Friday, July 31, 2020
நண்பர் தின வாழ்த்துகள்!
நண்பர் தின வாழ்த்துகள்!
இன்று காலை திருச்சியில் இருந்து ஒரு நண்பர் என்னுடன் உரையாடினார். எனக்கு மிகவும் மகிழ்ச்சி ஏனெனில் கிட்டத்தட்ட 23 வருடங்களின் பின்னர் அவர் தொடர்பு கிடைத்திருக்கிறது.
நான் சிறையில் இருந்தபோது எனக்கு பெரிதும் உதவிய நண்பர்களில் இவரும் ஒருவர். இத்தகைய நண்பரின் தொடர்பு நண்பர் தினமான இன்று கிடைத்திருப்பது உண்மையில் இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.
பொதுவாக பலரும் உடைந்துபோகும் இடம் சிறைச்சாலை. ஆனால் நான் எட்டு வருடம் சிறை வாழ்க்கையை அனுபவித்தபோதும் உறுதி குலையாமல் இருந்தமைக்கு முக்கிய காரணம் இத்தகைய நண்பர்களின் உதவியாகும்.
சிலர் என்னுடன் பேசும்போது “எப்படி உங்களால் இத்தனை காலமும் அர்ப்பணிப்புடன் செயற்பட முடிகிறது?” என ஆச்சரியத்துடன் கேட்பார்கள்.
நான் அவர்களுக்கு கூறுவது “ இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. எனக்கு கிடைத்ததுபோல் நண்பர்கள் உங்களுக்கு கிடைத்திருந்தால் நீங்கள் என்னைவிட அதிகமாக செயற்பட்டிருப்பீர்கள்”. என்று.
இது உண்மைதான். எனது பலமும் நண்பர்கள்தான். அதேவேளை எனது பலவீனமும் நண்பர்கள்தான்.
என்னுடன் ஒன்றாக பழகிய நண்பர்கள் சிலர் இறந்து விட்டார்கள். ஆனாலும் நான் தொடர்ந்தும் புரட்சிகர அரசியலில் உறுதியாக பயணிப்பதற்கு பெரிதும் துணை புரிவது அவர்களுடனான நினைவுகளே.
நாம் எமது வாழ்வில் விரும்பியளவு பணத்தை சம்பாதித்துவிட முடியும். நாம் எம் வாழ்வில் விரும்பியளவு கல்வி கற்றுவிட முடியும். ஆனால் விரும்பியளவு நண்பர்களை இலகுவில் நாம் பெற்றுவிட முடியாது.
இன்று பொதுவாக எல்லோரும் என்னை “தோழர்” என்றே அழைப்பார்கள். ஆனால் எனது ஊர் நண்பர்கள் மட்டும் இப்போதும் என்னை “அண்ணை” என்றே உரிமையுடன் அழைப்பார்கள்.
நேற்று இரவு 12 மணிக்கு ஊர் நண்பர் ஒருவர் தொலைபேசியில் “ அண்ணை உங்கட அட்ரஸை ஒருக்கால் ரெக்ஸ் பண்ணிவிடுங்க” என்றார்.
அதற்கு நான் “ஏன்டா, ஏன் இப்படி நடு ராத்தரியில அலுப்பு கொடுக்கிறாய்?” என்று கேட்டேன்.
அவர் லண்டனில் காய்கறி பிசினஸ் செய்கிறார் அதனால “ அண்ணை! கொரோனோ முடியும்வரை ஒவ்வொரு வாரமும் ஒரு பெட்டி காய்கறிகள் உங்கள் வீட்டுக்கு அனு;ப்பி வைக்கிறேன். நீங்கள் கவனமாக இருங்கள்” என்று அக்கறையுடன் கூறினார்.
கொழும்பில் நான் அரச உதவியுடனுடன் அரச பாதுகாப்புடனும் இருந்ததாக அண்மையில் முகநூலில் ஒருவர் எழுதியிருந்தார். எனது நண்பர்கள் 14 லட்சம் ரூபா அனுப்பி என்னை பராமரித்தார்கள் என்ற உண்மை அவருக்கு தெரிந்திருந்தால் இப்படி எழுதியிருக்கமாட்டார்.
பொதுவாக இந்த உலகில் சிறந்த நட்புக்கு மார்க்ஸ் எங்கெல்ஸ் நட்பையே உதாரணமாக கூறுவார்கள்.
அப்படி ஒரு நட்பு தம் வாழ்வில் கிடைக்க வேண்டும் என்பதே ஒவ்வொருவரின் ஆசையாக இருக்கும்.
என் இனிய நண்பர்கள் அனைவருக்கும் “வாழ்த்துகள்”
Image may contain: text that says "நன்பர்கள் தின வாழ்த்துக்கள்"
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment