•எம் தமிழ் இனத்தில் மட்டும் ஏன் இப்படி?
முன்பு தென்ஆபிரிக்கா நிறவெறிக்கு எதிராக உலகம் பூராவும் போராட்டம் நடைபெற்றது. அப்போது அவர்களை தென்னாபிரிக்காவில் வந்து போராடும்படி எந்த ஆப்பிரிக்கத்தவரும் கேட்டதில்லை.
இப்போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பலரும் குரல் கொடுக்கின்றனர். ஆனால் அவ்வாறு குரல் கொடுப்பவர்களை பாலஸ்தீனத்தில் வந்து குரல் கொடுக்கும்படி எந்த பாலஸ்தீனத்தவரும் கூறுவதில்லை.
காஸ்மீரில் நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக லண்டனில் உள்ள காஸ்மீரிகள் குரல் கொடுக்கின்றனர். ஆனால் அவர்களை காஸ்மீரில் வந்து குரல் கொடுக்கும்படி எந்த காஸ்மீரிகளும் கேட்டதில்லை.
ஆனால் தமிழ் மக்களுக்கு நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக புலம்பெயர்ந்த தமிழர் குரல் கொடுத்தால் அவர்களை இலங்கையில் வந்து குரல் கொடுக்கும்படி சில தமிழர்கள் கூறுகிறார்கள்.
புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்போர் இலங்கை வந்து குரல் கொடுக்க வேண்டும் என்று கோத்தபாயா கூறியதையே இவர்களும் கூறுகிறார்கள்.
இலங்கையில் படுகொலைகள் மூலம் தமிழர்களின் குரல் வளையை நசுக்கிய கோத்தபாயா கும்பலுக்கு புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் குரல் எழுப்புவது சகித்தக்கொள்ள முடியாததுதான்.
இன்று புலம்பெயர் நாடுகளில் தமிழ் மக்கள் தொடர்ந்து குரல் கொடுப்பதால்தானே ஜ.நா வும் ஏகாதிபத்திய நாடுகளும் பெயரளவுக்கேனும் தமிழர் விடயத்தில் அக்கறை காட்டுகின்றன.
வரலாற்றில் பிரித்தானிய பிரதமர் ஒருவர் யாழ்ப்பாணம் சென்று தமிழ் மக்களை சந்தித்தார் என்றால் அதற்கு பிரித்தானியாவில் உள்ள இரண்டு லட்சம் தமிழர்கள் காரணமின்றி வேறு என்னவாக இருக்க முடியும்?
கனடா அரசு தொடர்ந்து இனப்படுகொலை விசாரணையை வலியுறுத்துகிறது எனில் அங்கு இருக்கும் மூன்று லட்சம் தமிழர்கள் அன்றி வேறு என்ன காரணம் இருக்க முடியும்?
ஜ.நா வில் 6 மாத்திற்கு ஒரு முறை இலங்கை இனப்படுகொலை குறித்து ஏதாவது பேசப்படுகின்றது எனில் அதற்கு ஜரோப்பாவில் வாழும் தமிழர்கள் அன்றி வேறு என்ன காரணம் இருக்க முடியும்?
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தங்களால் இயன்ற போராட்டங்களை முன்னெடுப்பதுடன் தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர் வாழும் தமிழர்களுடனும் ஒன்றிணைகிறார்கள்.
வராலாற்றில் என்றுமில்லாதவாறு உலகில் வாழும் தமிழ மக்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள்.
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டு என்று புரட்சிக் கவிஞர் பாரதிசாதன் அன்று கண்ட கனவு இன்று நனவாகிறது.
ஆதனால்தான் உருவாகும் தமிழ் மக்களின் இந்த ஜக்கியத்தை குழப்புவதற்கு இலங்கை இந்திய அரசுகள் முயற்சி செய்கின்றன.
புலம்பெயர்ந்த தமிழர்கள் இலங்கையில் வந்து போராட வேண்டும் என எழுதுவோர் இலங்கை இந்திய அரசின் இந்த முயற்சிகளுக்கு துணை போகின்றனர்.
இன்று சுமார் 7 லட்சம் தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். அவர்கள் தமிழ் இனத்திற்கு குரல் கொடுப்பதாயின் இலங்கைக்கு வர வேண்டும் எனக் கோருவது முட்டாள்தனமானது மட்டுமன்றி அவர்களது ஜனநாயக உரிமையை மறுப்பதாகும்.
இலங்கையில் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக இருப்பது எமது பலவீனம் எனில் உலக அளவில் தமிழ் மக்கள் பெரும்பான்மையினராக இருப்பது எமது பலமாகும்.
இலங்கையில் சிங்கள மக்கள் இருக்கலாம். ஆனால் உலகம் பூராவும் தமிழ் மக்கள் பரந்து வாழ்கிறார்கள்.
புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் அடுத்த தலைமுறை பல மொழிகள் கற்கிறார்கள். உயர் கல்வி கற்கிறார்கள். உயர் பதவிகளும் பெறுகிறார்கள்.
புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் தாங்கள் வாழும் நாடுகளில் உரிய அரசியல் பிரயோகத்தை மேற்கொண்டு தங்களை பல வழிகளிலும் பலப்படுத்தி வருகிறார்கள்.
உலகில் உள்ள போராடும் மக்களுடன் , அமைப்புகளுடன் ஜக்கியப்பட்டு தமது போராட்டத்தை புலம்பெயர் தமிழ் மக்கள் மேற்கொள்ளும்போது உலக அரங்கில் இலங்கை அரசு தனிமைப்படுத்தப்பட்டு தோல்வியை தழுவும்.
ஆம். தமிழ் மக்களின் எதிர்கால போராட்ட வரலாற்றில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் பாரிய பங்களிப்பை செலுத்தப் போகிறார்கள்.
இதனால்தான் அதனை விரும்பாதவர்கள் இலங்கை வந்து போராடும்படி புலம்பெயர்ந்த தமிழர்களை கிண்டல் பண்ணி அழைக்கிறார்கள்.
நாம் தொடர்ந்து போராடுவதன் மூலம் அவர்களுக்குரிய பதிலை வழங்குவோம்!
No comments:
Post a Comment