பிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்பன மிகவும் கவனத்துக்குரிய ஒன்று.

இன்று உருவாகியுள்ள "உலகமயம்" என்பது ஒரு வகையில் எல்லாவற்றையும் "தேசிய" எல்லை கடந்ததாக மாற்றியுள்ளது. உலக அளவிலான முதலாளிகள் வரிசையில் இடம்பெறத்தக்க சிலரை நாம் இந்தியா போன்ற நாடுகளிலும் அடையாளம் காண முடிகிறது. இந்தியா போன்ற நாடுகளில் உள்ளது போல கொடுஞ் சுரண்டலுக்கு ஆளாகிற, எந்த விதமான வாழ்க்கை உத்தரவாதங்களும் இல்லாத தொழிலாளி வர்க்கத்தை நாம் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் காண முடிகிறது. இதன் பொருள் அமெரிக்கா போன்ற நாடுகளும் இந்தியா போன்ற நாடுகளும் எல்லா அம்சங்களிலும் ஒன்றாகிவிட்டன என்பதோ இல்லை முதலாளியம் என்பது அதன் தவிர்க்க இயலாத நெருக்கடிகளை எல்லாம் கடந்துவிட்டது என்பதோ அல்ல.
இன்றைய சூழலை நாம் இப்படித்தான் சொல்ல வேண்டும்: முதலாளி, தொழிலாளி, ஏகாதிபத்தியம், காலனியம், நவ காலனியம் என்பனவெல்லாம் முன்னைப்போல இறுக்கமாக வரையறுக்கப்பட்ட "தெளிவு" களுடன் நம் முன் காட்சி அளிக்கவில்லை. யார் தன்னுடைய முதலாளி என்று கூட அடையாளம் காண இயலாத நிலையில் இன்றைய 'கால் சென்டர்' பணிகளில் உள்ள தொழிலாளிகள் உள்ளனர். எல்லா வரையறைகளும் இன்று தெளிவற்றதாகி (nebulous) விட்டன.

இதன் பொருள் தொழிலாளி வர்க்கம் அழிந்து விட்டது என்பதோ, சென்ற நூற்றாண்டுகளில் திரட்டப்பட்டது போல செவ்வியல் வடிவத்தில் அமைப்பு ரீதியாகத் திரளச் சாத்தியமற்றதாக ஆகிவிட்டது என்பதோ அல்ல. மார்க்ஸ் காலத்திற்கும் நம்முடைய காலத்திற்கும் இடையில் அடிப்படைகள் மாறிவிடவில்லை. ஆனால் சூழல்கள் பெரிதாக மாறிவிட்டன. இன்றும் முரண்கள் அப்படியேதான் உள்ளன. சொல்லப்போனால் முரண்கள் இன்னும் கூர்மை அடைந்துள்ளன. முதலாளியத்தின் மக்கள் நல அரசு (welfare state),  சமூகப் பாதுகாப்பு (social security) என்பதெல்லாம் காலாவதியாகிவிட்டன. இத்தகைய அம்சங்களில்தான் இன்று உலகெங்கிலும் தொழிலாளிகளுக்கு இடையில் சம நிலை ஏற்பட்டுள்ளது.

2008 ல் உலகளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் (Great Recession), 2011 ல் ஏற்பட்ட ஓய்வூதியப் போராட்டங்கள் (pension strikes), வால்ஸ்ட்ரீட் உட்பட உலகெங்கிலும் நடந்த அமர்வுப் போராட்டங்கள் (occupy movements) ஆகியன இப்படியான நெருக்கடிகள் மட்டுமல்ல, முதலாளியத்திற்கு எதிரான எதிர்ப்புகளும் இன்று உலக அளவில் உருவாகத் தொடங்கி விட்டதைக் காட்டுகின்றன.

மார்க்சின் காலத்தில் இல்லாத இம்மாற்றங்களைக் கணக்கில் கொண்டு மார்க்சீயத்தை நவீன சிந்தனைகளின் துணையோடு வளர்த்தெடுக்க வேண்டிய முயற்சிகளை இன்று இடதுசாரிச் சிந்தனையாளர்கள் எவ்வாறு மேற்கொள்கின்றனர் என்பதை மிகச் சுருக்கமாகக் காணலாம். எல்லாவற்றையும் இங்கே தொகுக்க இயலாது என்பதால் இம்மானுவேல் வாலர்ஸ்டைன் மற்றும் அந்தோனியோ நெக்ரி, மிஷெல் ஹார்ட் என்கிற இரட்டையரின் கோட்பாடு ஆகியவற்றை மட்டும் பார்க்கலாம்.
1.   வாலர்ஸ்டைனின் மைய விளிம்பு அணுக்கல்முறை
முதலாளியம் இன்றைய உலகை வேறெப்போதைக் காட்டிலும் மிக நெருக்கமாக ஒருங்கிணைத்துள்ளது என்பதற்கு இந்தக் கோட்பாடுகள் முகியத்துவம் அளிக்கின்றன. முதலாளியத்தின் அடிப்படையான மூலதனத் திரட்டல் என்பதில் காலனியக் கொள்ளைகள் எத்தகைய முக்கிய பங்கு வகித்தன என்பதை மார்க்ஸ் நுணுக்கமாக விளக்கியுள்ளதை அறிவோம். உலகை இந்த அடிப்படையில் முதலாளிய "மையம்" எனவும் "விளிம்புகள்" எனவும் பிரித்தணுக வேண்டும் என்கிறது வாலர்ஸ்டைன் முதலானோர் முன்வைக்கும் அணுகல் முறை.

