Friday, August 30, 2019

பகைவர்களின் பட்டியலைப் பார்த்தேன்

பகைவர்களின் பட்டியலைப் பார்த்தேன்
அதிலிருந்த
நண்பர்களின் பெயர்களைப் பார்த்துத் திகைத்தேன்
நண்பர்களின் பட்டியலைப் பார்த்தேன்
அதிலிருந்த 
பகைவர்களின் பெயர்களைப் பார்த்து அதிர்ந்தேன்
அடுத்ததாக துரோகிகளின் பட்டியலைப் பார்க்க
பதட்டத்தோடு காத்துக்கொண்டிருக்கிறேன்.
- யாரோ
இந்த கவிதை யார் எழுதியது என்று தெரியவில்லை. ஆனால் எனக்கு மிகவும் நெருக்கமானதாக உணர்கிறேன்.
சரி நேரடியாக விடயத்திற்கு வருகிறேன். நேற்றை தினம் இரண்டு நண்பர்கள் என்னைப் பற்றி பதிவு போட்டிருந்தனர். அவர்களின் அந்த பதிவுகளின் கீழேயே எனது பதிலை நான் கொடுத்திருந்தேன்.
பொதுவாக என்மீதான விமர்சனங்களை நான் கண்டுகொள்வதில்லை. மௌனமாக கடந்து சென்றுவிடுவேன்.
ஆனால் இந்த இரண்டு நண்பர்களின் பதிவுகளை அப்படி கடந்து சென்றுவிட முடியவில்லை. ஏனெனில் நேற்றுவரை என்னை “தோழர்” என்று அழைத்து பழகிய நண்பர்கள் இவர்கள்.
எனக்கும் இவர்களுக்கும் இடையில் எந்தவித தனிப்பட்ட பிரச்சனைகளும் இருப்பதாக நான் கருதவில்லை. அவர்களும் அப்படியேதான் கருதுவார்கள் என நம்புகிறேன்.
அப்படியென்றால் கருத்துதான் எமக்கிடையேயான பிரச்சனையாகும் என்பது எனது புரிதல். எனவே அதை உரையாடல் மூலம் தீர்த்தக்கொள்ள முடியும் என நான் நம்புகிறேன்.
லண்டனில் திருமா பேசிய பேச்சை அடுத்து “ அலிபாபாவும் நாலு வெங்காயங்களும்” என்று நான் எழுதிய பதிவு தவறு என்றும் அதை நான் உணர வேண்டும் என அவர்கள் கோருகிறார்கள்.
நான் ஏன் அதை அவ்வாறு எழுதினேன் என்பதை அந்த பதிவில் தெளிவாக கூறியிருக்கிறேன். இருந்தும் அவர்கள் அதை ஏற்க மறுக்கிறார்கள்.
இங்கு எனது ஏமாற்றம் என்னவெனில் அவர்கள் என்னைப் பற்றி எழுதி விட்டார்கள் என்று அல்ல. மாறாக எனது பதிவிற்கு உரிய பதிலை தர அவர்கள் முயலவில்லை என்பதுதான்.
எனது புரிதலின்படி பிரச்சனையின் சாரம்சம் இதுதான். இந்திய ஆக்கிரமிப்பை நாம் எதிர்க்க வேண்டுமா? இல்லையா?
இல்லை என்றால் ஏன் எதிர்க்க வேண்டாம் என்பதை கூறுங்கள். அல்லது எதிர்க்க வேணடும் என்றால் நீங்களே எதிர்ப்பை முன்னெடுங்கள். உங்கள் பின்னால் நான் வருகிறேன்.
அதைவிடுத்து, தேவையில்லாத விடயங்களை எழுதுவதால் எந்த பயனும் இல்லை நண்பர்களே.

No comments:

Post a Comment