பாவக்குடிச் சேனை!
பாவம் பட்ட சேனை ?
1984ல் முஸ்லிம் மக்கள் முதன் முதலாக விரட்டப்பட்ட கிராமம்.
பாவம் பட்ட சேனை ?
1984ல் முஸ்லிம் மக்கள் முதன் முதலாக விரட்டப்பட்ட கிராமம்.
கிழக்கு மாகாணத்தில் தமிழரும் முஸ்லிம்களும் புட்டும் தேங்காய்பூவும் போல் வாழ்கிறார்கள் என கூறப்படுவதுண்டு.
அவ்வாறு முஸ்லிம் மக்கள் வாழ்ந்த கிராமங்களில் பாவக்குடிச் சேனையும் ஒன்று. இக் கிராமம் படுவான்கரையில் உன்னிச்சை குளத்திற்கு அருகில் உள்ளது.
மிகவும் செழிப்பான பிரதேசம். எப்போதும் பச்சைப் பசேல் என காட்சியளிக்கும். அந்த முஸ்லிம் மக்களும் விவசாயம் செய்து சந்தோசமாக வாழ்ந்து வந்தனர்.
தமிழைத் தவிர வேறு எந்த மொழியும் தெரியாத இந்த மக்கள் , தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காத இந்த மக்கள் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக வெளியேற்றப்பட்டார்கள்.
அனைத்து மக்களையும் அரவணைத்து சர்வதேச புரட்சி செய்யப்போவதாக தெரிவித்த ஈபிஆர்எல்எவ் இயக்கமே அந்த மக்கள் மீது முதல் தாக்குதலை நடத்தியது.
அந்த மக்களிடம் சோத்துப் பார்சல் வாங்கி சாப்பிட்ட புளட் இயக்கம் ஈபிஆர்எல்எவ் இயக்கம் தாக்குதல் நடத்துவதைக் கேள்விப்பட்டவுடன் ஓடிச்சென்று அந்த கிராமத்தில் இருந்த அழகான யுவதியை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவு செய்தது.
அந்த மக்கள் சேர்த்து வைத்திருந்த விலை உயர்ந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்ட்டன. வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன.
அதிர்ச்சி அடைந்த முஸ்லிம் மக்கள் அந்த நடு இரவிலும் பாதுகாப்பு தேடி அருகில் இருந்த காட்டுக்குள் ஓடி ஒளிந்தனர்.
அடுத்த நாள் அயல்கிராமங்களில் இருந்த தமிழர்கள் காடுகளில் இருந்த அந்த மக்களை மட்டக்களப்பு நகருக்கு நடத்தி அழைத்து சென்றார்கள்.
அவ்வாறு நடத்தி அழைத்து சென்றவேளை பசி மற்றும் வயோதிபம் காரணமாக ஒரு முஸ்லிம் கிழவன் நடக்க முடியாமல் தள்ளாடி தள்ளாடி இறுதியாக சென்று கொண்டிருந்தார்.
அவரை அருகில் இருந்த காட்டிற்குள் இழுத்துச் சென்ற ரெலோ இயக்கம் கொலை செய்தது. அவர் தன் வேட்டி நுனியில் கட்டிவைத்திருந்த சில்லறைப் பணத்தை எடுப்பதற்காகவே அவரைக் கொலை செய்தார்கள்.
வேட்டி நுனியில் கட்டி வைத்திருந்த சில்லறைப் பணத்தை எடுப்பதற்காக ஒரு விடுதலை இயக்கம் முஸ்லிம் வயோதிபரை கொலை செய்ததா என இதைப் படிப்பவர்கள் ஆச்சரியப்படக்கூடும்.
ஆனால் இதே ரெலோ இயக்கம் சயிக்கிள் எடுப்பதற்காக படுவான்கரைக்கு புடவை வியாபாரம் செய்ய வந்த பல அப்பாவி முஸ்லிம்களை சிஜடி என குற்றம்சாட்டி கொன்றுள்ளதை அறிந்தவர்களுக்கு ஆச்சரியம் வராது.
இந்த படுவான்கரை மக்கள் தமது சொத்துக்கள், கால்நடைகள், வீடு வயல் எல்லாவற்றையும் விட்டு ஒரு இரவில் விரட்டப்பட்டார்கள்.
இலங்கையில் முதன் முதலாக முஸ்லிம் மக்கள் என்பதற்காக விரட்டப்பட்ட கிராமம் இந்த பாவக்குடிச் சேனை.
இந்த முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டதற்காக எந்த தமிழ் தலைவர்களோ அல்லது எந்தவொரு அமைப்போ அன்றும் கண்டனம் தெரிவிக்கவில்லை. இன்றும்கூட யாரும் இதுபற்றி வாய் திறப்பதில்லை.
முஸ்லிம் மக்கள் மீதும் சிங்கள அரசின் இன ஒடுக்குமுறை இருக்கிறது. சிஙகள அரசுக்கு எதிராக முஸ்லிம் மக்களையும் அரவணைத்து நடந்திருக்க வேண்டிய தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் ஏன் அவர்களை அடித்து விரட்டியது?
முஸ்லிம் மக்களை அரேபியாவுக்கு அடித்து விரட்ட வேண்டும் என்று முகநூலில் எழுதும் இளைஞர்கள் இதற்கு பதில் தருவார்களா?
No comments:
Post a Comment