முதலாளியம் தோன்றிய காலத்திலிருந்தே உலக அளவில் கட்டுமானச் சீரமைப்புகளும் (structural adjustment) தொடங்கிவிட்டன. கி.பி 1500 தொடங்கி உருவாகி வரும் இம்மாற்றங்களை இவ்வாறு தொகுத்துக் கொள்ளலாம்:

கட்டம் 1: கி.பி 1500 - 1640 : உலக முதலாளியத்திற்கு அடித்தளம் அமைக்கும் முயற்சிகள், தொடக்ககால வணிகங்கள் ஆகியன இக்காலகட்டத்தின் முக்கிய செயற்பாடுகள்; கொள்ளைகள், படையெடுப்புகள், தொடக்ககால ஐரோப்பியக் குடியேற்றங்கள் என்பன இதன் வடிவங்கள்.

கட்டம் 2 : கி.பி 1640 - 1750 : இதற்கு முன் இருந்திராத 'உலகம்' எனும் கருத்தாக்கம் உருப்பெற்று அதன் அடிப்படையில் வணிக முதலாளிய அமைப்பு உறுதிப்படல்; முதற்கட்ட நடவடிக்கைகள் மேலும் தீவிரமடைந்தன
.
கட்டம் 3 : கி.பி 1750 - 1870 : செவ்வியல் முதலாளியம் (classical capitalism), உலகெங்கிலும் ஐரோப்பவை நோக்கி மூலதனம் திரளுதல், மூலதனம் மூலதனத்தை உற்பத்தி செய்தல், எனினும் புராதன வடிவிலான மூலதனத் திரட்சியும் தொடர்தல்; தொடரும் குடியேற்றங்கள், தூரத்து விளிம்புகள் உட்கவரப்படுதல், மையங்களைச் சார்ந்து விளிம்புகள் நிற்றல் என்பது மிகவும் வெளிப்படையாதல்.

கட்டம் 4 : கி.பி 1870 -1950 : ஏகபோக முதலாளியம், புராதன மூலதனத் திரட்சி என்பது இப்போது வணிக மற்றும் இதர பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்றத்தாழ்வான பரிவர்த்தனையாக வெளிப்படுதல், அய்ரோப்பிய நிதி மூலதனம் (financial capital) உலகை முதலாளியமயமாக்கல், அய்ரோப்பாவை நோக்கிய மூலதனக் குவிப்பு தொடர்தல்; சார்பு நிலை உறுதியடைதல், இந்தியா முதலான காலனிகள் அரசியல் விடுதலை பெற்றபோதும் உலகப் பொருளாதார அமைப்ப்பில் கீழ் நிலையில் ஒருங்கிணைக்கப்படல்.

கட்டம் 5 : கி.பி 1500 க்குப் பின் உலகமயத் தொடக்கம் வரை : பன்னாட்டு முதலாளியம் (multinational) என்கிற  வடிவம் உருவாதல், மூலதனம் உலகமயமான போதிலும் மையங்களில் செறிவடைதல்; இதன் விளைவான புதிய பன்னாட்டு வேலைப் பிரிவினை ஒன்று உருவாதல்; பிற குடியேற்ற நாடுகளும் (colonies) விடுதலை அடைதல், ஆனாலும் சார்பு நிலை (dependency) நுணுக்கமாகத் தொடர்தல், விளிம்புகளின் மேலாதிக்க சக்திகள் உலக முதலாளிய மையங்களின் வடிவில் விளிம்புகளைச் செதுக்கும் நோகில் 'புதிய பன்னாட்டுப் (பொருளாதார) ஒழுங்கு' (New World Order) ஒன்றை உருவாக்குதல்.

மேற்கண்ட இந்த மாற்றங்களை முழுமையானதாகவோ இறுக்கமான படிப்படியான வளர்ச்சிக் கட்டங்களாகவோ காணத் தேவையில்லை. இவை பொதுவான அம்சங்கள். அவ்வளவுதான். சோஷலிசக் கட்டுமானத்தை முயற்சித்த நாடுகள் இந்த வரைவுக்குள் வரா. மையங்களுக்கிடையேயான மேலாண்மை ஐரோப்பிய நாடுகளுக்கிடையே மாறிக்கொண்டே இருந்தன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இரண்டாம் உலகப் போரை ஒட்டி இது அமெரிக்காவிற்கு மாறியது.

இந்த மையம் - விளிம்பு எனும் வேலைப் பிரிவினையின் ஊடாக முதலில் விளிம்பு நாடுகளில் (காலனிகளில்) உள்ள தொழில்கள் எல்லாம் நீக்கப்பட்டு (deindustrialization) அவை முதலில் கச்சாப் பொருட்கள் மற்றும் அடிமைகள் / தோட்டத் தொழிலாளிகளின் உற்பத்திக் கேந்திரங்களாக்கப்பட்டன. பின்னர் இங்கேயுள்ள மலிவான உழைப்பு சக்தியைப் பயன்படுத்தி இங்கேயே நுகர் பொருட்களை உற்பத்தி செய்வதற்குத் தோதாக தொழில்நுட்பத்திற்கும், நிதி மூலதனத்திற்கும் மையங்களைச் சார்ந்திருக்குமாறு அவை re-industrialise செய்யப்பட்டன. "இறக்குமதிப் பதிலீடு" (import substitution), "ஏற்றுமதிப் பதிலீடு" (export substitution) என இவற்றை பொருளியலாளர்கள் விளக்குவர். மொத்தத்தில் சார்புநிலை அதிகரித்தல், விளிம்புகளிலிருந்து மையங்களை நோக்கி மூலதனத் திரட்சி அமைதல், தொழில்நுட்ப இடைவெளி அதிகமாதல் முதலியன இந்த மைய - விளிம்பு உறவுகளின் முக்கிய பண்புகளாகவும் விளைவுகளாகவும் அமைந்தன.

லெனினியத்தின் ஏகாதிபத்தியக் கோட்பாட்டிற்கும் வாலர்ஸ்டைன் போன்றோரின் இந்த மைய - விளிம்புக் கோட்பாட்டிற்கும் உள்ள வேறுபாடுகள் எத்தகையன?

ஏகாதிபத்தியக் கோட்பாட்டாளர்கள் ஏகாதிபத்திய நடவடிக்கைகளுக்காக ஐரோ[ப்பவைக் கண்டித்தபோதும், ஏகாதிபத்தியத்தின் பங்கை முதன்மைப்படுத்துவதன் ஊடாக ஏகாதிபத்திய உருவாக்கத்தில் விளிம்புகளின் பங்கிற்கு உரிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இதன்மூலம் ஐரோப்பா, அமெரிக்கா முதலான மையங்களை முதன்மைப்படுத்தும் போக்கு அவர்களிடமிருந்தது. இதனை ஒருவகை ஐரோப்பிய மையப் பார்வை எனலாம். உண்மையில் விளிம்புகள் உலக முதலாளிய உருவாக்கத்தில் மிகவும் செயலூக்கமுள்ள பங்கை வகித்தன. இந்தியா இல்லாமல் 17ம் நூற்றாண்டுக்கான இங்கிலாந்து வரலாறு இல்லை; கரீபியத் தீவுகளின்றி வலுவான அமெரிக்கா இல்ல; லத்தீன் அமெரிக்கா இன்றி ஸ்பெயின் கிடையாது; ருவாண்டா இன்றி பெல்ஜியம் கிடையாது; இப்படி.
இது ஏதோ பொருலியல் ரீதியான கட்டமைப்பு மட்டுமல்ல. மையங்களில் உருவான அரசியல், பொருளாதாரக் கட்டமைப்புகளிலும் விளிம்புகளின் தாக்கங்கள் இருந்தன. விளிம்புகளின் 'மற்றது' களாக மையங்கள் தம்மை நிறுத்திக் கொண்டன. இந்தியாவை Oriental ஆகக் கட்டமைப்பதன் ஊடாக அவை தம்மை Occidental ஆகக் கட்டமைத்துக் கொண்டன.
இன்னொரு பக்கம் விளிம்புகளிலுள்ள மேலாதிக்க சக்திகள், பொருளியல் மற்றும் அதையொட்டிய நவீனமயமாதல் முதலான அம்சங்களில் மையங்களின் பிரதிபலிப்பாகவும், பண்பாட்டு அம்சங்களில் மையங்களின் மாற்றுகளாகவும் தம்மைக் கட்டமைத்துக் கொண்டன. இன்றளவும் இந்தியாவில் செயல்படும் பாரதீய ஜனதாக் கட்சி தங்களுக்கு, "உருளைக் கிழங்கு சிப்ஸ்' வேண்டாம்; ஆனால் எலட்ரானிக் சிப்ஸ் வேண்டும்" என முழக்கம் வைப்பதைக் காணலாம்.

மொத்தத்தில் இந்தக் கட்டமைப்புகள் அனைத்தும் விளிம்புகளைப் பலவீனப் படுத்துவதாகவும், மையங்களைப் பலப்படுத்துவதாகவும் இருந்தபோதிலும் விளிம்பிலுள்ள மேலாதிக்க சக்திகள் (elites) இதனைச் செயலூக்கமுள்ள பங்குடன் விருப்பபூர்வமாகவே மேற்கொண்டன. எனவே ஏகாதிபத்தியத்தை உற்பத்தி செய்யும் விளைமூலங்கள் (sources of imperialism) (எ.கா: முதலாளிகள்) ஏகாதிபத்திய மையங்களில் மட்டுமே உள்ளன என்பதற்கு மாறாக வாலர்ஸ்டைனைப் பின்பற்றி, "உலக முதலாளியம்" எனக் கூறுபவர்கள் ஏகாதிபத்திய மூலங்களை, மையங்களில் உள்ளவை னவும், விளிம்புகளில் உள்ளவை எனவும் இரண்டாகப் பிரிக்கின்றனர். ஏகாதிபத்திய மூலங்கள் என்பவற்றில் பொருளியல் ஆதிக்க சக்திகளோடு அரசியல் மற்றும் பண்பாட்டு சக்திகளும் அடங்குவர்.

பொதுவில் ஏகாதிபத்திய அமைப்பை மூன்று கூறுகளாகப் பிரிக்கலாம்: 1.ஏகாதிபத்தியத்திற்குள் உள்ள உற்பத்தி சக்திகள் மற்றும் உற்பத்தி உறவுகள். 2.ஏகாதிபத்தியத்திற்கும் விளிம்பிற்குமுள்ள உறவு. 3.விளிம்புகளில் உள்ள உற்பத்திசக்திகள் மற்றும் உற்பத்தி உறவுகள். லெனினிய ஏகாதிபத்தியக் கோட்பாட்டின்படி இம்மூன்றில் முதலாவது அம்சமே மற்ற இரண்டையும் தீர்மானிக்கிறது.  மாறாக மைய - விளிம்பு அணுகல் முறை ஏகாதிபத்தியத்திற்கும் விளிம்பிற்குமுள்ள உறவே மற்ற இரண்டையும் தீர்மானிக்கிறது என்கிறது.

இவ்வாறு அணுகுவதன் ஊடாக உலக முதலாளிய அமைப்பில் ஏற்படும் மாற்றங்களை ஏதோ ஏகாதிபத்தியம் தன்னிச்சையாகத் தீர்மானிக்கிறது என்பதாக எளிமைப்படுத்திப் பார்க்கும் நிலை தவிர்க்கப்படுகிறது. மாறாக, மையத்திற்கும் விளிம்பிற்கும் உள்ள உறவின் தன்மை மாறாதவரை உலக முதலாளிய அமைப்பு தன்னை தக்கவைத்துக் கொள்ளும், நெருக்கடிகளில் இருந்து தன்னை மீட்டும் கொள்ளும். இதை மையத்திலுள்ள ஆதிக்க சக்திகளும் விளிம்பிலுள்ள ஆதிக்க சக்திகளும் இணைந்து செய்யும். எனவே உலகமுதலாளியத்தின் மூலம் பயனடைபவர்கள் தேசபக்தி பற்றிப் பேசுவது நகைப்பிற்குரியது.

2.   நெக்ரி –ஹார்ட் ஆகியோரின் “பேரரசு”க் கோட்பாடு
லெனின் காலத்திய ஏகாதிபத்தியம் இன்று பெரிய அளவில் மாற்றமடைந்து முற்றிலும் புதிய உருக் கொண்டுள்ளது. நவீன தொழில்நுட்பம், உலகமயம், புதிய பொருளாதாரம் என்பதகாக தெளிவற்ற ஒரு கலப்பாக அது உருக்கொண்டுள்ளது. உலகமயத்தின் புதிய அரசியல் அமைப்பு இது. வரலாற்றில் நாம் கண்ட எல்லாப் பேரரசுகளையும் (Empires) போலவே இன்றைய இந்தப் பேரரசும் இறுக்கமான எல்லைகளையும் வரம்புகளையும் கொண்டதல்ல. இன்றைய தேச அரசுகளைப்போல இறுக்கமாக அதன் அதிகார எல்லைகளை வரையறுத்துவிட இயலாது என்பது பொருள்.
இறுக்கமாக வரையறுக்கப்பட்ட ஒற்றை அடையாளமின்மை, என்றும் அகன்று விரியும் அதன் எல்லைகள் ஆகியவற்றுடன் இது வெளிப்படுகிறது. நவீன அரசியலின் தத்துவார்த்த அடிப்படைகளோ, இறையாண்மை, தேசம், குடிமக்கள் என்கிற எந்த வரையறைகளுமோ இந்தப் போரரசை விளக்கப் பயன்படாது.

புதிய வகையிலான இனவாதம், புதிய வகையிலான தொடர்பு வலைப் பின்னல்கள், புதிய வகையிலான கண்காணிப்புகள் மற்றும் கட்டுப்பாடுகள், புதிய வகையிலான புலப் பெயர்வுகள் என்பதாக எல்லாம் புதிதாக இது அமைகிறது. புதிய வகையிலான பன்னாட்டு கார்பொரேஷன்கள், புதிய வகையிலான தொழிலாளர் மேலாண்மை, புதிய வகையிலான உற்பத்தி என ஒரு முழுமையான உலகளாவிய ஏகாதிபத்திய ஒழுங்கு
உலகமயத்திற்குரிய புதிய இறையாண்மை வடிவம் என இதைச் சுருங்கச் சொல்லலாம். தேச அரசுகளின் இறையாண்மை குறைந்து வருகிறது என்றால் இறையாண்மை உண்மையிலேயே குறைந்துவருகிறது அல்லது பலவீனப்படுகிறது என்பது பொருளல்ல. மாறாக இறையாண்மை என்பது இப்போது ‘தேச அரசு’ என்கிற மட்டத்திலிருந்து உலக இறையாண்மை என்கிற வடிவெடுக்கிறது. தேச அரசு மற்றும் அதன் நிறுவனங்கள் செயலில் இருக்கும். எனினும் அவற்றின் இராணுவமும் காவல்துறையும் அவை எங்கு தம் செயல்பாட்டை மேற்கொண்டாலும் உலக இறையாண்மை என்கிற பெயரிலேயே அவை மேற்கொள்ளப்படும். அமெரிக்காவின் ஈராக் படையெடுப்பு ஒரு எடுத்துக்காட்டு. படைஎடுப்பை நடத்தியது அமெரிக்கா. ஆனால் அது உலக நாடுகளின் பெயரால் செய்யப்பட்டது. சதாம் உலகின் எதிரியாக முன்நிறுத்தப்பட்டார்.

அமெரிக்கா என்பது ஒரு குறிப்பிட்ட தேசிய அளவில் செயல்படத் தக்க தேசிய அடையாளம்; ‘பேரரசு என்பது அதன் எல்லை கடந்த உலக அடையாளம் (deterritorialised global identity).
நெக்ரி – ஹார்ட் ஆகியோரின் அடுத்த கருத்தாக்கம் ‘பெருந்திரள்’ (Multitude) என்பது. புதிதாய் உருக்கொள்ளும் பேரரசு எனும் உருவாக்கத்தை அவர்கள் ஒருவகையில் வரவேற்கத்தக்கது என்கின்றனர். அதெப்படி? மிகக் கொடூரமான தேசங் கடந்த சுரண்டல் வடிவமாக உள்ள ஏகாதிபத்தியம் இப்போது தன்னைக் கவிழ்த்துக்கொள்ளும் ஒரு வடிவத்தையும் உலகளாவிய வகையில் உருவாக்குகிறது. உலக அளவில் உருக்கொள்ளும் மூலதனம் அத்தோடு இப்போது உலக அளவில் ஒரு தொழிலாளி வர்க்கத்தையும் உருவாக்குகிறது. உலகளாவ இப்போது உருவாகியுள்ள தொடர்பு வலைப் பின்னல் இதை அதற்குச் சாத்தியமாக்குகிறது. ஒரு மன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்கிற ஒரு ஊழியருக்குத் தான் எந்த நாட்டில் இருந்து கொண்டு யாருக்கு வேலை செய்கிறோம் என்பதெல்லாம் இன்று பொருளற்றதாகி விட்டன. வேலைத் தளம், வீடு என்பதற்கெல்லாம் இடையில் இருந்த வேறுபாடுகள் அழிக்கப்பட்டுவிட்டன. தனது தேவைகளுக்காகப் பெரிய அளவில் ஒரு ‘மொபைல்’ தொழிலாளி வர்க்கத்தை உருவாக்குவதன் ஊடாக இன்றைய ஜனநாயகம் தேசங்கடந்த ஒன்றாக வடிவெடுக்கிறது.
இந்தத் தொடர்பு வலைப்பின்னல்கள் என்பன தேசிய எல்லைகளையும் கட்டுப்பாட்டுக்களையும் தாண்டியதாக அமைவதால் உலகளாவிய எதிர்ப்புகளுக்கும் இவை பயன்படுகின்றன. ஜனநாகச் செயல்பாடுகள் என்பன இப்போது சுயமாக உலகளவில் உருவாக, ஒருங்கிணைக்க ஏதுவாகியுள்ளன. 

உலகளாவிய மூலதனம், உலகளாவிய போர் என்பதற்கு எதிரான உலகளாவிய எதிர்ப்பு, உலகளாவிய ஜனநாயக அலை ஆகியவை உலளாவிய வகையில் உருக்கொள்ள சாத்தியமான்ன ஒரு உலகளாவிய தன்னிலை (global subject), உலகளாவிய உயிர் ஆற்றல் (global bio-power) எல்லாம் இன்று உருவாகியுள்ளது. இந்தப் புதிய உலகளாவிய ஆற்றலைத்தான் நெக்ரியும் ஹார்ட்டும் “பெருந்திரள்” என்கின்றனர். தேசம், தேசியம், தேசபக்தி என்பதெல்லாம் இந்தப் புதிய சூழலில் பொருளற்றுப் போகின்றன. 

மேலோட்டமாகப் பார்க்கும்போது எளிமையாகத் தோன்றும் இந்தக் கருத்தக்கம் உண்மையில் மிகவும் சிக்கலான ஒன்று. ‘பெருந்திரள் எனும் கருத்தாக்கத்தை மேலும் ஆழமாக ஆராயும் அவர்களின் இரண்டாவது நூலும் பெரிய அளவில் இப்போது பேசப்படுகிறது.

ஆறு

சென்ற நூற்றாண்டைத் தொழிலாளிவர்க்கத்தின் நூற்றாண்டாக எவ்வாறு  மார்க்சிய அறிஞர்களால் மதிப்பிடப்படுகிறது என்பதைத் தொடக்கத்தில் குறிப்பிட்டேன். இன்று ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அப்படி ஒன்றும் தொழிலாளி வர்க்கத்தை அதன் புரட்சிகர நிலையிலிருந்து அகற்றிவிடவில்லை என நெக்ரி ஹார்ட் முதலானோர் முன்வைப்பதையும் பார்த்தோம். எனினும் பொதுவான பார்வையில் தொழிலாளி வர்க்கம் பலமிழந்து நிற்பதாகத்தான் நாம் உணர்கிறோம். நமது அனுபவங்களும் அப்படித்தான் உள்ளன. வரலாற்றில் முதல் முதலாக இப்போதுதான் பெரும்பாலான தொழிலாளிகள் (சுமார் 1.6 பில்லியன்) நிரந்தரப் பாதுகாப்புகள் அற்ற கூலித் தொழிலாளிகளாக மாறி உள்ள நிலை ஏற்பட்டுள்ளது. மார்க்ஸ் எதிர்பார்த்ததுபோல முதலாளியத்தைத் தூக்கி எறியும் வல்லமை இன்று இந்தத் தொழிலாளி வர்க்கத்திற்கு உள்ளதா என்கிற கேள்வியைப் பலரும் எழுப்புகின்றனர்.

ஓய்வூதியப் பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து 2011 ல் மிகப் பெரிய போராட்டம் நடைபெற்ற போது புகழ் பெற்ற தத்துவவியலாளர் ஸ்லாவோஜ் சிஸெக் அதை, “ஊதியம் பெறும் பூர்ஷ்வாக்களின் (salaried bourgeoisie) போராட்டம்” என்றார். “இப்போதெல்லாம் நீண்ட காலப் பணியில் இருந்து சுரண்டப்படும் வாய்ப்பு என்பது பெரிய பேறாகிவிட்டது” என்றும் கூறினார்.
பெருந்திரளான மக்கள் மிக்க ஏழ்மையில், தங்களின் இயலாமையை எத்ர்த்துப் போராடும் சக்தியற்றவர்களாக (precarious) உள்ளனர். 

பாதுகாப்பாக உணரும் சிறுபான்மையினர் போராடுவதற்கு ஆர்வமற்றவர்களாக உள்ளனர் என்பது இன்று தொழிலாளி வர்க்கம் பற்றி நிலவுகிற கருத்து. எங்கு பார்த்தாலும் அப்படியான ஒரு நிலை உருவாகியுள்ளதை யாரும் உணர முடியும். எந்த ஒரு அலுவலகத்தில் நுழைந்தாலும் சுமார் 75 சதத்திற்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகப் பணியில், நிரந்தர ஊழியர்களோடு ஒப்பிடுகையில் மிகக் குறைந்த ஊதியத்தில் எந்த வேலை உறுதியும் இல்லாமல் இருப்பதைக் காண முடியும். இருக்கும் நிரந்தரப் பணியாளர்கள் எண்ணிக்கையில் குறைந்தவர்களாக இருப்பதால் அவர்களும் தங்கள் உரிமைகளைக் கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட இயலாதவர்களாக ஆகிவிடுகின்றனர்.
மார்க்ஸ் காலத்தில் அப்படியில்லை. தொழிலாளர்கள் உற்பத்திச் சாதனங்களில் உரிமையற்றவர்களாக இருந்ததன் அடிப்படையில் சுரண்டப்பட்ட போதிலும் அவர்கள் எண்ணிக்கையில் அதிகமாகவும், ஒரே மாதிரியான சுரண்டலுக்கு ஆட்படும் சக தொழிலாளிகளுடன் தம்மை அடையாளம் காணக் கூடியவர்களாகவும், அந்த அடிப்படையில் ஒரு வர்க்கப் பிரக்ஞை கொண்டவர்களாகவும் இருந்தனர். இவர்கள் சுரண்டப்பட்டவர்கள் (exploited) தானே ஒழிய ஒடுக்கப்பட்டவர்கள் (oppressed) அல்லர். இவர்களின் உழைப்பை நம்பித்தான் முதலாளி உள்ளான். ஒரே மாதிரியான சுரண்டலின் பின்னணியில் ஒன்றுபடும் அத் தொழிலாளிகள் எளிதில் அமைப்பாகிப் போராடும் வீரம் மிக்கவர்களாக இயற்கையில் அமைகின்றனர். புதிய புரட்சிகரக் கருத்துக்களை எளிதில் ஏற்கக் கூடியவர்களாகின்றனர். அதனால்தான் முந்தைய உழைக்கும் வர்க்கங்களான அடிமைகள் அல்லது பண்ணையடிமைகளைப் போலன்றி தொழிலாளிகள் புரட்சிகர சக்திகளாக அமைந்தனர்.

ஆனால் இன்று நிலைமை அப்படியில்லை. ஏராளமான வேலையற்றவர்கள் நிறைந்த உலகில் உள்ள ஒரு சிறுபான்மையாக அவர்கள் ஆகிவிட்டனர். நிரந்தரமான பொது வேலைத் தளமும் கூட இன்று அருகி வருகிறது. குறிப்பான வேலை நேரம், வேலை நாட்கள் என்பதெல்லாம் கூட மறைந்து வருகிறது. பாதுகாப்பான ஒரு நிறுவனத்தில் நீண்ட காலம் பணியாற்றுவதால் உருவாகும் வர்க்கப் பிரக்ஞையை அவர்கள் இழக்கின்றனர். “தொழிற் கண்ணியம்” (dignity of labour), “உழைப்பு என்பது மனித சாரத்தின் வெளிப்பாடு” முதலான கவிதை நிகர்த்த கருத்தாக்கங்கள் எல்லாம் இன்று பொருளற்றுப் போய்விட்டன. இவர்கள் வேலையில் இல்லாத நாட்கள் வேலையில் இருக்கும் நாட்களுடன் ஒப்பிடத் தக்க அளவில் அதிகமாகியுள்ளன. எனவே இவர்கள் தம் தகுதிக்குக் குறைந்த வேலைகளில் ஒதுங்கும் வாய்ப்பு அதிகம். அரசின் சிக்கன நடவடிக்கைகளால் பெரிதும் பாதிக்கப் படுகிறவர்கள் இவர்கள்.

