Thursday, August 31, 2017

•கடவுள் கந்தன் எமக்கு கற்றுக் கொடுப்பது என்ன?

•கடவுள் கந்தன் எமக்கு
கற்றுக் கொடுப்பது என்ன?
நல்லூர் கோயில் திருவிழா முடிந்து செல்வச் சந்நிதி கோயில் திருவிழா ஆரம்பித்து விட்டது.
இரண்டும் முருகன் கோயில்தான். ஆனால் நல்லூர் முருகனுக்கு வரும் கூட்டம் சந்நிதி முருகனுக்கு வருவதில்லை.
இது ஏன் என்று கேட்டால் , நல்லுர் முருகன் பணக்காரர்களுக்கானது என்றும் சந்நிதி முருகன் சாதாரண ஏழை மக்களுக்கானது என்றும் சிலர் கூறுகிறார்கள்.
இன்னும் சிலர், நல்லூர் கோயிலில் பிராமணர்கள் பூசை செய்கின்றார்கள் என்றும் சந்நிதியில் பிராமணர் அல்லாதவர் பூசை செய்கின்றார் என்றும் கூறுகிறார்கள்.
வேறுசிலர் யாழ்ப்பாணத்தவர்களுக்கு வடமராட்சி மக்களை மட்டுமல்ல வடமராட்சி சந்நிதி முருகனையும்கூட பிடிப்பதில்லை என்று பிரதேசவாதம் பேசுகின்றனர்.
இவையெல்லாம் எந்தளவு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் நான் அறிந்தவரையில் இரண்டு முருகன்களும் இலங்கை ராணுவத்தால் பாதிக்கப்பட்டவர்களே.
அதனால்தான் சிலர் “தன்னையே காப்பாற்ற முடியாத கடவுள் கந்தன் தமிழ்மக்களை எப்படி காப்பாற்றுவார்? என்று பகுத்தறிவு கேள்வியை எழுப்புகின்றனர்.
கடவுள் கந்தனுக்கு இரண்டு மனைவிகள். ஆனால் பக்தர்கள் இரண்டு கலியாணம் செய்ய முடியாது. செய்தால் சட்டப்படி குற்றம்.
ஆனால் கந்தன் குறத்தியான வள்ளியை திருமணம் செய்து சாதி மறுப்பு காட்டியுள்ளார். எனவே பக்தர்கள் அவரைப் போன்று திருமணம் செய்யாவிட்டாலும் பரவாயில்லை, புத்தூரில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மயானத்தையாவது விட்டுக் கொடுக்க முன்வரலாம்.
ஆனால் கடவுள் கந்தன் கற்றுக் கொடுக்கும் முக்கிய விடயம் என்னவெனில் ஆயுதத்தின் மூலமே தீர்வு பெற முடியும் எனபதுதான்.
கடவுள் கந்தன் எப்போதும் கையில் வேலாயுதத்துடனே காட்சியளிக்கிறார்.
அவர் சூரனை அகிம்சை முறையில் தோற்கடிக்கவில்லை. மாறாக தனது வேலாயுத்தின் மூலமே வதம் செய்தார் என்று புராணம் கூறுகிறது.
எனவே கடவுள் கந்தன் காட்டிய வழியில் தமிழ் மக்களும் தீர்வு பெற வேண்டுமாயின் ஆயுதப் போராட்டமே ஒரே வழியாகும்.
சம்பந்தர் அய்யா ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களை பயங்கரவாதிகள் என்றார்.
அப்படியென்றால் அவர் தினமும் வணங்கும் கடவுள் கந்தனே முதல் பயங்கரவாதியாகும்.
அதுசரி ஒரு சந்தேகம், உயர்சாதியினரின் பெயர் கந்தசாமி என்றும் தாழ்த்தப்பட்ட சாதியினரின் பெயர் கந்தன் என்றும் இருப்பது ஏன்?
குறிப்பு- நான் இந்து மதம் பற்றி எழுதுவதாகவும் ஏன் மற்ற மதங்கள் பற்றி எழுதுவதில்லை என்றும் சிலர் கேட்கிறார்கள். அவர்களுக்கான பதில், நான் என் நோய்க்குதான் முதல் மருந்து சாப்பிட வேண்டும். அதன்பின்தான் மற்றவர்களின் நோய் குறித்து அக்கறை கொள்ள முடியும்.

No comments:

Post a Comment