இலங்கையில் தேர்தல் பாதை மூலம் புரட்சியை அடைய முடியாது. ஆயுதம் தாங்கிய மக்கள் யுத்த பாதை மூலமே பெற முடியும் என முதலில் கூறியவர் தோழர் சண்முகதாசன்.
அவரும்கூட மாவோவின் சிந்தனைகளில் இருந்தே இந்த மகத்தான முடிவுக்கு வந்திருந்தார்.
ஆயுதப் போராட்டத்திற்கு அவர் வழங்கிய தத்துவார்த்த பங்களிப்பே ஜேவிபி யும் தமிழ் போராளிகளும் ஆயுதப்போராட்டம் நடத்த வழி சமைத்தது.
தமிழ் போராளிகள் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தபோது உடனே அனைத்து தமிழ் மக்களும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
யாழ்ப்பாணத்தில் காடு இல்லை. எனவே கொரில்லா போராட்டம் சாத்தியமில்லை என்று கூறியவர்களும், யாழ்ப்பாணம் மணியாடர் பொருளாதாரம். எனவே அந்த மக்கள் ஒரு போதும் ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று கூறியவர்களும் இருந்தார்கள்.
1983க்கு முன்னர் அனைத்து இயக்க உறுப்பினர்களையும் கூட்டிப் பார்த்தாலும் எண்ணிக்கை நூறைத் தாண்டாது.
ஆனால் 1983 கலவரம் அனைத்தையும் திருப்பிப் போட்டது. ஆயிரக் கணக்கில் இளைஞர்கள் இயக்கங்களில் சேர்ந்தார்கள். மக்களும் தங்கள் முழுமையான ஆதரவை வழங்கினார்கள்.
தமிழ் மக்கள் தம் ஆதரவை வழங்கியதில் எந்த ஆச்சரியமும் இல்லை. வழங்காமல் இருந்திருந்தால்தான் ஆச்சரியம்.
ஏனெனில் தமிழ் மக்கள் நீண்ட போராட்ட வரலாற்றின் சொந்தக்காரர்கள். அவர்கள் இன்று நேற்று அல்ல பல நூற்றாண்டுகளாக போராடி வருவதை சரித்திரத்தை கொஞ்சம் புரட்டிப் பார்த்தாலே அறிய முடியும்.
தமிழ் மக்கள் ஏன் இப்படி தொடர்ந்து போராடுகிறார்கள் என்று யாரும் கேள்வி எழுப்பிப் பார்க்கலாம்.
அப்படி பார்த்தால் அதற்கு ஒரே காரணம் அவர்கள் தாம் அடிமையாக கிடக்கிறோம் என்பதை உணர்ந்து இருப்பது ஒன்றேதான்
தாம் அடிமையாக கிடக்கிறோம் என்பதை ஒரு இனம் உணர்ந்துவிட்டால் அப்புறம் அது எழுந்து நின்று போராடுவதை எந்த கொம்பனாலும் தடுத்தவிட முடியாது என்று அறிஞர்கள் கூறியதையே தமிழ் மக்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த உண்மைகளை எடுத்துக்கூறும்போது அதற்கு பதில் அளிக்க முடியாதவர்கள் லண்டனில் இருந்து கொண்டு வன்முறையை தூண்டுவதாக எழுதுகிறார்கள்
அவர்கள்; நாட்டிற்கு வந்து இதைக் கூறும்படி எழுதுகிறார்கள். தாம் சரியான பதில் எழுதிவிட்டதாக என நினைக்கிறார்கள்.
அன்று யூத மகக்ள் உலகெங்கும் இருந்து தமது நாட்டிற்காக குரல் கொடுத்த போது இஸ்ரவேலில் வந்து குரல் கொடுக்கும்படி எந்த யூதரும் கூறவில்லை.
இன்று காலிஸ்தான் விடுதலைக்காக லண்டனில் பல சீக்கியர்கள் குரல் கொடுக்கிறார்கள். அவர்களை இந்தியா வந்து குரல் கொடுக்கும்படி எந்த சீக்கியரும் கூறுவதில்லை.
சுதந்திர காஸ்மீருக்காக பல காஸ்மீரிகள் உலகெங்கும் குரல் கொடுக்கின்றனர். அவர்களை காஸ்மீரில் வந்து குரல் கொடுக்கும்படி எந்த காஸ்மீரிகளும் கூறுவதில்லை.
ஆனால் ஈழத் தமிழர் விடுதலைக்காக யாராவது வெளிநாட்டில் இருந்து குரல் கொடுத்தால் உடனே நாட்டில் வந்து குரல் கொடுக்கும்படி எழுதுகின்றனர்.
நாட்டில் இருந்து குரல் கொடுத்தவர்களை நசுக்கிய கோத்தபாயா வெளிநாட்டில் இருந்து குரல் கொடுப்பவர்களை நசுக்குவதற்காக நாட்டிற்கு அழைத்தார்.
எனவே கோத்தபாயாவின் நோக்கத்தை உணர முடிகிறது. ஆனால் சில தமிழர்களும் கோத்தபாயாவுக்கு உதவும் வண்ணம் அழைக்கின்றனர். இதுதான் தமிழ் இனத்தின் சாபக் கேடு.
No comments:
Post a Comment