Friday, March 22, 2024

சாந்தனை புதைத்து அதன் ஈரம்

சாந்தனை புதைத்து அதன் ஈரம் காய்வதற்குள் அடுத்த இடியை இறக்கியுள்ளது இரக்கமில்லாத தமிழக அரசு. மற்ற மூவரையும் இலங்கை அனுபுவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் கோரியுள்ளது. அவர்கள் இலங்கை திரும்புவதற்குரிய அனுமதியை இலங்கை தூதரகத்தில் கோரினால் அதுபற்றி பரிசீலிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து அவர்கள் மூவரும் தனித்தனியாக நீதிமன்றத்தை அணுகினால் பரிசீலிக்கப்படும் எனகூறி உயர்நீதிமன்றம் சாந்தன் வழக்கை முடித்துவிட்டது. சாந்தனுக்குரிய நீதி வழங்கப்படவில்லை. வழக்கம்போல் சாந்தனுக்குரிய நீதியை மத்திய மாநில அரசுகளுடன் சேர்ந்து நீதிமன்றமும் மூடி மறைத்துவிட்டது. இப்போது விடயம் என்னவென்றால் முருகன் நளினி இருவரும் பிரித்தானியாவில் இருக்கும் தம் மகளிடம் சென்று வாழ விரும்புகின்றனர். இவர்கள் பிரித்தானியா செல்ல விரும்புவது உலகத்திற்கே தெரியும். ஆனால் தெரியாதமாதிரி மத்திய மாநில அரசுகள் மட்டுமன்றி உயர்நீதிமன்றமும் சேர்ந்து நாடகமாடுகின்றன. 7 தமிழர்களையும் விடுதலை செய்வோம் என தேர்தல் வாக்குறுதி அளித்தவர் ஸ்டாலின். ஆனால் அவர் பதவிக்கு வந்ததும் உச்சநீதிமன்றம் அவர்களை விடுதலை செய்துமகூட் நாலு ஈழத் தமிழரை சிறப்புமுகாமில் அடைத்தார். இந்தியா ஒரு ஜனநாயகநாடு என்றும் இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்று கூறுகின்றனர். சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்று 7 தமிழர்களையும் உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. ஆனால் தமிழக முதல்வரைப் பொறுத்தவரையில் “சட்டத்திற்கு முன் அனைவரும் சமம். ஆனால் ஈழத் தமிழரைத் தவிர” என்று கருதுகிறார். நாலு தமிழர்களையும் விரும்பும் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படும் என உறுதியளித்தே அவர்களை சிறப்புமுகாமில் அடைத்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். ஆனால் வழக்கம்போல் இந்த வாக்குறுதியையையும் அவர் காப்பாற்றவில்லை.

No comments:

Post a Comment