நிரந்தரத் தொழிலாளிகளை இணைத்துச் சங்கமாக்கும் தொழிற்சங்கங்களும் கூட இவர்களை ஒருங்கிணைக்க முயல்வதில்லை. “தகுதியற்ற ஏழைகள்” (undeserved poor) என அரசும் இவர்களை ஒதுக்கும்.
“தொழிலாளி”  என்கிற அடையாளத்தை இவ்வாறு இழந்து நிற்கும் இந்தப் ‘பரிதாபி’கள் (precariates) நாடு விட்டு நாடு சென்று உழைக்கும்போது குடியுரிமைகளும் பறிபோய் citizen என்கிற நிலையை இழந்து denizen என்கிற நிலையை அடைகின்றனர் என்கிறார் பிரிட்டனைச் சேர்ந்த பேராசிரியர் கவ் ஸ்டான்டிங். அவரது The Precariat: The New Dangerous Class (2011); A Precariat Charter: from denizens to citizens (2014) முதலான நூல்கள் பிரசித்தமானவை. அவரது கருத்துக்களை இப்படிச் சுருக்கலாம்:
1.ஏதுமற்ற பரிதாபிகளான இவர்கள் நிரந்தர வேலையின்றி, மிகக் குறைந்த ஊதியத்தில் பெரிய அளவில் சுரண்டப்படக் கூடியவர்களாகவும், தொழிற் பெருமைகள் அற்றவர்களாகவும் இருந்த போதிலும், ஒரே மாதிரியான தொழிலில் ஒரே முதலாளியின் கீழ், ஒரே தொழிலகத்தில் வேலை செய்பவர்களாக இல்லாத போதிலும் இவர்கள் ஒரு வர்க்கமாக அடையாளம் காண முடியாதவர்கள் அல்ல. நிரந்தரமின்மை என்கிற பொதுப் பண்பின் அடிப்படையிலேயே அவர்கள் ஒன்றிணையத் தக்கவர்கள். 2011ல் உலகெங்கிலும் நடந்த அமர்வுப் போராட்டங்கள் இவர்களின் ஒன்றிணைவுக்கு ஒரு சாட்சியம்.
2.”எல்லோருக்கும் ஒரு குறைந்த பட்ச அடிப்படை ஊதியம்” என்கிற கருத்தாக்கம் இன்று உருப்பெற வேண்டும். அது கண்ணியமான வாழ்க்கைக்குப் போதுமானதாகதாகக் கணக்கிடப்பட வேண்டும். இதன் மூலம் குடிமக்கள் அனைவருக்கும் அடிப்படைப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.
3. தற்போது அரசு அறிவிக்கும் இலவசங்கள், மாநியங்கள் நிறுத்தப்பட வேண்டும்.
4.தரமான கல்வியும் மருத்துவமும் இலவசமாக அளிக்கப்பட வேண்டும்.
5.இவ்வுலகம்  என்பது பாரம்பரியமாகக் காலம் காலமாக மனித சமூக உழைப்பின் ஊடாக உருப்பெற்ற ஒன்று. அதன் பயன் சமூக அளவில் பங்கிடப் பட வேண்டும். இவ்வாறு கிடைக்கும் சமூகப் பங்குக்கு (social dividend) இந்த ஏதுமற்ற பரிதாபிகளும் உரியவர்கள் என்பதை நாம் வாழும் உலகம் மறக்கக் கூடாது.
6.இவர்களை ஒருங்கிணைத்துத் திரட்டுவதற்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்த அணி திரட்டல் என்பது இப்போது உள்ளது போல் ஒவ்வொரு தொழிற்சாலை அல்லது ஒவ்வொரு தொழில் என்கிற அடிப்படையில் இல்லாமல் தொழிலகங்களுக்கு அப்பால் இவர்களை அணிதிரட்ட வேண்டும். நாம் திரட்ட வேண்டியது தொழிலாளர்களைத்தானே ஒழிய ‘தொழில்களை” (jobs) அல்ல. அதாவது குறிப்பிட்ட வேலை செய்பவர்களை குறிப்பிட்ட சங்கங்களில் அடக்குவது என்பதாக அல்லாமல் இந்த அணி திரளல்கள் அமைய வேண்டும்.
7. நம் சகக் குடிமக்கள் நம்மைப் போலவே உரிமை உடையவர்கள் என்கிற புரிதல் நம் எல்லோரையும் மேலும் பண்பாளர்களாக ஆக்கும்.
சம கால ஒய்வூதியப் போராட்டம், அரபு வசந்தம், அமர்வுப் போராட்டங்கள் ஆகியவற்றின் பின்னணியில் உருவானவை கய் ஸ்டான்டிங்கின் கருத்துக்கள். இவற்றையெல்லாம் நாம் அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும் என நான் சொல்ல வரவில்லை. அமர்வுப் போராட்டங்கள் முதலியவற்றை நாம் மிகவும் உன்னதப்படுத்திப் (romanticize) பார்க்க வேண்டியதில்லை. ஆனால் சம கால அனுபவங்களையும் மாற்றங்களையும் பார்க்கும்போது எதையும் நாம் ஆய்வுக்குட்படுத்தாமல் புறக்கணித்துவிடவும் வேண்டியதில்லை. நம்மைச் சுற்றி எங்கும் ஒரு அவ நம்பிக்கை சூழ்ந்துள்ள பின்னணியில் இன்னும் விடுதலைக்கான சாத்தியங்கள் உள்ளன என்கிற நம்பிக்கை நமக்குத் தேவையாக உள்ளது.
ஆனால் கய் ஸ்டான்டிங், நெக்ரி- ஹார்ட் ஆகியோரிடமிருந்து நாம் ஒன்றை நிச்சயமாகக் கற்றுக் கொண்டாக வேண்டும்.

 இனி நம் கவனம் மரபுவழிப்பட்ட வடிவில் ‘தொழிலாளிகள்’, ‘விவசாயிகள்’  எனப் பார்க்காமல் “உழைக்கும் வர்க்கம்” என மிக அகன்ற ஒரு வரையறையை நாம் உருவாக்க வேண்டும். நம் வரயறை குறுகிய அளவுகோல்களைத் தாண்டிய விரிவான பார்வையைக் கொண்டிருக்க வேண்டும். நமது தொடர்புகள் எல்லா எல்லைகளையும், தாண்டி விரிய வேண்டும். ”உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்” என்கிற பேராசான் மார்க்சின் வாசகத்தை உண்மையான விரிந்த பொருளில் கைக்கொள்ள வேண்டிய தருணம் இது.

என் கருத்துக்களுக்கு இதுகாறும் செவி கொடுத்த உங்களுக்கும், இந்த வாய்ப்பளித்த தோழர்களுக்கும், என் நன்றிகள். தோழர் சண்முகதாசனின் நினைவைப் போற்றி விடை பெறுகிறேன்.

வணக்கம்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அ.மார்க்ஸ், இயற்பியல் பேராசிரியர் (ஓய்வு), தமிழின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர், சுமார் 70 நூல்களின் ஆசிரியர், அரசியல் விமர்சகர். பத்தி எழுத்தாளர், கல்லூரி ஆசிரியர் சங்க முன்னோடி, தற்போது இந்திய அளவிலான National Confederation of Human Rights Oeganisation ன் தேசியத் தலைவர்.
இவரது தந்தை ராமதாஸ் எனக் கட்சியில் அழைக்கப்பட்ட ஆர்.அந்தோணிசாமி மலேசியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர். தலைக்கு விலை கூறப்பட்டுத் தப்பி இந்தியா வந்த பின் நாடு கடத்தப்பட்டவராக அறிவிக்கப்பட்டவர்.


No comments:

Post a Comment