Monday, March 19, 2018

முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்களுக்கு

முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்களுக்கு
இலங்கை அரசே பொறுப்பாகும்!
அம்பாறையில் கொத்துரொட்டியில் மலட்டு தன்மையாக்கும் மருந்து கலந்ததாக வதந்தி பரப்பி தாக்குதல் நடத்தப்பட்டது.
இப்படி ஒரு மருந்தே இல்லை. இது திட்டமிட்ட வதந்தி என பல மருத்துவர்கள் பேராசிரியர்கள் கூறினார்கள்.
எனினும் ஆளும்கட்சியைச் சேர்ந்த ஒரு பிரதி அமைச்சர் தலைமையில் பஸ் வண்டியில் அழைத்து வந்தவர்களால் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
அடுத்து கண்டியில் நடந்த ஒரு கொலைச் சம்பவத்தை பயன்படுத்தி திட்டமிட்டமுறையில் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
முஸ்லிம்களின் 4 பள்ளிவாசல்கள் 46 கடைகள், 37 வீடுகள் 35 வாகனங்கள் எரித்து சேதமாக்கப்பட்டுள்ளன.
இப்படியொரு தாக்குதல் நடக்கப்போகிறது என்று முன்கூட்டியே தெரிந்திருந்தும் அதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அரசு வேடிக்கை பார்த்தது.
எனவேதான் முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்களுக்கு அரசே பொறுப்பாகும் என்று சம்பந்தர் அய்யா குற்றம் சாட்டியுள்ளார்.
முஸ்லிம் தலைவர் ஹக்கீம்கூட அரசுக்கு எதிரான சூழ்ச்சி இது என்றே கூறிய நிலையில், சம்பந்தர் அய்யா அரசே பொறுப்பாகும் என்று குற்றம் சுமத்தியிருப்பது முஸ்லிம் மக்களுக்கு நிச்சயம் மகிழ்வைக் கொடுத்திருக்கும்.
இந்த நெருக்கடியான நேரத்தில் தமிழ் சிங்கள மக்கள் மத்தியில் பெரும்பாலானவர்கள் இனவாதத்திற்கு எதிராக கருத்துக்களை பகிர்ந்துள்ளார்கள்.
அவிசாவளைப் பகுதியில் முஸ்லிம்கள் பள்ளிவாசலில் தொழுகை செய்வதற்கு அப் பகுதியைச் சேர்ந்த புத்த பிக்கு ஒருவர் பாதுகாப்பு கொடுத்துள்ளார்.
சிங்கள மக்களை திரட்டிச் சென்று முஸ்லிம் மக்கள் தொழுகை முடியும் வரை அவர்களுக்கு பாதுகாப்பாக இருந்துள்ளார் அந்த புத்த பிக்கு.
ஜே.வி.பி கட்சி தலைவர் கண்டி தலதா மாளிகை சென்று முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தும்படி கோரியுள்ளார்.
பல்கலைக்கழக மாணவர் அமைப்புகள் மற்றும் முன்னிலை சோசலிசக்கட்சி என்பன மூவின மக்களையும் திரட்டி இனவாத்திற்கு எதிராக குரல் கொடுத்துள்ளன.
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் தமிழ் தலைவர்கள் அனைவரும் முஸ்லிம் மக்களுக்கு ஆதரவாகவே குரல் கொடுத்துள்ளனர்.
இப்போது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் முன் உள்ள கேள்வி என்னவெனில்,
•பிரச்சனைகளை பேசிக்கொண்டிருக்கப் போகிறீர்களா? அல்லது பிரச்சனைகளுக்குரிய தீர்வு பற்றி பேசப் போகிறீர்களா?
•சிங்கள இனவாதத்திற்கு எதிராக தமிழ் முஸ்லிம் ஜக்கியத்தைக் கட்டப் போகிறீர்களா? அல்லது பிரிந்து நின்று அனைவரும் அழியப் போகிறீர்களா?

No comments:

Post a Comment