நேற்றைய பதிவில் மலையகம் சென்று போராடி மரணித்த எமது தோழர் நெப்போலியன் பற்றி குறிப்பிட்டிருந்தேன்.
நெப்போலியன் கரவெட்டியில் பிறந்து மலையகத்தில் வீர மரணம் அடைந்தவர். அதேபோன்று கரவெட்டியில் பிறந்து மலையகத்தில் வீர மரணம் அடைந்த இன்னொருவர் வரதன்.
வரதன் மட்டக்களப்பில் ரியூசன் சென்டர் நடத்திக் கொண்டிருந்தவேளை 1983ல் மட்டக்கிளப்பு சிறை உடைப்புக்கு உதவிகள் வழங்கினார்.
அதன் மூலம் அவருக்கு தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் இயக்கத்தினருடன் தொடர்பு ஏற்பட்டு அவர்களுடன் சேர்;ந்து இயங்கினார்.
அவ் இயக்கம் காத்தான்குடி வங்கிக்கொள்ளையின் பின் கடுமையாக இலங்கை அரசால் தேடப்பட்டது.
இந்நிலையில் வரதன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் 4 வருட சிறை வாழ்க்கையின் பின் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அடுத்து பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டார்.
சிறையில் இருந்து விடுதலை பெற்ற வரதன் இந்தியா சென்று தம்பாப்பிள்ளை மகேஸ்வரனைச் சந்தித்தார்.
சிறையில் மார்க்கிச அறிவைப் பெற்று வரதன் அடைந்த மாற்றத்தை அவதானித்த மகேஸ்வரன் “ வரதன் ! உமக்கு இனி பேரவை இயக்கம்தான் சரி. நீர் போய் பாலனுடன் கதையும்” என்று கூறி அனுப்பி வைத்தார்.
ஊருக்கு திரும்பி வந்த வரதன் என்னுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். அப்போது இந்திய ராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையே சண்டை நடந்து கொண்டிருந்தது.
இந்நிலையில் நான் கூறிய ஆலோசனைக்கு ஏற்ப அவர் இலங்கை போக்குவரத்து சபையில் கண்டக்டர் வேலையைப் பெற்றுக் கொண்டார்.
பருத்தித்துறைக்கும் திருகோணமலைக்கும் இடையே நடந்த பஸ் போக்குவரத்தில் அவர் விரும்பிப் பணியாற்றினார்.
ஏனெனில் அதன்மூலம் அவர் பல உணர்வுள்ள தோழர்களை சந்திக்கவும் தகவல்களை பரிமாறவும் முடிந்தது என கூறினார்.
இந்நிலையில் நான் இந்தியா சென்றதாலும் அங்கு நான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாலும் அவருக்கும் எனக்குமிடையேயான தொடர்பு அறுந்துவிட்டது.
எட்டு வருட சிறை வாழ்வின் பின்னர் நான் இலங்கை திரும்பி வந்தபோது வரதன் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து இயங்கி மரணித்த விடயத்தை அறிந்து கொண்டேன்.
கொழும்பில் புலிகள் நடந்திய முக்கிய தாக்குதல்கள் சிலவற்றை வரதனே முன்னின்று நடத்தியிருக்கிறார்.
இறுதியில் இலங்கை அரசு வரதனை இனங்கண்டு தேடிய போது அவர் மலையகம் சென்று தங்கியுள்ளார்.
ஆனால் அதனையும் அறிந்துகொண்டு ராணுவம் அவரை சுற்றிவழைத்தபோது வேறு வழியின்றி அவர் இறக்க நேரிட்டது.
வரதன் பழகுவதற்கு இனிமையானவர். அவர் விரும்பியிருந்தால் மற்றவர்கள் போல் வெளிநாடு சென்று வாழ்ந்திருக்க முடியும். அல்லது தான் உண்டு தன் வேலை உண்டு என குடும்பத்தைப் பார்த்துக் கொண்டாவது இருந்திருக்கலாம்.
ஆனால் அவர் தமிழ் மக்களுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்துள்ளார். தமக்காக வாழ்வை அர்ப்பணித்த அவரை தமிழ் மக்கள் எப்போதும் தம் நினைவில் வைத்திருப்பர்.
No comments:
Post a Comment