Friday, March 22, 2024
ராஜிவ் காந்தி மரணத்தையடுத்து
ராஜிவ் காந்தி மரணத்தையடுத்து ஜெயா அம்மையார் தமிழக முதல்வராக இருந்தநேரம் அவரது சட்ட அமைச்சராக இருந்தவர் கிருஸ்ணசாமி.
இந்த சட்ட அமைச்சர் 1991ல் ஒருநாள் மதுரை சிறைக்கு வந்து கைதிகளை பார்வையிட்டார்.
அப்போது என்னருகில் வந்தபோது “இவர் ஒரு ஈழப் போராளி. கொடைக்கானல் வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்” என சிறை ஜெயிலர் கூறினார்.
உடனே சட்ட அமைச்சர் மிகுந்த கோபத்துடன் “ இனி ஈழத் தமிழருக்கு தமிழ்நாட்டில் ஆதரவு கிடைக்காது. உங்கள் நெடுமாறனிடம் கூறுங்கள். ஈழத் தமிழரை ஆதரிக்க வேண்டாம் என்று” என்னைப் பார்த்து ஏசினார்.
ஆனால் வேடிக்கை என்னவெனில் பின்னர் இவரது இதே ஜெயா அம்மையார் ஈழத் தமிழரை ஆதரித்தது மட்டுமன்றி ராஜீவ் காந்தி வழக்கில் இருந்த ஏழு தமிழரின் விடுதலைக்கு சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றினார்.
நெடுமாறன் அவர்கள் ஆரம்பம் முதல் ஈழத் தமிழர்களையும் புலிகளையும் உறுதியாக ஆதரித்து வந்தவர் என்பது அனைவரும் அறிந்த விடயமே.
இதனால் அவர் பல வழக்குகளை சந்தித்து பல வருடங்டகள் சிறையும் அனுபவித்தவர்.
மதுரை சிறையில் நான் அடைத்து வைக்கப்பட்டிருந்தவேளை ஒருநாள் நெடுமாறன் அவர்கள் என்னை பார்வையிட வந்திருந்தார்.
அன்று நான் சிறைக் கண்காணிப்பாளருக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தமையினால் அதைக் காரணம் காட்டி அவருக்கு பார்வையிட அனுமதிக்கவில்லை.
அக் காலத்தில் சிறை மற்றும் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த போராளிகளுக்கு மாதா மாதம் நூறு ரூபா பணம் உதவியளித்து வந்தார் நெடுமாறன் அவர்கள்.
அதன்படி அவர் எனக்கும் பணம் உதவி செய்ய முன்வந்தார். ஆனால் நான் “எனக்கு நிறைய தோழர்கள் உதவி செய்கிறார்கள். எனவே எந்த உதவியும் இன்றி இருப்பவர்களுக்கு இந்த உதவியை வழங்குங்கள் “ என்று கூறினேன்.
பின்னர் எனது வழக்கில் நான் நிரபராதி என்று திண்டுக்கல் நீதிமன்றம் என்னை விடுதலை செய்தபோது தமிழக அரசு என்னை சிறப்புமுகாமில் அடைத்தது.
அப்போது இதை அறிந்த நெடுமாறன் அவர்கள் சிறப்புமுகாமில் இருந்து விடுதலைபெற ஏதாவது சட்ட உதவி வேண்டுமா எனக் கேட்டு கடிதம் எழுதியிருந்தார்.
இவ்வாறு பல தடவைகள் எனக்கு உதவ முன்வந்தவர் நெடுமாறன் அவர்கள். அதனை நான் இங்கு நன்றியுடன் நினைவுகூர கடமைப்பட்டுள்ளேன்.
ஆனால் நெடுமாறன் அவர்கள் இப்போது பிரபாகரன் உயிரோடு இருப்பதாகவும் அவர் மீண்டும் வந்து ஈழம் பெற்று தரப்போகிறார் என்றும் கூறிவருவது ஆச்சரியமாக இருக்கிறது.
இவ்வாறு கூறுவது ஈழத் தமிழருக்கு எந்த நனமையும் தராது என்பது நன்கு தெரிந்தும் ஏன் அவ்வாறு கூறி வருகின்றார் என்பது புரியவில்லை.
எனினும் அவர் ஈழத் தமிழருக்கு அளித்து வந்த ஆதரவை மறக்க முடியாது. அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment