Monday, January 22, 2024
நான் மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தவேளை
நான் மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தவேளை பசுபதி பாண்டியன் அவர்களும் அடைக்கப்பட்டிருந்தார்.
அப்போது ஜெயா அம்மையாரின் ஆட்சிக்காலம். பசுபதிபாண்டியனை விடுதலை செய்யக்கோரி டாக்டர் ராமதாஸ் அவர்கள் போராட்டம் செய்தார்.
ஜெயா அம்மையார் பசுபதி பாண்டியனை விடுதலை செய்யவில்லை.
மாறாக டாக்டர் ராமதாஸ் அவர்களையும் கைது செய்து மதுரை சிறையில் அடைத்தார்.
சிறையில் ராமதாஸ் அவர்களுடனும் பசுபதி பாண்டியன் அவர்களுடனும் பேசும் வாய்ப்பு எனக்கு கிட்டியது.
அப்போது அவரது கட்சியில் இருந்த வடிவேல் ராவணன் குறித்து அவருடன் நான் பேசிய விபரம் ஏற்கனவே முகநூலில் பதிவு செய்திருக்கிறேன்.
அதுமட்டுமல்ல, வைகோ அவர்களுக்கு ஆதரவளிக்கலாமே என நான் கேட்டதற்கு எதற்கு இன்னொரு கலைஞரை வளர்த்துவிட வேண்டும் என ராமதாஸ் அவர்கள் கூறியதையும் நான் முகநூலில் பதிவு செய்திருக்கிறேன்.
அப்போது ஈழத் தமிழ் அகதி இளைஞன் ஒருவன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். அவனை வந்து பார்ப்பதற்கோ உதவி செய்வதற்கோ யாரும் இல்லை.
இதனால் அவன் சிறையில் இருந்த சில தாதாக்களுக்கு பணிவிடை செய்து அவர்களிடமிருந்து தனக்கு தேவையான பீடீ, சோப்பு, போன்றவற்றை பெற்றுக்கொண்டான்.
இதைப் பார்த்த பசுபதி பாண்டியன் அவ் இளைஞனை அழைத்து “நீ போராடும் இனத்தை சேர்ந்தவன். இப்படி தாதாக்களுக்கு பணிவிடை செய்வது கேவலம்” என திட்டிவிட்டு அவனுக்கு தேவையானவற்றை தன் செலவில் வாங்கிக் கொடுத்தார்.
அது மட்டுமல்ல அவனது வழக்கையும் தன் செலவில் நடத்தி அவனுக்கு விடுதலை வாங்கி கொடுத்து ஊர் செல்வதற்குரிய பணமும் கொடுத்து அனுப்பினார்.
பசுபதி பாண்டியன் ஈழத் தமிழர் மீது அனுதாபமும் ஆதரவும் கொண்டிருந்தார். அதை நான் நேரில் கண்டிருக்கிறேன்.
இன்று அவரை ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய போராளி என போற்றுகிறார்கள்.
ஆனால் அன்று அவரை ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த சண்டியர் என்றே எனக்கு கூறியிருந்தார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment