•இழப்பதற்கு உயிரைத் தவிர வேறு எதுவும் அற்றவர்கள்
போராட்டத்தில் எப்போதும் உறுதியாக இருப்பார்களா?
போராட்டத்தில் எப்போதும் உறுதியாக இருப்பார்களா?
இந்தியாவில் எட்டு வருட சிறைவாழ்க்கையின் பின்னர் இலங்கை திரும்பிச் சென்று கொழும்பில் நான் தங்கி இருந்தபோது ஜே.வி.பி யைச் சேர்ந்த விமல் வீரவம்ச வுடன் எனக்கு தொடர்பு கிட்டியது.
வெள்ளவத்தைக்கு அருகில் ஒரு சிறிய அலுவலகம் ஜே.வி.பிக்கு இருந்தது. அங்குதான் நான் அவரை சந்திப்பது வழக்கம்.
அப்போது அவர் மாகாணசபை உறுப்பினராக இருந்தார். ஒருபழைய மோட்டார் சயிக்கிளில்தான் எப்போதும் பயணம் செய்வார்.
எனக்கு சிங்களம் தெரியாது. அவருக்கு தமிழ் தெரியாது இருவருக்கும் ஆங்கிலம் தெரியாது. அதனால் ஜே.வி.பி தோழர் சந்திரசேகர் எமக்கு மொழிபெயர்ப்பு உதவி செய்வார்.
நான் எப்போதும் நேரத்தைக் கடைப்பிடிப்பவன். அதுபோல் நேரம் தவறாமல் இருப்பவர்களை கண்டால் அவர்களை எனக்கு பிடிக்கும்.
அந்த வகையில் விமல் வீரவம்சவும் நேரத்தைக் கடைப்பிடிப்பதைக் கண்டிருக்கிறேன்.
சந்திரசேகர் தூரத்தில் இருந்து பஸ்ஸில் வருவதால் சிலவேளைகளில் உரிய நேரத்திற்கு வர முடியாமல் போய்விடும்.
அந்த வேளைகளில் விமல்வீரவம்ச சைகை மொழியில் என்னிடம் பேசி குடிப்பதற்கு பால் வாங்கி தருவார். அருகில் இருந்த ஒரு கிழவியின் கடையில் இருந்து சாப்பாடு வாங்கி தருவார்.
எனக்கு அவர் சைகை மொழி பேசியது ஆச்சரியம் தரவில்லை. மாறாக உண்மையில் அவரிடம் பணம் இல்லாத நிலையிலும் அவர் இவ்வாறு உபசரிப்பது கண்டு ஆச்சரியம் அடைந்திருக்கிறேன்.
அவர் என்னை சந்திக்கும்போதெல்லாம் தென்னிலங்கைக்கு வந்து கிராமங்களில் உள்ள தமது தோழர்களை சந்தித்து பேசும்படி கேட்பார்.
அப்படி அவர் கேட்டுக்கொண்டதற்காக ஜே.வி.பி பெண்கள் பிரிவு நடத்திய கண்காட்சிக்கு ஒன்றிக்கு சென்றிருந்தேன். பெண்கள் பிரிவுப் பொறுப்பாளரே என்னை அழைத்துச்சென்று கண்காட்சியை விளக்கினார்.
இறுதியில் அவர் கேட்டக்கொண்டதற்கு இணங்க அங்கிருந்த பதிவேட்டில் எனது பாராட்டையும் வாழ்த்தையும் பதிவு செய்தேன்.
இங்கு நான் ஒரு விடயத்தை உறுதியாக பதிவு செய்ய விரும்பகிறேன். நான் சந்தித்த ஜே.வி.பி யினரில் ஒருவர்கூட தமிழ் மக்கள் மீது வெறுப்பு காட்டவில்லை.
அதன்பின்னர் நான் லண்டன் வந்த பின்பு எனது அகதி வழக்கிற்காக சிபாரிசு கடிதம் பெறுவதற்காக எனது நண்பர் ஒருவரை வீரவம்சவிடம் அனுப்பியிருந்தேன்.
எனது நண்பரைக் கண்டதும் வீரவம்ச பயந்து விட்டார். தன்னை கொல்வதற்கு புலி வந்து விட்டதாக நினைத்தார்.
ஏனெனில் அந்த நண்பர் இரண்டு வருட சிறைவாழ்வின் பின் அப்போததான் விடுதலை செய்யப்பட்டிருந்தார். அதனாலேதான் அவர் மீது வீரவம்சவுக்கு சந்தேகம் ஏற்பட்டிருந்தது.
ஆனால் நான் அனுப்பியே அவர் வந்திருப்பதை அறிந்ததும் அவரது சந்தேகம் நீங்கிவிட்டது.
இவ்வாறு இருந்த விமல் வீரவம்சவின் இன்றைய நிலையை அறியும்போது ஆச்சரியமாகவும் நம்ப முடியாமலும் இருக்கிறது.
அதுவும் யாழ்ப்பாண விமானநிலையத்தில் தமிழ் பெயரை முதலில் எழுதியதைக்கூட அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்பதை அறியும் போது உண்மையில் என்னால் நம்ப முடியவில்லை.
புரட்சிக்கு உழைக்கும் மக்கள் தலைமை தாங்க வேண்டும் என்று மார்க்ஸ் எழுதியபோது அம் மக்கள் இழப்பதற்கு உயிரைத் தவிர வேறு எதுவுமற்ற வர்கள். எனவே போராட்டத்தில் உறுதியாக இருப்பார்கள் என்றார்.
விமல்வீரவம்சவும் அவ்வாறே இழப்பதற்கு உயிரைத் தவிர வேறு எதுவுமற்ற வர்க்கத்தில் இருந்து வந்தவரே.
ஆனால் அவரோ போராட்டத்தில் இருந்து விலகியது மட்டுமல்ல இன்று பல கோடி ரூபா பெறுமதியான சொத்துகளுக்கு அதிபதியாகிவிட்டார்.
அன்று ஒரு பழைய மோட்டார் சயிக்கிளில் பயணித்தவர் இன்று 7 கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனத்தில் பயணிக்கிறார்.
அன்று ஒரு டீ வாங்கித் தரவே கையில் காசு இல்லாமல் இருந்தவர் இன்று பல லட்சம் ரூபா பெறுமதியான கைக்கடிகாரம் கையில் கட்டியிருக்கிறார்.
எப்படி இந்த மாற்றம் அவரில் நிகழ்ந்தது? ஏன் இந்த மாற்றம் நடை பெற்றது? போன்ற வினாக்களுக்கு விடை காண்பதன் மூலமே எதிர் காலத்;தில் இன்னொரு விமல் வீரவம்ச தோன்றுவதை தவிர்க்க முடியும்.
No comments:
Post a Comment