Sunday, November 20, 2016

•வறுமையின் கொடுமையால் மக்கள் தற்கொலை செய்கின்றனர். மக்களின் பிரதிநிதிகள் சொகுசு வாகனம் இறக்குமதி செய்கின்றனர்.

•வறுமையின் கொடுமையால் மக்கள் தற்கொலை செய்கின்றனர்.
மக்களின் பிரதிநிதிகள் சொகுசு வாகனம் இறக்குமதி செய்கின்றனர்.
கடன் தொல்லை தாங்க முடியாமல் வவுனியாவில் ஒரு பெண் தன் குழந்தையுடன் நேற்றைய தினம் தற்கொலை செய்துள்ளார்.
அதே வவுனியாவில் கடந்த வருடம் ஒரு தாய் வறுமையின் கொடுமை தாங்க முடியாமல் தன் 3 குழந்தைகளையும் கிணற்றில் வீசிக் கொன்றுள்ளார்.
பரீட்சைக் கட்டணம் கட்ட வழியின்றி திருடியதாக ஒரு சிறுவன் கிளிநொச்சி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளான்.
படிக்க வேண்டிய 12 வயது சிறுவன் கள்ளு விற்றதாக கூறி 16 கள்ளுப் போத்தல்களுடன் வன்னியில் கைது செய்யப்பட்டுள்ளான்
போரினால் பாதிக்கப்பட்ட வன்னி மக்கள் எந்தவித அரசு உதவியும் இன்றி வறுமையில் வாடுகின்றனர்.
ஆனால் அந்த மக்களின் வோட்டைப் பெற்று பதவி பிடித்த தலைவர்களோ தமக்கு சொகுசு வாகனம் இறக்குமதி செய்வதிலேதான் அக்கறையாக இருக்கிறார்கள்.
வடக்கு தமிழ் மக்களுக்கு தமிழீழம் தவிர அனைத்தையும் தருவேன் என்றார் மகிந்த ராஜபக்ச. ஆனால் அவர் கார்ப்பெட் ரோட்டைத் தவிர வேறு எதையும் தரவில்லை.
அடுத்து வந்த நல்லாட்சி அரசில் அதுகூட இல்லாமல் போய்விட்டது. கேட்டால் விரைவில் தீர்வு தரப் போகிறோம் என்று கதை சொல்கிறார்கள்.
இந்த வருட இறுதிக்குள் தீர்வு வந்தவிடும் என்று கூறிவந்த சம்பந்தர் அய்யா இனி அடுத்த தீபாவளிக்குதான் தீர்வு என்கிறார். இனி அதுவரை அவர் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிடுவார்.
வடக்கு மாகாணசபை முதல்வரோ இரு நகர உடன்படிக்கை என்று லண்டன் செல்கிறார். அவருக்கு மக்கள் தற்கொலை செய்வது பற்றி தெரியுமோ தெரியவில்லை. தெரிந்தாலும் “கடவுள் காப்பாற்றட்டும்” என்று கூறினாலும் கூறிவிடுவார்.
மாகாணசபை அமைச்சர்கள் ஊழல் செய்வதாக முதலமைச்சரே ஒப்பாரி வைக்கிறார். மாகாண சபை உறுப்பினர்களுக்கு மக்களுக்காக குரல் கொடுக்க நெரமில்லை.
ஆனால் அமெரிக்க தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் வெல்ல வேண்டும் என்று நல்லூர் கோயிலில் ஆயிரம் தேங்காய் உடைக்க நேரமிருக்கிறது.
என்னே அவலம் இது!

No comments:

Post a Comment