விஜயகலா போட்ட புலிக்குண்டு
சம்பந்தரின் பதவியை பறிக்கப் போகிறதா?
சம்பந்தரின் பதவியை பறிக்கப் போகிறதா?
சம்பந்தர் அய்யா – என்ன தம்பி சுமந்திரன், அவசரமாக வந்திருக்கிறீர்?
சுமந்திரன் - உந்த விஜயகலா மேட்டர்தான் ஜயா. எங்கட கருத்து என்னவென்று கேட்கிறான்கள். நான் இப்ப தெரிவிக்க முடியாது என்று சமாளித்துப் போட்டன். ஆனால் அப்புறம் கேட்டால் என்ன கூறுவது?
சம்பந்தர் அய்யா- ஓ! அப்படியா? நான் ஒருக்கால் அந்த பிள்ளையோட பேச வேண்டும். ரெலிபோன் போட்டு தாரும்.
சம்பந்தர் அய்யா கேட்டபடி சுமந்திரன் அமைச்சர் விஜயகலாவுடன் தொலைபேசியில் தொடர்பு எற்படுத்திக் கொடுக்கிறார்.
சம்பந்தர் அய்யா- ஹலோ பிள்ளை கலாவே பேசுறது. நான் சம்பந்தர் பேசுறன்.
விஜயகலா- ஓமோம் ஜயா சொல்லுங்கோ. என்ன விசயம்?
சம்பந்தர் அய்யா- என்னம்மா இப்படி திடீரென்று பேசிவிட்டாய்? வழக்கமாக தேர்தல் நேரத்தில நாங்கதானே புலி புகழ் பாடுவம். நீ ஏனம்மா இப்படி பேசுறாய்?
விஜயகலா- அதென்னய்யா, நீங்கள் புலி பற்றி பேசினால் அமைதியாக இருக்காங்க. நான் பேசினா மட்டும் கொதிக்கிறாங்க?
சம்பந்தர் அய்யா- அதம்மா வந்து, நான் தேர்தலுக்கா பேசுறன் என்டு அவங்களுக்கு நன்றாய் தெரியும். அதால பேசமால் இருக்கிறாங்க.
விஜயகலா- நான் மட்டும் என்ன உண்மையில் புலிக்காகவா பேசுறன்? நானும் என்ர அரசியலுக்காகத்தானே பேசுறன். வித்யா கொலையாளிகளுக்கு உதவியதால என்ர பேர் நாறிக்கிடக்கு. அதால ஒரு ஸ்டன்ட் அடிச்சன். ஆனால் அவங்க உண்மை என்று நினைத்து பதவியைப் பறிக்க பார்க்கிறாங்க ஜயா.
சம்பந்தர் அய்யா- நீ ஏனம்மா இந்த வேலை பார்க்கிறாய்? உன்னிடம் பணம் இருக்கு. உனக்கு என்று கொஞ்ச வோட்டும் இருக்கு. பேசாமலே வரலாம்தானே? ஏன் எங்கட பிழைப்பில மண்ணை அள்ளிப் போடுகிறாய்?
விஜயகலா – என்ன ஜயா சொல்லுறியள்?
சம்பந்தர் அய்யா- பின்ன என்னம்மா? நீ பாட்டுக்குப் பேசிவிட்டுப் போய்விட்டாய். இப்ப “எங்கட கருத்து என்னவென்று உயிரை எடுக்கிறாங்கள்” என்று தம்பி சுமந்திரன் ரொம்ப கவலைப்படுகுது.
விஜயகலா – ஏன் ஜயா? ஒரு கருத்தை தைரியமாக சொல்ல வேண்டியதுதானே.
சம்பந்தர் அய்யா- எப்படியம்மா சொல்வது? தேர்தல் வரப்போகுது. புலிக்கு எதிரா கருத்து சொன்னால் மக்கள் வோட்டு கிடைக்காது. புலிக்கு ஆதரவாய் கருத்து சொன்னால் என்ர எதிர்க்கட்சி தலைவர் பதவியை பறிச்சுப் போடுவான்கள். உனக்கு தெரியும்தானே பதவி இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்டு.
விஜயகலா- அதுக்கு நான் என்ன செய்ய முடியும் ஜயா?
சம்பந்தர் அய்யா- நான் எல்லாத்தையும் சமாளிக்கப் பார்க்கிறன். நீர் கொஞ்ச நாளைக்கு பேசாமல் இரும் பிள்ளை.
விஜயகலாவுடன் பேசி முடித்தவுடன் சம்பந்தர் அய்யா சுமந்திரனிடம் கூறினார்
சம்பந்தர் அய்யா- தம்பி சுமந்திரன்! புலிகளை நாம் ஒருபோதும் ஆதரிக்கவில்லை என்று நீர் ஆங்கிலத்தில் பாராளுமன்றத்தில் பேசும். அதேநேரம் புலிகளை ஆதரிக்கிறோம் என்று தம்பி சிறீதரனை தமிழில் கிளிநொச்சியில் ஒரு கூட்டத்தில் பேசச் சொல்லும்.
சுமந்திரன் - வடமாகாண முதல்வரும் புலிகளை ஆதரித்து பேசுறார். அவரை எப்படி சமாளிப்பது?
சம்பந்தர் அய்யா- அவரை இந்தியாவுக்கு கூறி சமாளித்து கொள்ளலாம். “நல்லாட்சி அரசு துரோகம் செய்துவிட்டது. போராட்டம் வெடிக்கும்” என்று தம்பி மாவையை ஒரு அறிக்கை விடச் சொல்லும்.
சுமந்திரன் - சரி ஜயா. அப்படியே செய்யிறம்.
தனது பதவியை காப்பாற்றிய நிம்மதியுடன் அய்யா வழக்கமான தனது உறக்கத்திற்குச் சென்றார்.
குறிப்பு - யாவும் கற்பனை அல்ல
No comments:
Post a Comment