•ஈழத் தமிழர்கள் மீதான இந்திய அரசின் அக்கறை?
இந்தியாவில் இருக்கும் ஈழத் தமிழ் அகதிகள் இலங்கை திரும்பிச் செல்ல வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
இதே கருத்தையே பாஜக வின் தமிழக தலைவர்களான எச்ச.ராசா மற்றும் வானதி சீனிவாசன் போன்றவர்களும் கூறியுள்ளனர்.
ஒருபுறம் இந்து அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படும் என சட்டம் கொண்டு வந்திருக்கும் பாஜக மறுபுறம் இந்து அகதிகளான ஈழத் தமிழ் அகதிகள் திரும்பிச் செல்ல வேண்டும் என்று கூறுகின்றது.
மராட்டிய தலைவரான சரத்பவார் கூட இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்துவிட்டது என்று கூறியுள்ளார்.
மேற்குவங்க முதல்வர் கேரள முதல்வர் போன்றவர்களும் ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனக் கோருகின்றனர்.
ஆனால் தமிழர்களான, தமிழக பாஜக தலைவர்கள் “ஈழத் தமிழ் அகதிகள் இலங்கை திரும்பிச் செல்ல வேண்டும்” என்று கொஞ்சம்கூட இரக்கம் இன்றி கூறுகின்றனர்.
இதில் வேடிக்கை என்னவென்றால் ஈழத் தமிழருக்கு இந்திய குடியுரிமை வழங்கினால் அப்புறம் இலங்கையில் உள்ள தமிழர்களை எல்லாம் இலங்கை அரசு விரட்டி அடித்துவிடுமாம்.
இவர்கள் உண்மையில் லூசா அல்லது லூசு மாதிரி பேசுறாங்களா என்று தெரியவில்லை.
இந்தியாவில் இருக்கும் ஈழத் தமிழர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம். ஆனால் கனடா, லண்டன் போன்ற நாடுகளில் சுமார் ஆறு லட்சம் ஈழத் தமிழர்கள் இருக்கிறார்கள் என்ற விபரம் இவர்களுக்கு தெரியுமா?
சரி. பரவாயில்லை. நாட்டில் அமைதி ஏற்படாமல் ஒரு அகதியை திருப்பி அனுப்பக்கூடாது என்ற உலக நடைமுறையாவது இவர்களுக்கு தெரியுமா?
உண்மையில் இவர்களுக்கு ஈழத் தமிழர்கள் மீது அக்கறை இருந்தால் முதலில் அகதிகள் திரும்பிப் போவதற்கான அமைதியான சூழ்நிpலையை இலங்கையில் உருவாக்கி கொடுக்க வேண்டும் அல்லவா?
தமிழ் மக்களுக்கு தீர்வு கொடுக்க மாட்டேன் என்று இலங்கை ஜனாதிபதி கோத்தா இந்தியாவில் வைத்தே கூறியுள்ளார். ஆனால் இதுவரையில் இந்த தலைவர்களில் ஒருவர்கூட அதைக் கண்டிக்கவில்லை.
அதுமட்டுமல்ல இனி தமிழில் தேசியகீதம் பாடக்கூடாது என இந்த ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் அகதிகள் எந்த நம்பிக்கையில் இலங்கைக்கு திரும்பிச் செல்ல முடியும்?
அதனால்தானே தங்களுக்கு குடியுரிமை தாருங்கள் அல்லது கடலில் தள்ளி கொன்றுவிடுங்கள் என்று ஈழ அகதிகள் மனுக் கொடுத்துள்ளனர்.
இல கணேசன் எதிர்க்கட்சியாக இருந்தபோது ஈழத் தமழர்களுக்கு ஆதரவாக பல போராட்டங்களில் பங்குபற்றியவர். ஆதரவான கருத்துகள் தெரிவித்தவர்.
அவரே இன்று ஆளும்கட்சியாக மாறியவுடன் ஈழத் தமிழருக்கு எதிராக குரல் கொடுப்பது ஆச்சரியமாக மட்டுமல்ல அதிர்சியாகவும் இருக்கிறது.
ஆனால் ஒன்றுமட்டும் உறுதியாக தெரிகிறது. காங்கிரசாக இருந்தாலும் சரி பாஜக வும் சரி. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழருக்கு எதிராகவே செயற்படுகின்றன. ஈழத் தமிழர் மீதான இந்திய அரசின் அக்கறை என்பது இதுதான்.
No comments:
Post a Comment