•நெல்லியடி சந்தைச் சுவர் பேசுமா?
இது நெல்லியடியில் உள்ள சந்தையின் சுவர். இந்த சுவரில் அன்று நாம் போஸ்டர்களை ஒட்டினோம். இன்று இதில் சித்திரம் வரைகிறார்கள்.
இவர்கள் வரையும் சித்திரம் பேசுமா என்று தெரியவில்லை. ஆனால் அன்று ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் யாழ் குடாநாடு எங்கும் பேசப்பட்டது.
1980களில் பிரசுரம் வெளியிட முடியாத நிலையில் பொதுவாக அனைத்து இயக்கங்களும் தங்கள் கருத்துகளை இப்படியான சுவர்களில் பெரிய போஸ்டர்களாக ஒட்டி வெளிப்படுத்தினார்கள்.
இவ்வாறு ஒருமுறை “இந்திய அரசு தமிழ் மக்களுக்கு நம்பிக்கை நட்சத்திரம் இல்லை. அதனை நம்ப வேண்டாம்” என்று ஒரு போஸ்டரை நாம் ஒட்டினோம்.
உடனே அடுத்தநாள் சில புளட் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் “ இந்தியாவை எதிர்ப்போர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் கைக்கூலிகள் “ என்று பதில் போஸ்டர் ஒட்டினார்கள்.
இவ்வாறு போஸ்டர் ஒட்டிய ஒருவர் இப்போது தமிழகத்தில் இந்திய உளவு அமைப்புடன் சேர்ந்து செயற்படுகின்றார்.
அவரிடம் யாழ் இந்திய தூதர் “ பாலன் ஏன் இந்திய அரசுக்கு எதிராக எழுதுகிறார்? என்று கேட்டதற்கு “ இந்திய அரசு அவரை எட்டு வருடம் சிறையில் அடைத்து விட்டது. அந்த கோபத்தில் எழுதுகிறார் “ என்று கூறியிருக்கிறார்.
இந்த நெல்லியடி சந்தைச் சுவருக்கு பேசும் சக்தி இருந்தால் அது நான் 1980லேயே இந்திய அரசுக்கு எதிராக போஸ்டர் எழுதி ஒட்டியதைக் கூறும்.
இந்த சந்தைக்கு அருகில் ஒரு காளி கோவில் இருக்கிறது. அதில் நவராத்திரி விழாவை நெல்லியடி இளைஞர்கள் விமர்சையாக கொண்டாடுவார்கள்.
அவ்வாறு ஒருமுறை அவர்கள் கொண்டாடிய போது நாங்கள் “ கல்வியை தருவது கலைமகள் எனில் இன்னமும் கைநாட்டுக்காரர் இருப்பது ஏன்?” என்றும் “ கலைமகள் உறைவது நாவில் எனில் அவள் மல சலம் கழிவது எங்கே?” என்றும் கேட்டு போஸ்டர் ஒட்டியிருந்தோம்.
இதனால் அந்த நெல்லியடி இளைஞர்களுக்கும் எமக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றிவிட்டது. அப்புறம் இதை கம்யுனிஸ்ட்கட்சி தோழர்கள் சிவராசா, ரத்தினம், சிவம் போன்றவர்கள் தலையிட்டு சமரசம் செய்து வைத்தார்கள்.
அதன்பின்பு இந்திய ராணுவம் இருந்த நேரத்தில் எமது கரவெட்டி மதவடிக்கு அருகில் உள்ள சுவரில் ஒரு போஸ்டர் ஒட்டினோம். அதில் “ என் இனிய பக்தர்களே! என்னால் உங்களை இந்திய ராணவத்திடம் இருந்து காப்பாற்ற முடியாது. உங்களை போராளிகளால் மட்டுமே காப்பாற்ற முடியும். இப்படிக்கு உங்கள் கரவெட்டிப் பிள்ளையார்” என்று அதில் எழுதியிருந்தோம்.
உடனே சில பக்தர்கள் புலிகளிடம் சென்று உங்களுக்கு எதிராக மதவடிப் பொடியள் போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள் என்று போட்டுக் கொடுத்தனர். ஆனால் வந்து போஸ்டரைப் படித்த புலிகள் சிரித்துக்கொண்டே “சரியாகத்தானே எழுதியிருக்கிறது” என்று கூறிவிட்டுச் சென்றார்கள்.
No comments:
Post a Comment