போதும்.
தயவு செய்து நிறுத்துங்கள்.
கடந்த சில தினங்களாக லண்டனில் நடந்த திருமா கூட்டம்பற்றி வரும் செய்திகள் அருவருப்பை தருகின்றன.
மீண்டும் கூறுகிறேன். உறுதியாக கூறுகிறேன்.
யாரும் காசு விட்டெறியவும் இல்லை. பொறுக்கிட்டு போ என்றும் யாரும் திருமாவை நோக்கி கூறவில்லை.
தமது எதிர்ப்பைக் காட்டிய அந்த இருவரும் நடந்த சம்பவம் குறித்து விளக்கி வீடியோ விட்டுள்ளார்கள்.
அதில் திருமாவை அவமதிக்கும் நோக்கமோ அல்லது கூட்டத்தை குழப்பும் நோக்கமோ தமக்கு இருக்கவில்லை என்று கூறியுள்ளனர்.
அதேபோல் திருமாவும் அவர்களை வெளியேற்ற வேண்டாம் நான் அவர்களுடன் பேசுகிறேன் என்றுதான் கூறினார்.
தனது உரையின் போதும் அவர்களை தனது தம்பிகள் என்றே குறிப்பிட்டார். அடுத்தநாள் அவர்களுடன் தொலைபேசியில் பேசியும் இருக்கிறார்.
இது வெறும் நட்பு முரண்தான். ஆனால் இதை சில சக்திகள் பகை முரணாக்க முயலுகின்றன.
இந்த சம்பவத்தை பெரிதுபடுத்தி 2009க்கு பிறகு ஏற்பட்டுவரும் தமிழக மற்றும் ஈழத் தமிழர்களுக்கிடையேயான ஒற்றுமையை குலைக்க முயலுகின்றன.
தமிழக அளும்கட்சியின் உத்யோகபூர்வமான பத்திரிகை உட்பட சங்பரிவாரங்களின் பத்திரிகைகள் இச் செய்தியை திரிபு படுத்தி வெளியிடுவதைப் பார்க்கும் போது சந்தேகம் வருகிறது.
எனவே இவர்களின் இச் சூழ்ச்சிக்கு பலியாயாமல் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இந்த சம்பவம் நடந்தபோது நான் அங்கு இருந்தேன். இதை தடுக்காமல் வேடிக்கை பார்த்தக்கொண்டிருந்ததை தவறு என்று இப்போது உணர்கிறேன்.
இது வழக்கமாக நடக்கும் சாதாரண பிரச்சனை என்றே நினைத்தேன். இது இந்தளவு தூரம் பெரிதாக்கப்படும் என்று அப்போது நான் நினைக்கவில்லை.
சரி நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். இனியாவது நடப்பது நலதாய் இருக்கட்டும்.
ஆனால் லண்டன் வரும் தமிழக தலைவர்கள் ஒரு விடயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு தங்களை காப்பாற்றாமல் கைவிட்டுவிட்டதே என்ற கோபம் ஈழத் தமிழர்கள் மனங்களில் இருக்கிறது என்பதை உணர வேண்டும்.
அமெரிக்கா காப்பாற்றும். ஜநா காப்பாற்றும் என்று அவர்கள் பெரிதாக நம்பவில்லை. மாறாக அருகில் இருக்கும் தமது 7 கோடி தொப்புள்கொடி உறவுகள் எப்படியும தம்மை காப்பாற்றுவார்கள்; என்றே உறுதியாக நம்பினார்கள்.
தமக்காக 17 தொப்புள்கொடி உறவுகள் தீக்குளித்து மரணித்தும்கூட அவர்களால் ஏன் தங்களை காப்பாற்ற முடியவில்லை என்பதை ஈழத் தமிழர்கள் உணரவில்லை.
எனவே இத் தமிழக தலைவர்கள் ஈழத் தமிழர்களுக்கு உணர்த்த வேண்டியது “ நாங்கள் சுதந்திரமான நாடாக இல்லை. நாங்களும் இந்தியாவில் அடிமைகளாகவே இருக்கிறோம். அதனால்தான் உங்களுக்கு உதவ முடியவில்லை” என்பதையே.
எனவே ஈழத் தமிழர்களும் தமிழக தமிழர்களும் ஒன்றுபடவேண்டும். அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதற்காக.
ஏனெனில் ஒரு அடிமை தனது அடிமைத் தனத்திற்கு எதிராக போராடுவதே இன்னொரு அடிமைக்கு செய்யும் உதவியாகும்.
No comments:
Post a Comment