•எப்படி விமர்சனம் செய்ய வேண்டும்?
லண்டனில் நடந்த திருமா கூட்டம் குறித்து நேற்று ஒரு பதிவு போட்டிருந்தேன்.
அதில் கருத்து பகிர்ந்தவர்கள் சிலர் திருமா செய்த துரோகத்தை விமர்சிக்கக் கூடாதா எனக் கேட்டிருந்தார்கள்.
அதுவும் ஒரு தம்பி ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு “என்ன தோழர் நீங்களும் பெட்டி வாங்கிவிட்டீர்களா?” என நக்கலாக கேட்டார்.
இப்போது பிரச்சனை திருமாவை விமர்சிக்கலாமா இல்லையா என்பதல்ல. மாறாக எப்படி விமர்சிக்க வேண்டும் என்பது பற்றியே.
யாரும் யாரையும் விமர்சிக்கலாம். யாரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. எனவே இந்த பேஸ்புக் யுகத்தில் விமர்சனத்தை யாரும் தவிர்த்திட முடியாது.
அதுமட்டுமல்ல விமர்சனமற்ற சமூகம் ஒருபோதும் தன்னை திருத்திக்கொள்ளவோ அல்லது முன்நோக்கி பயணிக்கவோ முடியாது.
எனவே வீழ்ந்து கிடக்கும் ஈழத் தமிழினம் மீண்டும் எழுந்து நிற்க வேண்டுமானால் அதற்கு மிகவும் அவசியமானது ஆக்கபூர்வமான விமர்சனமே.
இப்போது எம்முன் உள்ள கேள்வி ஆக்கபூர்வமான விமர்சனத்தை செய்வது எப்படி என்பது பற்றியே.
இதற்கு மாபெரும் மார்க்சிய ஆசான் தோழர் மாவோ சேதுங் அவர்கள் எமக்கு தகுந்த வழி காட்டியுள்ளார்.
அவர் கூறுகிறார் 'எதிரியின் மீதான நம் விமர்சனம் புலி இரையைக் கவ்வுவதைப் போல வேகமாய் இருக்க வேண்டும். நட்பு சக்திகளின் மீதான விமர்சனம் பூனை தன் குட்டியை கவ்வுவதைப் போல மென்மையாய் இருக்க வேண்டும்' என்று அவர் கூறியுள்ளார்.
ஆம். எதிரி மீதான விமர்சனம் அவனை அம்பலப்படுத்துவதாக இருக்க வேண்டும். நண்பன் மீதான விமர்சனம் அவனை எம் பக்கத்திற்கு வென்றெடுப்பதாக இருக்க வேண்டும்.
உணர்ச்சி வேகத்தில் நாம் நட்பு சக்திகளின் குறைகளை வெறுப்பாய் எதிர் கொள்வது எமது இலட்சியமான தமிழின விடுதலைக்கு ஒருபோதும் உதவாது.
ஏனெனில் நிர்ப்பந்தம் தோலைத்தான் தொடும். ஆனால் அறிவுறுத்தல் ஆத்மாவைத் தொடும்
சமூகத்தில் நிலவும் முரண்பாடுகளை கையாள்வது குறித்து நாம் இதனைக் கவனத்தில் கொள்ளல் வேண்டும்..
எமது உரையாடல்கள் பொறுப்புணர்வுடன் ஆக்கபூர்வமானவையாக இருத்தல் வேண்டும்.
மாறாக எம் மத்தியில் உருவாகிவரும் ஜக்கியத்தை குழப்புவதற்கு முயலும் நம் எதிரிகளுக்கு உதவிடக்கூடாது.
No comments:
Post a Comment