Sunday, November 20, 2016

•தனது சட்டத்தை, தனது நீதிமன்றத்தை தானே மதிக்காத இந்திய அரசு!

•தனது சட்டத்தை,
தனது நீதிமன்றத்தை
தானே மதிக்காத இந்திய அரசு!
கடந்த 24.10.2016 யன்று ஒரிசா மாநில எல்லையில் 28 மாவோயிஸ்டுகளை மோதலில் சுட்டுக் கொன்றதாக ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது.
ஆனால் இவர்களுக்கு உணவில் நஞ்சு கலந்து மயங்கிய நிலையில் சுட்டுக் கொன்றதாக மாவோயிஸ்ட் அமைப்பினைச் சார்ந்த ஷ்யாம் அளித்துள்ள பத்திரிகை செய்தி கூறுகிறது.
அடுத்து சிறையில் இருந்து தப்பியதாக கூறி சிமி அமைப்பைச் சேர்ந்த எட்டுப் பேரை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றுள்ளதாக மத்திய பிரதேச மாநில அரசு கூறியுள்ளது.
ஆனால் இவர்களின் வழக்கறிஞர் “ எட்டுப் பேரின் வழக்கும் விரைவில் முடிவுற இருக்கிறது. அதில் இவர்கள் விடுதலை பெற வாய்ப்பு இருந்தது. எனவே அவர்கள் சிறையில் இருந்து தப்பித்தார்கள் என்ற பொலிஸ் குற்றச்சாட்டின் பின் பெரிய சதி இருக்கிறது” என்கிறார்.
சென்னை சிறையில் ராம்குமார் மின்சார வயரைக் கடித்து இறந்தார் என்று கூறிய தமிழ்நாடு பொலிசுடன் ஒப்பிடுகையில் சிறையில் இருந்து தப்பியதால் என்கவுண்டரில் கொலை செய்தோம் என்று கூறிய மத்திய பிரதேச பொலிஸ் பரவாயில்லைதான்.
ஆனால் பொலிஸார் தாங்களே மரண தண்டனை வழங்குவதாயின் அப்புறம் சட்டம் எதற்கு? நீதிமன்றம் எதற்கு?
சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி நீதிமன்றத்தின் மூலம் தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டியதுதானே பொலிசாரின் கடமை.
இந்திய அரசே தனது சட்டத்தையும் நீதிமன்றத்தையும் மதிக்காவிடின் சாதாரண மக்கள் எப்படி இவற்றின் மீது மதிப்பு கொள்ள முடியும்?
இன்னொரு முக்கிய செய்தி,
’சட்டீஸ்கரில் உள்ள டெட்மாலா கிராமத்தில் புகுந்த நக்சலைட்டுகள் பழங்குடியினரின் 160 வீடுகளை தீவைத்துக்கொளுத்தினார்கள் தட்டிக்கேட்ட பழங்குடிகள் மூவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்’’
இது அய்ந்தரை வருடங்களுக்கு முன்பு வந்த செய்தி. கிட்டத்தட்ட எல்லா இந்திய சேனல்களும் அப்போது நக்சலைட்டுகள் மீது ருத்திரதாண்டவம் ஆடியது.
இப்போது சென்ரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன்.. அதாங்க CBI ரிப்போர்ட் ஒன்று வந்திருக்கிறது. அய்ந்து வருடமா விசாரிச்சதில் ’’அந்த 160 வீடுகளை போலீசேதான் கொளுத்தியிருக்கிறது . அது மட்டுமல்லாமல் சட்டீஸ்கர் அரசால் உருவாக்கப்பட்ட சல்வார் ஜுடும் அமைப்பு பல பழங்குடிகளின் கிராமங்களில் புகுந்து தாக்குதல் நடத்தியிருக்கிறது. பல பெண்களை வண்புணர்வுக்கு உள்ளாக்கியிருக்கிறது என்று கசிந்த விஷயங்கள் அத்தனையும் அப்பட்டமான உண்மை என்று உடைத்துச்சொல்கிறது அந்த அறிக்கை
இப்போது இந்த உண்மையை இந்திய அரசின் புலனாய்வு அமைப்பே அம்பலப்படுத்தியிருக்கிறது.
அதேபொல் இன்னும் 5 வருடம் கழித்து தற்போது நடத்தப்பட்ட கொலைகளின் உண்மை வெளிவரக்கூடும்.
ஆனால் அதற்குள் இன்னும் எத்தனை அப்பாவிகளை (போலி) மோதலில் கொலை என மோடி அரசு அறிவிக்கப் போகிறது என்பதே கவலை தரும் விடயம் ஆகும்.

No comments:

Post a Comment