•நாம் ஏன் சம்பந்தர் ஐயாவை விமர்சிக்கிறோம்?
பிரான்சில் இருக்கும் ஒருவர் நான் பேஸ்புக்கில் லைக்கிற்காக சம்பந்தர் ஐயாவை விமர்சிப்பதாக எழுதுகிறார்.
கனடாவில் இருக்கும் ஐயா ஒருவர் சம்பந்தர் ஐயாவை விமர்சிக்க என்ன தகுதி எனக்கு இருக்கு என்று கேட்கிறார்.
லண்டனில் இருக்கும் ஒருவர் (அதுவும் வழக்கறிஞர்) சம்பந்தர் ஐயாவுக்கு வயதாகிவிட்டது எனவே அவர் பதவியை விட்டு ஒதுங்க வேண்டும் என்று நான் எழுதியதால் எனக்கு விசர் முற்றி விட்டது என்றும் உடனடியாக சிகிச்சை பெற்றுக்கொள்ளும்படியும் ஆலோசனை கூறுகிறார்.
திருகோணமலையில் இருக்கும் ஊடகவியலாளர் ஒருவர் சம்பந்தர் ஐயாவுக்கு மாற்று யார் என்று கூறித்தான் விமர்சிக்க வேண்டும் என எனக்கு நிபந்தனை விதிக்கிறார்.
இவர்களுக்கான எனது பதில் வருமாறு,
(1) பேஸ்புக் வருவதற்கு முன்னரே 1980ல் இயக்கத்தில் சேரும்போது தமிழின விடுதலைக்காக என்ன கருத்துகளை கொண்டிருந்தேனோ அதனையே இப்பவும் கொண்டிருப்பதோடு அதனையே எழுதியும் வருகின்றேன். அது சரியான கருத்து என்று உணர்பவர்கள் லைக் போடுகிறார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது?
(2) நான் ஒரு ஈழத் தமிழன். அதுமட்டுமல்ல 1980 முதல் ஈழத் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி வருகின்றேன். சம்பந்தர் ஐயா இந்தியாவில் வாழ்ந்தபோது அதே இந்தியாவில் நான் தமிழ் மக்களுக்காக எட்டு வருடம் சிறையில் இருந்துள்ளேன். எனவே சம்பந்தர் ஐயாவை விமர்சிக்க எனக்கு போதுமான தகுதி இருப்பதாக நம்புகிறேன்.
(3) சம்பந்தர் ஐயா பற்றி நான் எழுதும் விடயங்களுக்கு எனக்கு விசர் முற்றிவிட்டது என்று கூறுவது உரிய பதில் இல்லை என்பதை சம்பந்தப்பட்டவருக்கு எப்படி புரியவைப்பது என்று எனக்கு தெரியவில்லை.
(4) சம்பந்தர் ஐயாவுக்கு பதிலாக மாற்று நபர் வேண்டும் என்று நான் விமர்சிக்கவில்லை. மாறாக அவர் பிரதிநித்துவம் பண்ணும் தவறான கருத்துகளுக்கு பதிலாக மாற்று கருத்து கொண்ட தலைமை வேண்டும் என்பதற்காகவே விமர்சிக்கின்றேன்.
மேலும் சில விளக்கங்கள் வருமாறு,
முதலாவதாக, சம்பந்தர் ஐயா விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட மனிதர் இல்லை. அதுமட்டுமல்ல விமர்சனம் அற்ற சமூகம் வளர்ச்சி அடைய முடியாது என்பதால் அவர் மீது விமர்சனம் செய்ய வேண்டியது அவசியமாகிறது.
இரண்டாவது, 2009வரை சம்பந்தர் ஐயா விமர்சிக்கப்படவில்லை. 2009இன் பின்னர் தமிழ் மக்களின் தலைமையாக தமிழ்தேசியகூட்டமைப்பும் அதன் தலைவராக சம்பந்தர் ஐயாவும் இருப்பதால்தான் அவரை விமர்சிக்க வேண்டியேற்படுகிறது.
மூன்றாவதாக, அவருடைய பெயர் சம்பந்தன். ஆனாலும் அவரை நான் எப்போதும் “சம்பந்தர் ஐயா” என்று மரியாதையாகவே எழுதி வருகின்றேன். அதுமட்டுமல்ல அவருடைய மகன் மகள் படங்களை எடுத்து அவருடைய தனிப்பட்ட வாழ்வையும்கூட எழுதியிருக்க முடியும். ஆனால் நான் ஒருபோதும் அதை செய்யவில்லை. ஏனெனில் அவர் மீது ஆக்கபூர்வமான விமர்சனம் வைக்கப்படுவதையே நான் நோக்கமாக கொண்டிருக்கிறேன்.
சம்பந்தர் ஐயா மீதான எனது விமர்சனம் ஆக்கபூர்வமான விமர்சனமா?
ஆம். உண்மைகளை அதுவும் ஆதாரங்களை முன்வைத்தே அவர் மீது விமர்சனம் செய்து வருகின்றேன்.
ஆம். ஒருபோதும் ஆதாரம் இன்றி நான் அவர் மீது அவதூறு செய்யவில்லை.
ஆம். அவரது தவறான கருத்துகளை மட்டும் விமர்சிக்கவில்லை. மாறாக அதற்கு மாற்று கருத்துகளையும் சேர்த்து முன்வைத்து வருகின்றேன்.
ஆம். எனது விமர்சனம் சம்பந்தர் ஐயாவின் தவறான கருத்துகளை அம்பலப்படுத்துவதாக மட்டும் அல்லாமல் ஒரு மாற்றுக் கருத்துக் கொண்ட தலைமைக்கானதாகவும் இருக்கின்றது.
எப்படி? சில உதாரணங்கள் கூற மடியுமா?
சம்பந்தர் ஐயா இலங்கை அரசிடம் கேட்டு தீர்வு பெற முடியும் என கூறுகின்றார். ஆனால் நான் “கேட்டுப் பெறுவதற்கு உரிமை ஒன்றும் பிச்சை இல்லை. அது போராடிப் பெறுவது” என்கிறேன்.
சம்பந்தர் ஐயா பாராளுமன்ற பாதை மூலம் தமிழின விடுதலை பெற முடியும் என்று கூறுகிறார். ஆனால் நான் “இந்த நவகாலனித்துவ ஏகாதிபத்திய காலத்தில் தேர்தல் பாதை மூலம் விடுதலை பெற முடியாது. மாறாக ஆயுதம் ஏந்திய மக்கள் யுத்தப் பாதை மூலமே பெற முடியும்” என்கிறேன்.
சம்பந்தர் ஐயா இந்திய விசுவாசியாக இருக்கிறார். இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்புக்கு துணை போகிறார். தமிழ் மக்களுக்கு இந்தியா தீர்வு பெற்று தரும் என்று கூறுகிறார். ஆனால் நான் “ இந்தியா தமிழ் மக்களுக்கு ஒருபோதும் உதவப் போவதில்லை. மாறாக இலங்கை அரசு தமிழ் இனப் படுகொலை செய்வதற்கே உதவி புரியும். எனவே இந்திய அரசை தமிழ் மக்கள் நம்பக்கூடாது” என்கிறேன்.
இன்னும் பல உள்ளன. தேவையானால் அடுத்த பதிவில் தருகின்றேன்.
No comments:
Post a Comment